×

கடற்கரை கனிமங்கள் பொதுத்துறைக்கு ஒதுக்கீடு: லித்தியம் உட்பட 5 கனிமங்கள் எடுக்க தனியாருக்கு அனுமதி: தங்கம், பிளாட்டினம், வைரம் எடுக்கவும் உரிமம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடற்கரை கனிமங்களை எடுக்கும் அதிகாரம் பொதுத்துறைக்கு வழங்கவும், தங்கம், பிளாட்டினம், வைரம் எடுக்கும் ஏலம் மற்றும் லித்தியம் உள்ளிட்ட 6 அணுக்கனிமங்களை எடுக்கும் அனுமதியை தனியாருக்கு வழங்கவும் அதிகாரம் அளிக்கும் சுரங்கம் மற்றும் கனிமவள மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது.சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு, ஒழுங்குமுறை திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே தாக்கல் செய்தார்.

இதில் லித்தியம் உள்ளிட்ட 6 அணுக் கனிமங்களையும், தங்கம், வெள்ளி போன்ற ஆழமான கனிமங்களையும் சுரங்கம் செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது அனைத்து 12 அணு கனிமங்களும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் சுரங்கம் மற்றும் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்த மசோதா மூலம் இனிமேல் அணு தாதுக்களான லித்தியம் (மின்சார வாகனங்களில் பேட்டரிகள் மற்றும் பிற ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது), பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம், சிர்கோனியம் ஆகிய 6 அணு கனிமங்களை எடுக்கும் அதிகாரம் தனியாருக்கும் ஏலம் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த மசோதாவில் சில முக்கியமான கனிமங்களுக்கான சுரங்க குத்தகை மற்றும் கலப்பு உரிமத்தை பிரத்தியேகமாக ஏலம் விட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், நிக்கல், கோபால்ட், பிளாட்டினம் தாதுக்கள், வைரங்கள் போன்றவை ஆழத்தில் கிடைக்கும். இந்த தாதுக்கள் அதிக விலை உயர்ந்தவை. இதனால் மொத்த கனிம உற்பத்தியில் இந்த தாதுக்களின் பங்கு தற்போது குறைவாகவே உள்ளது. நாடு பெரும்பாலும் இந்த கனிமங்களின் இறக்குமதியை சார்ந்துள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதா மூலம் ஆழமான தாதுக்களின் ஆய்வு உரிமம் தனியாருக்கு ஏலம் மூலம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை கலப்பு உரிமம், சுரங்க உரிமம் என்று 2 வகையான உரிமங்களை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது.

இனிமேல் வெளிப்படையான ஏல வழி மூலம் ஆய்வு உரிமம் வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ அணு கனிமங்கள் விண்வெளி ஆய்வு, மின்னணுவியல், தகவல் தொடர்பு, எரிசக்தித் துறை, மின்சார பேட்டரிகள் ஆகியவற்றில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இவை நமது நாட்டின் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த தாதுக்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவுடன், இந்த கனிமங்களை ஆய்வுக்கான ஏலம் விடப்படும்.

இதன் மூலம் நமது நாட்டில் சுரங்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26க்குள் அனல் நிலக்கரி இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிடுவோம் என்று நினைக்கிறோம். கடற்கரை மணல் கனிமங்களை அகழ்வது பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். கடற்கரை மணல் தாதுக்களில் இல்மனைட், ரூட்டில், லுகோக்சின், கார்னெட், மோனாசைட், சிர்கான் மற்றும் சில்லிமனைட் ஆகியவை அடங்கும்’ என்றார். பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

The post கடற்கரை கனிமங்கள் பொதுத்துறைக்கு ஒதுக்கீடு: லித்தியம் உட்பட 5 கனிமங்கள் எடுக்க தனியாருக்கு அனுமதி: தங்கம், பிளாட்டினம், வைரம் எடுக்கவும் உரிமம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...