×

இந்த வார விசேஷங்கள்

ஆடிமாத வளர்பிறை ஏகாதசி
29.7.2023 – சனி

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘‘தயினி’’ ஏகாதசி ஸ்திர வாரமான சனிக்கிழமை, புதனுக்குரிய கேட்டை நட்சத்திரத்தில் அமைந்திருக்கிறது. நாளும் நட்சத்திரமும் பெருமாளுக்கு உரியது அல்லவா. இந்த விரதத்தால் இஷ்ட நற்சக்திகள் கிடைக்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்கும். துவாதசியன்று ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

உடல்நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி தீர்த்தநீரை அருந்தி விரதம் இருக்கலாம். அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணுபுராணம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. அடுத்த நாள் துவாதசி பாரணை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இன்று பாராயணம் செய்ய வேண்டிய பாசுரம்.

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் –
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் –
ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால் –
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே

கலிய நாயனார் குருபூஜை
29.7.2023 – சனி

சென்னையில் உள்ள திருவொற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர். செல்வந்தர். சிவனின் மீது பக்திகொண்டவர். திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் விளக்கேற்றும் சிவத் தொண்டினை இவர் செய்து வந்தார். ஊழ்வினையால் இவரது செல்வங்கள் யாவும் கரைந்துபோனது. ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடாமல் செய்தார். கூலிக்கு வேலைசெய்து வரும் வருவாய்கொண்டு திருவிளக்கேற்றினார். அதிலும் கஷ்டம் ஏற்பட்டது. தன் வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்களை விற்று விளக்கேற்றிவந்தார்.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போக தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. திருக்கோயிலுக்குச் சென்றார். ‘‘இறைவா, இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால், நான் என் உயிரையே மாய்த்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியதோடு நில்லாமல், நீண்டதொரு அரிவாளை எடுத்து அங்கத்தை அரிந்து, தன் உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தைப் பிடித்து தடுத்தாட்கொண்டார்.

கோயிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின, கோயில் முழுக்க சிவபெருமானின் பேரொளி படர்ந்தது, சிவனைக் கண்டதும் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து சிவபெருமானை வணங்கினார் கலியநாயனார். அவருடைய குருபூஜை நாள் இன்று.

கோட்புலி நாயனார் குருபூஜை
29.7.2023 – சனி

கோட்புலியர் என்றும், கோட்புலி நாயனார் என்றும் அழைக்கப்படும் கோட்புலி நாயனார், 63 நாயன்மார்களின் பட்டியலில் ஐம்பத்தேழாவது நாயனாராகக் கணக்கிடப்படுகிறார்.
இவர் சுந்தரரின் (8-ஆம் நூற்றாண்டு) சமகாலத்தவராக விவரிக்கப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டம், நாட்டியத்தான் குடியில் (நாட்டியாட்டாங்குடி) பிறந்தார். வேளாளர். சிவபெருமானின் சிறந்த பக்தர்.

சோழர்களின் படைத் தளபதியாக இருந்தார். பல ஆண்டுகளாக, சிவன் கோயில்களில் நிவேதனத்துக்காக அரிசியைத் தானம் செய்ய தனது செல்வத்தைப் பயன்படுத்தினார். அவர் அரசு வேலையாக வெளியூர் செல்லும்போது தனது வீட்டில் அரிசி மூட்டைகளைச் சேமித்து வைத்தார். அவர் இல்லாத நேரத்தில் நைவேத்தியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று தனது உறவினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தினார். அப்போது நாட்டியத்தான் குடியில் பஞ்சம் ஏற்பட்டது.

கோட்புலியின் குடும்பத்தினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிவனுடைய பூஜைக்கான தானியங்களை எடுத்து உட்கொண்டனர். போர் முடிந்து கோட்புலி திரும்பினார். அவர் தனது உறவினர்களின் செயல்களை அறிந்து அவர்களை கடுமையாகத் தண்டித்தார்.

குலவுபுகழ் நாட்டியத்தான் குடிவே ளாளர்
கோட்புலியார் குவித்துயர்த்த செந்நெற் கூடு
நிலவணிவார்க் கமைத்தாணை நிறுத்தி யொன்னார்
நேர்மலைவார் திருவாணை நினை
யா தேநெற்
சிலமிடியா லழித்தபடி யறிந்து வாளாற்
சேர்ந்தபெருங் கிளைஞருடல் சிதற வீசி
யிலகுமொரு குழவியையு மெறிந்து நாத
னெண்ணரிய கருணைநிழ லெய்தினாரே.
என்பது அவர் செயலை விவரிக்கும் பாடல்.

அவரது தீவிர பக்தியின் உக்கிரத்தை சிவபெருமான், தோன்றி தடுத்தார். பேரருள் காட்சியும், பேரின்ப வாழ்வும் அளித்தார். நாட்டியாத் தான் குடியில் வழிபட்ட சிவனைப் பற்றிய பாடலில், சுந்தரர் கடைசிப் பாடலை கோட்புலிக்கு அர்ப்பணித்தார். அவர் குரு பூஜை நாள் இன்று.

மஹாபிரதோஷம், சங்கரன்கோவில் தேர்
30.7.2023 – ஞாயிறு

ஒவ்வொரு மாதமும் இருமுறை வரும் திரயோதசி திதி அன்று, பிரதோஷ காலத்தில் சிவவழிபாடு செய்ய வேண்டும். திரயோதசி தினமே பிரதோஷ தினமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ தினமும் தனித்துவம் வாய்ந்தவை. இன்று வேறு சிறப்பும் உண்டு. பிரசித்தி பெற்ற சங்கரன் கோயிலில் ஆடித் தபசு விழாவில் இன்று தேர்த்திருவிழா. தமிழக சிவத் தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயில் இது. சங்கரன் கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி தந்த ஆடித்தபசு விழாவின் தேர்த்விழா இன்று நடைபெற உள்ளது.

சித்திரை மாதம் நடைபெறும் தேர் விழாவைப் போலவே இந்த விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பர். சங்கரன்கோவில் பாம்புகள் [சங்கன், பதுமன்] வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். சரும நோய்கள் நீங்கும். மேலும், வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத்தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.

ஆடி கள்ளழகர் தேர் பட்டினத்தார் குருபூஜை
1.8.2023 – செவ்வாய்

இன்றைக்கு இரண்டு விசேஷம். மதுரை அருகே உள்ள அழகர்கோயிலில் கள்ளழகர் கோயிலில் நடைபெறும். திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும். ஆடி பிரம்மோற்சவ விழாவில் இன்று திருத்தேர். இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர், காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம்பிடித்தல், இரவு புஷ்பப் பல்லக்கு, 2-ஆம் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ஆம் தேதி உற்சவ சாந்தி நடக் கிறது. அதைத் தொடர்ந்து 16-ஆம் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடிப் பெருந்திருவிழா முடிவடையும்.

சென்னையில் வட பகுதியான திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பல மகான்கள் ஜீவ சமாதி கொண்டுள்ளனர். அப்படி திருவொற்றியூரில் ஐக்கியமாகி இருக்கும் சித்தர்களில் ஒருவர் பட்டினத்தார். இவரது வாழ்க்கையே சித்தர்களின் வாழ்க்கையை நமக்கு உணர வைப்பது போன்று உள்ளது. இவரது பூர்வீகம் சிலப்பதிகார ஊரான காவிரிப் பூம்பட்டினம். தற்போது பூம்புகார் என்று அழைக்கப்படும் அந்த ஊரில் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் செல்வச் செழிப்புமிக்க வணிகராக வாழ்ந்து வந்தார், திருவெண்காடர். திருவெண்காடருக்கு சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தனர்.

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால், வருத்தமடைந்த திருவெண்காடர் – சிவகலை தம்பதி, பின்னர் திருவிடைமருதூருக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர். அவர்கள் தெய்வ பக்தியை அறிந்த சிவபெருமான், அவர்களுக்கு அருள் பாலிக்க முடிவு செய்தார். அந்த ஊரில் சிவசருமர் என்று ஒருவர் கடுமையான வறுமையில் வாழ்ந்தார்.

தாம் ஒரு குழந்தையாகத் தோன்றுவதாகவும், அந்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்திருக்கும் திருவெண் காடரிடம் கொடுத்து பரிசு பெற்றுக்கொள்ளவும் என்று அசரீரியாகக் கூறினார். அப்படியே நடந்தது. மருதவாணனை சீரும், சிறப்புமாக வளர்த்துவந்தார். அரசனுக்கே கடன் தரும் சீமானான அவர் தனது மகனை வணிகத்தில் ஈடுபடுத்தினார். வெளிநாடுகளுக்குக் கப்பலில் சென்று வியாபாரம் செய்வதையும் கற்றுக்கொடுத்தார்.

அப்படி ஒரு தடவை வியாபாரம் செய்வதற்காக கப்பலில் மருதவாணன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வரும் நாளில் கப்பல் நிறைய பொன், பொருட்களுடன் வருவான் என்று திருவெண்காடர் நினைத்தார். ஆனால், வந்திறங்கிய மூட்டைகள் அனைத்திலும் தவிடும், வறட்டியும்தான் இருந்தது. திருவெண்காடர் அடைந்த கோபத்துக்கு அளவே இல்லை.
மகனோடு சண்டை போட கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். வீட்டில் மருதவாணன் இல்லை. சிறிய பெட்டி மட்டுமே இருந்தது. அந்த பெட்டிக்குள் ஒரு பனை ஓலை இருந்தது.

அந்த பனை ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டு இருந்தது. அதிர்ந்தார். அவருக்குப் பல உண்மைகள் விளங்கின. ஒரு சொல் பல மாற்றங்களைச் செய்தது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து, சுகம் அனைத்தையும் அவர் உதறித் தள்ளினார். தனது ஆடம்பர மாளிகையை விட்டு வெளியேறினார். துறவியாகவும் மாறினார். திருவெண்காடர் பட்டினத்தார் ஆனார். பல பாடல்களை இயற்றினார்.

தமிழகம் முழுவதும் தலயாத்திரை செய்தார். திருவொற்றியூர் தலத்துக்கு வந்த போதுதான் அவருக்கு பேய்க் கரும்பு இனித்தது. திருவொற்றியூரில் ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார். திருவொற்றியூர் கடற்கரையில் அடிக்கடி அவர் குழந்தைகளுடன் விளையாடுவார். தன்னை மணலுக்குள் புதைக்க செய்து சிறுவர்களை மகிழ்விப்பார். ஒருநாள் அப்படி அவர் மணலுக்குள் புதைந்தபோது வெகு நேரமாக அவர் எழுந்து வரவில்லை.

அவரை மூடி வைத்த இடத்தில் குழந்தைகள் தேடிய போது அங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தது. அதன் பிறகே பட்டினத்தார் முக்தி பெற்றதை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். அவர் மறைந்த இடத்திலேயே ஜீவசமாதி அமைக்கப்பட்டது. இவரது குருபூஜை (ஆடி உத்திராடம்) தினத்தில் பட்டினத்தாரின் ஜீவசமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசிமாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

மற்ற விசேஷங்கள்

2.8.2023 – புதன் – திருவோண விரதம்
4.8.2023 – வெள்ளி – ஆடிவெள்ளி, சங்கடஹர சதுர்த்தி.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Aadimatha Varapirai Ekadasi ,Aadimata Varapirai Ekadasi “Taini” Ekadasi ,
× RELATED தாயின் உயர் தகுதி