×

மும்பை அருகே பயங்கரம்; ஓடும் ரயிலில் உதவி எஸ்ஐ உட்பட 4 பேர் சுட்டுக்கொலை: ஆர்பிஎப் போலீஸ்காரர் வெறிச்செயல்

மும்பை: மும்பை அருகே ஓடும் ரயிலில் ஆர்.பி.எப் உதவி எஸ்ஐ மற்றும் 3 பயணிகளை ஆர்.பி.எப் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தப்பியோட முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செல்லும் ஜெய்ப்பூர்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அடுத்த ஒரு சில நிமிடத்தில் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. வைதர்ணா ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) போலீஸ்காரர் சேத்தன் சிங், பி5 பெட்டியில் இருந்த தனது மேலதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் டீக்காராம் மீனா(57) மீது சரமாரியாக சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து டீக்காராம் மீனா ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த மற்றொரு பயணியையும் சேத்தன் சிங் சுட்டுக் கொன்றார். அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் மற்ற பயணிகள் அதிர்ச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் டீக்காராம் மீனா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் அலறினர். அப்போது சேத்தன் சிங் அங்கிருந்து எந்த சலனமும் இல்லாமல் 5 பெட்டிகள் தாண்டி சமையல் பெட்டிக்கு சென்று அங்கு ஒருவரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு அங்கிருந்த 2 பெட்டிகள் தாண்டி எஸ் 6 பெட்டிக்கு சென்று அங்கும் பயணி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததால், அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் பீதியில் அங்கும் இங்கும் ஓடினர். இதற்கிடையே ரயில் தஹிசார் ரயில் நிலையத்தை நெருங்கியது, அப்போது, போலீஸ்காரர் சேத்தன் சிங் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி குதித்து தப்பி ஓடினார். ஆனால், மீரா ரோடு ரயில் நிலையத்தில் அவரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேரின் சடலங்களை ஆர்பிஎம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்ட பாஜ எம்எல்ஏ மனிஷா சவுத்ரி, ‘‘இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி காரணத்தை கண்டறிய வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது’’ என்றார்.

மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்ற பிறகு அங்கு வந்த பயணி அப்துல் காதர் (48) என்பவரை சுட்டுள்ளார். இவர் பால்கர் மாவட்டம் நாலாசோபாராவை சேர்ந்தவர். பின்னர், சமையல் பெட்டியில் இருந்த சதார் முகமத் ஹூசைனை சுட்டுக் கொன்றார். இதன்பிறகு எஸ் 6 பெட்டிக்குச் சென்ற அவர், அங்கிருந்த பீகார் மதுபானியைச் சேர்ந்த வளையல் வியாபாரி அஸ்கர் அப்பாஸ் ஷேக் (48) என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார்’’ என்றார். சேத்தன் சிங், உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசை சேர்ந்தவர். 12 ஆண்டுக்கும் மேலாக ஆர்பிஎப் போலீசாக பணி புரிந்துள்ளார். 12 நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டு, கடந்த 18ம் தேதிதான் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு ரயிலில் பாதுகாப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது. சேத்தன் சிங் தன்னிடம் இருந்த 12 ரவுண்டுகள் சுட்டுள்ளார், இதில் 2 ரவுண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதலில் ஏஎஸ்ஐ டீக்காராம் மீனாவை சுட்ட அவர், பின்னர் டீக்காராம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 10 ரவுண்டுகள் சுட்டுள்ளார் என போலீசார் கூறினர். ஓடும் ரயிலில் நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* அடிக்கடி டிரான்ஸ்பரால் ஏற்பட்ட மன அழுத்தம்: உறவினர் பேட்டி

சேத்தன் சிங்கின் மாமா பகவான் சிங் கூறுகையில், ‘‘சேத்தன் சிங்கின் தந்தை ஆர்பிஎப்-ல் பணியாற்றியவர். 2007ம் ஆண்டு அவர் இறந்தார். கருணை அடிப்படையில் சேத்தனுக்கு வேலை தரப்பட்டது. சேத்தன் ஆர்பிஎப் போலீசில் சேர்ந்தபோது, முதலில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு மும்பைக்கு அவரை மாற்றம் செய்தனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர், எனக்குபோன் செய்து பேசும்போது இதுகுறித்து கூறுவார். மேலும், அவருக்கும் அவரது உயரதிகாரியான ஏஎஸ்ஐ டீக்காராம் மீனாவுக்கும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது’’ என்றார். ஆனால், மும்பைக்கு இடமாறுதல் வேண்டும் என்று சேத்தன் சிங் விரும்பி டிரான்ஸ்பர் வாங்கி வந்ததாக ஆர்.பி.எப் வட்டாரங்கள் தெரிவித்தன. சேட்டன் சிங்கால் சுடப்பட்டு இறந்த ரயில்வே போலீஸ் உதவி எஸ்ஐ டீக்காராம் மீனா (57) குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ25 லட்சம் வழங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மும்பை அருகே பயங்கரம்; ஓடும் ரயிலில் உதவி எஸ்ஐ உட்பட 4 பேர் சுட்டுக்கொலை: ஆர்பிஎப் போலீஸ்காரர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,SI ,RPF ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!