×

குரு பார்க்க கோடி நன்மை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வெளியில் நல்ல மழை. ஆஸ்ரமத்தின் உள்ளே உமாபதி சிவாச்சாரியார் தன்னை மறந்து பூஜையில் இருந்தார். சமையல் அறையில், தபசுப் பிள்ளை குறுக்கும் நெடுக்குமாக, பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார். காரணம் இல்லாமல் இல்லை. பல ஆண்டுகளாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும், உமாபதி சிவாச்சாரியாருக்கும், நாள் தவறாமல் விறகுகளை அளித்து தொண்டு செய்துகொண்டிருந்தார் பொற்றான் சாம்பன், என்றும் பக்தர்.

அந்த பொற்றான் சாம்பன் பல நேரமாகியும் வரவில்லை. அதுவே அவரது பரபரப்புக்குக் காரணம். சுவாமிகளும் எப்போது வேண்டுமானாலும் பூஜையை முடித்துவிட்டு, நைவேத்தியம் எங்கே என்று கேட்கலாம். ஆகவே பதற்றத்தில் இருந்தார் அவர்.தனது ஏழ்மையான நிலையிலும், விறகு களைத் தவறாமல், கோயிலுக்கும் உமாபதி சிவாச்சாரியார் மடத்துக்ககும் தந்து கொண்டு இருந்தார். இதில் அதிசயம் என்னவென்றால், பொன்னம்பல வாணனே, பொற்றான் சாம்பன் கனவில் தோன்றி, சிதம்பரம் நடராஜர்கோயிலுக்கு, விறகுகள் தந்து தொண்டுபுரியும் படி ஆணை பிறப்பித்து இருந்தார் என்பதுதான்.

அந்த வார்த்தையைச் சிரமேற்கொண்டு, தில்லை நடராஜர் கோயில் மடப்பள்ளிக்கு இவர் விறகுகளை தரும் வேளையில், அந்த ஈசன் ஒரு சன்யாசியின் வேடத்தில் வந்து இவர் முன் தோன்றினார். சன்யாசி வேடத்தில் வந்த ஈசன், “கோயிலுக்கு விறகுகள் தந்து கைங்கர்யம் செய்வது போலவே, உமாபதி சிவாச்சாரியார் மடத்துக்கும் தரவேண்டும்’’ என்று ஆணை பிறப்பித்தார். அது முதல், தவறாமல் அந்த தொண்டை செய்துவந்தார் பொற்றான் சாம்பன்.

ஆனால், இன்று கடும் மழை காரணமாக விறகு கிடைக்கவில்லை. ஆகவே, விறகுகள் தேடி பல இடங்களில் அலைந்தார் பொற்றான் சாம்பன். இறுதியாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் உலர்ந்த விறகுகள் கிடைத்து. அதை எடுத்துக்கொண்டு, கோயிலுக்கும், மடத்துக்கும் ஓடினார். கோயிலில் விறகை ஒப்படைத்துவிட்டு, மடத்துக்கு விறகைக் கொண்டு வந்தார். அவரிடம் இருந்து மடத்து நிர்வாகி தபசுப் பிள்ளை, விறகுகளை வாங்கிக் கொண்டார்.

‘‘என்ன பொற்றான் சாம்பா! இன்றைக்கு இவ்வளவு தாமதம். சுவாமிகள் பூஜையை முடித்துவிட்டார். நெய்வேத்தியத்திற்குத்தான் காத்திருக்கிறார்’’ இவ்வளவு நேரம் ஆகியும் விறகு வரவில்லையே என்று பதறிப் போன தபசுப் பிள்ளை, அவரை நொந்துகொண்டார்.‘‘மன்னிக்க வேண்டும் சுவாமி! பலத்த மழை. எங்கும் உலர்ந்த விறகுகளே கிடைக்கவில்லை.’’ பணிவாகச் சொன்னார் பொற்றான் சாம்பன்.

‘‘சரி நாளை இந்த தாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்’’ என்றபடி சாம்பனுக்கு விடை கொடுத்தார், தபசுப் பிள்ளை. வேகவேகமாக அடுப்பு மூட்டி, அன்னம் வேக வைத்து, பூஜைக்காகக் கொண்டு வந்து வைத்தார். வெறும் அன்னம் மட்டுமே இருப்பதைக் கண்டு உமாபதி சிவாச்சாரியார், ‘‘மற்ற பதார்த்தங்கள் எதுவும் இல்லையா?’’ என்று கேட்டார். தயங்கியபடியே, சாம்பன் என்ற பக்தர் பல ஆண்டுகளாக விறகு தந்து தொண்டு புரிவதையும், இன்று பலத்த மழை காரணமாக, போதுமான அளவு உலர்ந்த விறகுகள் கிடைக்காததால், சாம்பன் கிடைத்த விறகுகளோடு தாமதமாக வந்ததையும், போதுமான விறகுகள் இல்லாததால் அன்னம் மட்டுமே சமைக்க முடிந்ததையும் சொல்லி முடித்தார் தபசுப்பிள்ளை.

அவர் சொன்னதைக் கேட்டு புன்னகை பூத்த சிவாச்சாரியார், ‘‘நாளை அந்த சாம்பனை வந்து என்னை பார்க்கச் சொல்’’ என்று கருணை பொங்க சொல்லிவிட்டு பூஜையைக் கவனிக்க ஆரம்பித்தார். மறுநாள் சாம்பனும், வழக்கம் போல நடராஜர் கோயிலில், விறகுகள் கொடுத்துவிட்டு, திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஒரு சன்யாசி அவரைத் தடுத்தார்.

முன்பு, ‘‘உமாபதி சிவாச்சாரியார் மடத்துக்கும், விறகு தந்து தொண்டுபுரி’’ என்று சொன்ன அதே சன்யாசிதான். மீண்டும் சாம்பனுக்கு அருள்புரிவதற்காக அவர் முன்னே தோன்றினார். சாம்பனும் அவரை வணங்கினார். அவருக்கு ஆசி வழங்கிய சன்யாசி பேசத் தொடங்கினார்.‘‘இவ்வளவு காலம் கோயிலுக்கும், ஆசாரியர் உமாபதி சிவத்திற்கும் சேவைகள் செய்திருக்கிறாய். நீ வேண்டும் வரம் யாது?’’ என்று அந்த சன்யாசி அருள் பொங்க கேட்டார்.

‘‘சிவனடியார் அவர்களே! இந்த உலகத்தில் அனைத்துமே அழியக் கூடிய ஒன்றுதான். நான் எந்த வரத்தை கேட்டுப் பெற்றாலும், அதுவும் முடிவில் அழியத்தான் வேண்டும்? என்றும் அழியாத இன்பம் வழங்குவது இறைவன் திருவடி மட்டும்தான். ஆகவே, நான் வேண்டுவது எல்லாம் முக்திப் பேறு மட்டும்தான்’’ என பணிவாக, அதே சமயம் ஆழ்ந்த ஞானத்தோடு வரம் கேட்டார் சாம்பன்.

‘‘உனது பக்குவநிலையை நான் பாராட்டுகிறேன்’’ என்று சாம்பனை மெச்சிய சாது, அவர் கையில் ஒரு ஓலையை கொடுத்தார். பிறகு தொடர்ந்தார், ‘‘இதை உமாபதி சிவாச்சாரியாரிடம் கொடு. அவர் மிச்சத்தை பார்த்துக்கொள்வார்’’ என்று சொல்லிவிட்டு, அந்த சாது வேகமாக நடையிட்டு சென்று மறைந்தார்.

சாம்பனும், திருமடத்துக்கு சென்று விறகுகளை, தபசுப்பிள்ளை இடம் கொடுத்துவிட்டு, அவர் கையில் சாது தந்த ஓலையையும் கொடுத்தார். ‘‘இதை தயவு செய்து உமாபதி சிவாச்சாரியாரிடம் கொடுத்து விடுங்கள்’’ என்று கைகூப்பி கேட்டார். அதற்கு மெல்ல தலையை ஆட்டிய தபசுபிள்ளை, வேகமாக மடப் பள்ளியை விட்டுச் சென்று, உமாபதி சிவாச்சாரியாரிடம் அந்த ஓலையைக் கொடுத்தார். கனிவோடு அதை வாங்கிக்கொண்ட உமாபதி சிவம், அன்போடு அதைப் படிக்க ஆரம்பித்தார்.

‘‘அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க்கு எழுதிய கைச் சீட்டு படியின் மிசை
பொற்றான் சாம்பனுக்கு பேதமற தீக்கை செய்து
முக்தி கொடுக்க முறை’’

– என்று அந்த ஓலையில் செய்தி இருந்தது.

அதாவது, அடியவர்களுக்கு அடிமையான, சிற்றம்பலவாணனாகிய நான், உமாபதி சிவாச்சாரியாரிடம் கேட்பது என்னவென்றால், இந்த ஓலையைத் தாங்கி வரும் பொற்றான் சாம்பனுக்கு முறைப்படி சிவதீட்சை கொடுத்து, முக்தியும் கொடுக்க வேண்டும்’’ என்பதுதான் ஓலையில் இருந்த பாடலின் பொருள். படித்து முடித்ததும் உமாபதி சிவம் ஆனந்தக்கண்ணீர் உகுத்தார்.`சாம்பன் மீது அந்த இறைவனுக்கு எவ்வளவு கருணை இருந்தால், தன் கைப்பட ஒரு ஓலை எழுதி, அவருக்கு முக்தி வழங்க அந்த ஈசனே சிபாரிசு செய்திருப்பார்’.

என்று மெய் புளகம் அரும்பினார். ஈசனையே, சிபாரிசு செய்ய வைத்த சாம்பனது பக்தி, அவரை மலைக்க வைத்து, உடனே சாம்பனை அழைத்து அவனுக்கு `நயன தீட்சை’ அளித்து, ‘‘நமசிவாய’’ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்தக் கணம் சாம்பன் மோட்சம் அடைந்தான்.

அவனது உடலில் இருந்து ஒரு ஜோதி கிளம்பிச் சென்று விண்ணில் கரைந்து மறைந்தது. அதை நேரில் கண்ட தபசுப்பிள்ளை, புல்லரித்துப் போனார். பலபல யோகிகளும், முனிவர்களும் பல காலம் தவம் புரிந்தும் கிடைக்காத பேறு, சாம்பனுக்கு இறைவன் அருளால் எளிதில் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த சிதம்பரேசன், தானாக நேரில் மோட்சம் வழங்காமல், உமாபதி சிவாச்சாரியாரின் மூலமாக மோட்சம் வழங்கியதற்கும், அவருக்குக் காரணம்புரிந்தது. உலகிற்கு உமாபதி சிவத்தின் பெருமையை உணர்த்த, அப்பன் ஆடிய நாடகம் இது, என்று புரிந்துகொண்டார். தனது குருவின் மகிமையை உணர்ந்தவராக ஓடிச்சென்று, அவரது காலில் விழுந்தார்.

இதற்குள், நடந்த சம்பவம் காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியது. சிலர் உமாபதி சிவம்தான், சதி செய்து சாம்பனைக் கொன்றுவிட்டார் என்று வாய் கூசாமல் பேசினார்கள். விஷயம் நாட்டு மன்னனையும் எட்டியது. அவனும் உமாபதி சிவத்திடம் சென்றான்.‘‘சுவாமி, இவர்கள் அனைவரும் என்னென்னவோ சொல்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன? அனைவரின் சந்தேகத்தையும் தெளிவு பெறும்படி ஒரு விடை இதற்குக் கொடுங்கள்’’ என்று வேண்டி, அவரை பணிந்தான்.

அவனைக் கருணைபொங்க பார்த்து புன்னகை பூத்தார் சிவாச்சாரியார். அருகில் நடராஜப் பெருமானின், திருமஞ்சன நீர் தினமும் பட்டு, அதனால் தழைத்து வளர்ந்த, முள்ளிச் செடி இருந்தது. மெல்ல அதன் அருகில் சென்ற சிவாச்சாரியார், அதை அன்போடு பார்த்து, நயன தீட்சை வழங்கினார். அவரது பார்வை பட்ட அடுத்த கணம், பச்சையாக இருந்த செடி பற்றி ஏரிய ஆரம்பித்து.

அனைவரும் அதைக் கண்டு வாயைப் பிளந்தார்கள். அந்த முள்ளிச் செடியில் இருந்து ஒரு ஜோதி கிளம்பிச் சென்று, ஆகாயத்தை அடைந்து மறைந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் மெல்லமெல்ல நடப்பது புரிய ஆரம்பித்தது.சாதாரண முள்ளிச் செடியே சுவாமியின் பார்வைபட்டு அதாவது, நயனதீட்சை பெற்று முக்தி அடைந்தது என்றால், பெரும் சிவபக்தனான சாம்பன், முக்தி அடைந்ததில் ஆச்சரியமே இல்லை என்று புரிந்து கொண்டார்கள்.

அனைவரது சந்தேகமும் குறைவர தீர்ந்தது. அவர்களைப் பார்த்து கருணை பொங்க புன்னகை பூத்த உமாபதி சிவாச்சாரியார், அனைவரையும் சிதம்பரம் நடராஜர் சந்நதிக்கு அழைத்துச் சென்றார். சந்நதியில் நடராஜப் பெருமான் பாதத்தின் அருகில் இரண்டு ஜோதி அனைவரது கண்களுக்கும் புலப்படும் படி, பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு ஜோதியில் சாம்பன் முகமும், இன்னொரு ஜோதியில் முள்ளிச் செடியின் உருவமும் அனைவர் கண்களுக்கும் புலனாகும்படி தெரிந்தது.

அனைவரும் அதைக் கண்டு, ‘‘ஹர.. ஹர.. சம்போ.. மகாதேவா..’’ என்று விண்ணை முட்டும்படி கோஷம் எழுப்பி ஈசனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் வணங்கினார்கள். பல ஆண்டுகள் தவம் செய்தாலும் கிடைக்காத முக்தி இன்பம், ஞானிகளின் கண்பார்வை பட்டாலே கிடைத்துவிடும் என்பதற்கு இந்த சரித்திரமே எடுத்துக்காட்டு. ஆகவே, உமாபதி சிவாச்சாரியாரை போல மகான்களை வணங்கி, இறைவன் திருவருளைப் பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post குரு பார்க்க கோடி நன்மை appeared first on Dinakaran.

Tags : Kodi ,Asaram ,Umapati Sivacharyar ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!