×

விண்ணப்பம் பெறாத 23,311 பேருக்கு மீண்டும் டோக்கன் விநியோகம்

கிருஷ்ணகிரி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23,311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள், இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம், கடந்த 24ம் தேதி துவங்கி வருகிற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாக சென்று ரேஷன் ஊழியர்கள் நேரடியாக வழங்குகின்றனர். பொதுமக்கள் ரேஷன் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

குடும்பத்தலைவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 ரேஷன் கடைகளில் உள்ள 5,54,264 குடும்ப அட்டைதாரர்கள், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் வகையில், முதல் கட்டமாக 584 கடைகளில் உள்ள 2,98,164 நபர்களுக்கு (முதல் நாள் ஒவ்வொரு பதிவு மையத்திலும் 60 நபர்களும், இரண்டாவது நாள் முதல் 80 நபர்கள் வீதம்) தேதி குறிப்பிட்டுள்ள விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு 2,74,853 நபர்களுக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 823 விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் மூலம் கடந்த 28ம் தேதி வரை 2,04,423 நபர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த 24ம் தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்ட போது, வீடு பூட்டி இருப்பதாலும், வெளியூர் சென்றுவிட்டதாலும் ஒப்புதல் ரசீத மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23,311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் வழங்கப்படும்.

மேற்கண்ட உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாதவர்கள் அனைவரும், வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 510 ரேஷன் கடைகளில் உள்ள 2,66,460 குடும்ப அட்டைதாரர்களுக்கு, வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டு, 774 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள், ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post விண்ணப்பம் பெறாத 23,311 பேருக்கு மீண்டும் டோக்கன் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்