×

மழையில் பக்தர்கள் பலமணிநேரம் நின்ற விவகாரம் சபரிமலையில் காத்திருப்போர் அறையை திறக்காதது ஏன்?: கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் காத்திருப்போர் அறையை தேவசம் போர்டு அதிகாரிகள் திறக்காததால் பக்தர்கள் பல மணி நேரம் மழையில் நின்ற சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் காத்திருப்போர் அறைகள் கட்டப்பட்டுள்ளன. சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களில் இவை திறந்திருக்கும். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த காத்திருப்போர் அறைகளை தேவசம் போர்டு அதிகாரிகள் திறக்காமல் வைத்திருந்தனர்.

இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஓய்வு எடுக்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் ஒதுங்கி நிற்க முடியாமல் மழையில் நனைந்தபடி பலமணி நேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில மலையாள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும்படி சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படி பூஜை நடந்துகொண்டிருந்ததால் காத்திருப்போர் அறை திறக்கப்படாமல் இருந்தது என்று தெரவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் இது தொடர்பாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

The post மழையில் பக்தர்கள் பலமணிநேரம் நின்ற விவகாரம் சபரிமலையில் காத்திருப்போர் அறையை திறக்காதது ஏன்?: கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala High Court ,Thiruvananthapuram ,Devasam Board ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...