×

மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் 2 நாளில் 718 பேர் அகதிகளாக ஊடுருவல்: ஆயுதங்கள், வெடிமருந்துகள் குறித்து விசாரணை

இம்பால்: மணிப்பூர் பதற்றத்திற்கு மத்தியில் மியான்மரில் இருந்து மணிப்பூரின் எல்லையோர கிராமங்களின் வழியாக கடந்த 2 நாளில் 718 பேர் அகதிகளாக ஊடுருவியதாக அதிகாரிகள் கூறினர். மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் இன வன்முறைக்கு மத்தியில், தற்போது அசாம், மிசோரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2 நாட்களில் அண்டை நாடான மியான்மரில் இருந்து 718 மியான்மர் பிரஜைகள் உரிய சட்ட ஆவணங்கள் ஏதுமின்றி இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் நாட்டவர்கள், அங்கிருந்து ஏதேனும் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொண்டு வந்தனரா? என்பது குறித்து அசாம் ரைப்பிள்ஸ், மாநில காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், ‘மியான்மர் – மணிப்பூர் எல்லையோர கிராமங்களில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மியான்மரை சேர்ந்த 718 பேர் அகதிகளாக இந்திய-மியான்மர் எல்லையைத் தாண்டி சந்தேல் மாவட்டம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தனர்.

இந்த தகவலை அசாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களிடம் முறையான விசா அல்லது பயண ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுமா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக அசாம் ரைபிள்ஸிடம் இருந்து விரிவான அறிக்கையை மணிப்பூர் காவல் துறை கேட்டுள்ளது’ என்றார்.

7வது குற்றவாளி கைது
மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், இரண்டு பெண்களை கும்பல் ஒன்று நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தவுபால் மாவட்டத்தை சேர்ந்த ஏழாவது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் 2 நாளில் 718 பேர் அகதிகளாக ஊடுருவல்: ஆயுதங்கள், வெடிமருந்துகள் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...