×

அசுரரை அழித்த அம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பங்களாதேஷில் உள்ள போக்ரா புகை வண்டி நிலையத்திலிருந்து சுமார் இருபது மைல் தொலைவில் அழகிய பவானிபூர் அருகே கரதோயா என்ற நதி ஓடுகிறது. இந்நதிக்கரையில், `பூதாத்திரி’ என்ற பெயரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குதான் ‘கரதோயா பீடேஸ்வரி’ எனப்படும், பத்ரகாளி அருவமாகக் காட்சியளிக்கிறாள். இந்த அன்னையின் திருநாமம் அபர்ணா ஆகும். அன்னைக்கு இங்கு உருவமில்லை. அருவமான லிங்கத் திருமேனியில் இருந்து அருளாட்சிபுரியும், அந்த அன்னையை அங்குள்ளோர் ‘பத்ரகாளியாக’ பாவித்து தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். அம்பிகையின் ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கே, அன்னையின் இடது கன்னம் வீழ்ந்ததால், இது மகாசக்தி பீடமாகியது. ஒரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரண்டு கொடிய அசுரர்கள் போர் வெறி கொண்டு நாடெங்கிலும் உள்ள பற்பல ராஜ்ஜியங்களைக் கைப்பற்றிச் சூறையாடினர். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் அவர்களின் வெறியாட்டம் ஓயாமல் கொடி கட்டிப் பறந்தது. தேவலோகத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. தேவர்கள் அனைவரையும் அடித்துத் துரத்திவிட்டு, அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளையடித்தனர். தேவர்கள், இந்தக் கொடிய அசுரர்களால் காடுகளிலும், நதிகளிலும், மலைக்குகைகளிலும், புதர்களிலும் பதுங்கிய வண்ணம் அச்சத்துடன் வாழ்ந்தனர்.

தேவலோகத்தை அசுரர்கள் பல காலம் கொடுங்கோல் ஆட்சி புரிந்தனர். ஒரு சமயம், அசுரர் கண்களில் படாமல் தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, தங்களது குருவான பிரகஸ்பதியிடம் சென்று தங்கள் துன்பத்தை எடுத்துரைத்தனர். அவரது அறிவுரைப்படி, தங்கள் இன்னல்களைத் தீர்க்க தேவர்கள் அனைவரும் கயிலாயத்தை அடைந்து, அங்கு மகாதேவியாக விளங்கும் ஆதிபராசக்தியை மனமுருக தியானித்து, அவளது பீஜாக்ஷார மந்திரத்தை பக்தியோடு ஜெபித்தனர். இப்படியாக, நாட்கள் சென்றன.

இறுதியில், தேவர்கள் முன் அன்னை அகிலாண்டேஸ்வரி சிம்ம வாகனத்தில் தோன்றி தரிசனம் தந்தாள். கோடி சூரியப் பிரகாசத்தோடு காட்சி தந்த அன்னையின் திவ்விய தரிசனம் கண்டு, தேவர்கள் மகிழ்ந்தனர். அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே குரலில், ‘‘தாயே, அகிலாண்டேஸ்வரி, ஜகன்மாதா, தங்களது திவ்விய தரிசனத்தால், நாங்கள் மிகுந்த பாக்கியசாலிகளானோம் எங்கள் துன்பத்தைத் தாங்கள் அறிவீர்கள்.

சும்ப, நிசும்ப அரக்கர்களின் தொல்லையால் நாங்கள் கடுந்துயரத்தில் உள்ளோம். தாயே! எங்கள் குறைதீர்த்து எங்களைக் காத்தருள வேண்டும். உம் திருவடிகளையே சரணம் அடைகிறோம் தாயே!’’ என்று வணங்கி மனமுருகப் பிரார்த்தித்தனர்.தேவர்களின் துயர் துடைக்க அன்னை பராசக்தி, உடனே தன் தேகத்திலிருந்து ஒரு சக்தி வடிவத்தைத் தோற்றுவித்தாள். பார்வதி தேவியின் தேகத்திலிருந்து தோன்றியதால் அவள், ‘கௌசிகை’ எனப்பட்டாள்.

கன்னங்கரிய கருமை நிறத்தோடு மகா கோர சொரூபமாக அவள் இருந்ததால், ‘‘பத்ரகாளி’ என்றும், அசுரர்களுக்குப் பெரும் பயம் விளைவிக்கிறவளாக இருந்ததால் ‘காளராத்திரி’ என்று பெயர் பெற்றாள்.இவள், அசுரர்களான சும்ப – நிசும்பர்களோடு போரிடச் செல்வதற்கு முன், தேவர்களிடமிருந்த மகா சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு, அந்தந்த தேவர்களின் வாகனத்தின் மீது ஏறி ‘பத்ரகாளிக்கு பக்கத் துணையாக வந்து சூழ்ந்த கொண்டனர்.

படைக்கும் கடவுளான பிரம்ம தேவனின் பிரம்ம சக்தியானவள், அன்னவாகனத்தின் மேல் ஏறிக் கொண்டு ஜெபமாலை, கமண்டலம் முதலியவற்றைத் தரித்தவளாக ‘‘பிராம்மணி’’ என்ற திருநாமம் கொண்டு வந்தாள். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு விடமுள்ள சக்தியானவள், கருட வாகனத்தின் மேல் ஏறிக் கொண்டு சங்கு, சக்கர, கதாயுத பாணியாக ‘‘வைஷ்ணவி’’ என்ற திருநாமத்துடன் வந்தாள். அழிக்கும் கடவுளான ருத்திரனின் சக்தியானவள் வெண்மை நிறம் கொண்ட காளை மாட்டின் மேலேறி, திரிசூலம் ஏந்தி, பிறைச்சந்திரனைத் தரித்து சர்ப்ப கங்கணத்துடன் ‘‘மாகேஸ்வரி’’ என்ற திருநாமத்துடன் வந்தாள். திருமுருகப் பெருமானான வேல் முருகனிடமுள்ள குமார சக்தியானவள் அழகிய வண்ணம் கொண்ட மயில் வாகனத்தின் மேலேறி, சக்தி ஆயுதத்துடன் ‘‘கௌமாரி’’ என்ற திருநாமம் தாங்கி வந்தாள்.

தேவர்களின் தலைவனான இந்திரனிடமுள்ள சக்தியானவள் ஐராவதமென்னும் வெள்ளை யானையின் மீதேறி, வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி, சர்வ ஆபரணங்களையும் அணிந்து ‘‘ஐந்திரி’’ என்னும் திருநாமம் பூண்டு வந்தாள். வராக மூர்த்தியிடமிருந்து வராக சக்தியானவள் வராக ரூபத்தில் ‘‘வாராஹி’’ என்ற பெயருடன் வந்தாள். தர்மப் பிரபுவான யமனின் சக்தியானவள் கரிய எருமை மாட்டின் மீது ஏறி, கையில் தண்டாயுதம் ஏந்தி கோரவடிவமாக ‘‘யாமி’’ என்ற பெயருடன் வந்தாள்.

நிருதியின் சக்தியானவள் சிம்ம உருவத்தோடு ‘‘நரசிம்ம’’ என்னும் திருநாமம் கொண்டு வந்தாள். வருண தேவனின் சக்தியானவள் ‘‘வாருணி’’ என்ற திருநாமம் கொண்டு வந்தாள். குபேரனின் சக்தியானவள் ‘‘கௌபேரி’’ என்ற திருநாமம் கொண்டு இறுதியாக வந்தாள்.இப்படி வரிசையாக வந்த தேவிகள் பத்து பேரும், பத்ர காளியின் இருபுறங்களிலும் அணி வகுத்து நின்று, அசுரர்களுடன் நடந்த போரில் தங்கள் பங்குக்கு உதவி செய்து, அன்னை பத்ரகாளி வெற்றி பெற உதவினர்.

இவ்வாறு தங்களது (பெண்களால்தான் மரணம் சம்பவிக்க வேண்டும் என்று கோரியபடி) வர மகிமையால் சும்பன், நிசும்பன் உட்பட ஏனைய அசுரர்கள் யாவரும் பெண்களால் வதம் செய்யப்பட்டு மடிந்தனர். அசுரர்கள் ஒழிந்ததால் எங்கும் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்பட்டது. முடிவில் தேவர்கள் அனைவரும் பத்ரகாளியைப் பலவாறு துதித்து போற்றி, வழிபட்டுத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.இப்படி அன்னை பத்ரகாளிக்கு பத்துதேவிகள் உதவியதை ‘தேவிபாகவதம்’ என்ற புராணம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post அசுரரை அழித்த அம்பிகை appeared first on Dinakaran.

Tags : Ambika ,Bhavanipur ,Bogra steam station ,Bangladesh… ,Ambikai ,Dinakaran ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி