×

ஆடி வெள்ளிக்கிழமை: குல தெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து செல்வமும் தேடி வரும்..!!

ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பிற கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கு முன்பாக நம்முடைய குல தெய்வத்தை வணங்குவது அவசியமாகும்.

ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன் என்பதுதான். எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எல்லா வெள்ளிக்கிழமையும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது தான் என்றாலும் ஆடி வெள்ளி குலதெய்வத்திற்கு மிகவும் ஏற்றது.

ஆடியில் சக்தி அதிகம்

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புற்றுள்ள அம்மன் கோவில்

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

குல தெய்வ வழிபாடு

ஆண்டுக்கு ஒருமுறையாவது அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். பலரும் ஆடி மாதத்தில், தங்களின் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். ஆடி வெள்ளி அன்று நாம் வழிபாடு செய்யும் தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். பொதுவாக, ஆடி மாத அமாவாசை அன்று தான் குழந்தைகள் பலரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

வீட்டிலேயே வழிபாடு

குல தெய்வ வழிபாடு என்பது நம்முடைய குலத்தை காக்கக் கூடியது. குலதெய்வம் வேறு ஊரில் இருந்தாலும் கவலை வேண்டாம் நம்முடைய வீட்டிலேயே குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் புகைப்படம் இருப்பவர்கள், புகைப்படத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து தங்களுக்கு பிடித்த மலர்களின் மாலையை சாற்றலாம். புகைப்படம் இல்லாதவர்கள், தனியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபடலாம்.

சர்க்கரைப்பொங்கல்

உங்கள் குல தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கலை படைப்பது மிக மிக விசேஷமானது. சர்க்கரை பொங்கல், வெற்றிலைப் பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே கூட போதுமானது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடிப்பது சிறந்தது. குலதெய்வத்துக்கான சுலோகம் தெரியாதவர்கள் பொதுவான அம்மன் பாடல்களை ஒலிக்கச் செய்யலாம். கற்பூரம், ஊதுபத்தி காண்பித்து சாம்பிராணி போட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்

குல தெய்வத்திற்கு காணிக்கை

ஒரு ரூபாயை மஞ்சள் துண்டில் காணிக்கையாக முடிந்து வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், குல தெய்வ கோவிலுக்கு போகும் போது அதை மறக்காமல் கொண்டு போய் உண்டியலில் செலுத்த வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை குல தெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து வளங்களும் சேரும். தொழில் மேன்மை அடையும் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், குடும்பம் முன்னேற்றமும் அடையும்.

The post ஆடி வெள்ளிக்கிழமை: குல தெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து செல்வமும் தேடி வரும்..!! appeared first on Dinakaran.

Tags : Audi ,Dimithi Festival ,Therthiruvizha ,
× RELATED தேவாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா