×

ஜோதிடத்தில் கிரஹண தோஷம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

நம் முன்னோர்கள் அக்காலத்திலே கிரஹணம் நடைபெறும் நேரத்தில் கோயில் வழிபாடுகளை தவிர்த்தனர். மேலும், உணவு சமைப்பதையும் உணவு உட்கொள்வதையும் முடிந்தளவு தவிர்த்தனர். கர்ப்பிணிப் பெண்கள்கூட கிரஹண காலத்தில் வெளியில் செல்வதை தவிர்த்தனர். இதன் பலன்களை அவர்கள் அறிந்திருந்தனர். கிரஹணம் என்பது நாம் அறிந்ததே.

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் ராகு – கேது என்ற சாயா கிரகங்களுக்குள் அகப்படும் போது ஏற்படுவதே கிரஹணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த கிரஹணம் வருடத்திற்கு நான்கு முறை ஏற்படும். அவை சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் ஆகும். வாழ்வில் கிரஹண தோஷங்கள் என்ன செய்யும்? என நீங்கள் நினைக்கலாம். சில மாறுதல்களை வாழ்வில் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை.

கிரஹண தோஷத்தை எப்படிக் கண்டறிவது

சூரியன், சாய கிரகங்களுடன் (ராகு – கேது) இணைந்திருப்பதும் அல்லது சாயா கிரகங்களின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருந்தாலும், திரிகோணம் அல்லது கேந்திரங்களின் மூலம் தொடர்பு கொண்டாலும் கிரஹண தோஷம்தான். அதே போல், சந்திரன் சாயா கிரகங்களுடன் (ராகு – கேது) இணைந்திருப்பதும் அல்லது சாயா கிரகங்களின் நட்சத்திர சாரத்தில் அமர்திருந்தாலும், திரிகோணம் அல்லது கேந்திரங்களின் மூலம் தொடர்பு கொண்டாலும் கிரஹண தோஷம்தான்.

கிரஹண தோஷத்தால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்.

* கிரஹண தோஷம் வாழ்வில் ஏற்றங்களை தடுத்துக் கொண்டே இருக்கும்.

* கிரஹண தோஷம் உள்ளவர்களின் பெற்றோர்களும் ஏற்றங்களிலிருந்து சரிவை சந்தித்துக் கொண்டே இருப்பர்.

* எல்லா பாக்கியங்களும் அருகே வந்து விலகிப் போகும் நிலைமை ஏற்படும்.

* சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கைவிட்டுப் போகும் நிலைமைகள் உண்டாகும்.

* சிலர் பித்ரு தோஷம் உள்ளவர்களாக இருப்பர். முறையாக பித்ரு கடன்களை செய்யாதிருப்பர். ஆதலால், அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

* சிலர் தங்களின் பெற்றோர்களைவிட்டு விலகி வாழ வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுவர். அதனால், தனியாக வாழ வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

கிரஹண தோஷம் பரிகாரம் எங்கு? எப்போது? எப்படி செய்யலாம்?

கிரஹண தோஷப் பரிகாரங்களையும், பித்ரு தோஷப் பரிகாரங்களையும் நதிகளின் படித்துறைகளிலோ அல்லது கடற்கரையிலோ செய்யலாம். இன்னும் சிறப்பாக திரிவேணி சங்கமம் எனச் சொல்லக்கூடிய இரண்டு, மூன்று நதிகள் சங்கமம் ஆகும் படித்துறைகளில் இதற்கான பரிகாரம் செய்ய வேண்டும். குறிப்பாக காசி, திருக்கோகர்ணம், காவேரி, கொடுமுடி, பாபநாசம் போன்ற இடங்களில் சிறப்பாக செய்கின்றனர்.

அவரவர் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள நதிகளின் படித்துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது சிறப்பு. சந்திர கிரஹணம் மற்றும் சூரிய கிரஹணம் நடைபெறும் காலங்களில் அதற்குரிய பரிகாரங்கள் செய்யும் தேர்ச்சி பெற்றவர்களிடம் செய்து. அவர்களுக்கு முறையாக தட்சணை கொடுத்து, பரிகாரம் செய்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து கொள்வது சிறப்பாகும்.

கிரஹண காலத்தில் ஏன் பாதிப்புகள் நிகழ்கின்றன?

நவக்கிரகங்களில் ஒளி கோள்கள் எனச் சொல்லக்கூடியவை சூரியனும் சந்திரனும் மட்டுமே. அவைகளின் இயக்கங்கள் தடைபட்டாலும், அந்த கோள்களின் ஒளிக்கற்றைகள் பூமியை வந்தடைவதற்கு தடை ஏற்பட்டாலும் அல்லது தடை ஏற்படுத்தினாலும் மாற்றங்கள் உண்டு. கிரஹண காலங்களில் சூரியனின் கதிர் பூமியை வந்தடையும் காலத்தில் ராகு – கேதுக்கள் எனப்படும் சாயா கிரகத்தின் நிழல்களால் மறைக்கப்படுகின்றன.

அவ்வாறு மறைக்கப்படும் சாயா கிரகங்கள் நெகட்டிவ் எனர்ஜியை வைத்துள்ளன. இதனால் சூரியன், சந்திரன் கதிர்கள் வழியே இந்த நெகட்டிவ் எனர்ஜி பூமிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாதிப்புகள் நிகழ்கின்றன. ஆகவே, முன்னோர்கள் கிரஹண காலங்களில் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

கிரஹணத்தன்று என்ன செய்யலாம்?

கிரஹண தினத்தன்று நீங்கள் உபாசனை தெய்வத்தின் மந்திரங்களை உச்சாடனம் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது அந்த மந்திரத்தின் பலன் பன்மடங்கு பெருகும். சாதாரண நாட்களில் செய்வதைவிட கிரஹணத்தன்று மிக வலிமை பெறுகின்றன மந்திரங்கள். பல வருடங்கள் செய்யும் உபாசனையின் பலனை சில நாட்களில் பெறுவதற்கான தெய்வத்தின் அனுகூலம் உண்டாகும்.

The post ஜோதிடத்தில் கிரஹண தோஷம் appeared first on Dinakaran.

Tags : Astryloy ,Sivakanesan ,Grahana ,
× RELATED சாயா நாடி 2