×

சிவபெருமானே ஏற்றுக்கொண்டார்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஏழு புண்ணிய நதிகளில் ஒன்று, வாரணாசியில் உள்ள கங்கை. புண்ணிய தலமாகப் போற்றப்படும் இடம் காசி. இங்கு கங்கை நதி பாய்ந்து மக்கள் துயரத்தை துடைக்கின்றாள். கங்கைக் கரையைச் சுற்றிலும் 64 படித்துறைகள் உள்ளன. அதில் ஒன்று பிரகலாத காட். மக்கள், கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணி அன்னையை வணங்கினால், நம் பிணி, பாவங்கள் எல்லாம் அகலும் என்பது நம் முன்னோரின் வாக்கு. துளசிதாசர், வாரணாசியில் உள்ள பிரகலாத காட் படித் துறையிலே அமர்ந்து கொண்டு, சமஸ்கிருதத்தில் கவிதையை இயற்றத் தொடங்குகிறார். பகலில் ஒரு நாள், இறைவனின் உன்னதமான லீலைகளை எல்லாம் பாடலாக இயற்றினார். அடுத்த நாள், இயற்றிய பாடலை தேடுகின்றார். ஆனால், அவர் இயற்றிய பாடல்கள் எல்லாம் அந்த தாளில் காணாமல் போனது.

‘‘இது என்ன காலையில் எழுதியது, அடுத்த நாள் பார்த்தால் காணாமல் போகிறதே! எங்கே போயிருக்கும்?’’ என்று அறியாமல் தவித்தார். இவ்வாறு எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. குழப்பத்தில் ஆழ்ந்தார், துளசிதாசர்.அப்பொழுது, இரவில் அந்த எழுத்துக்கள் மறைந்து விடுகிறது என்பதை அறிந்து கொண்டார். எட்டாவது நாள் அவர் சிவபெருமானை நோக்கி, ‘‘சுவாமி நான் எழுதிய எழுத்துக்கள் மறைந்து விடுகின்றனவே என்ன பாவம் செய்தேன்? எதற்காக இந்த தண்டனை? என் பாடலில் சொல் குற்றம், பொருள் குற்றம் ஏதேனும் உள்ளதா? எதற்காக இப்படி என்னைச் சங்கடப்பட செய்கின்றாய்’’ என்று இறைவனிடத்திலே பதறி அழுகின்றார். அன்று இரவு விஸ்வநாதர் கனவில் தோன்றினார்.

‘‘துளசிதாசரே! நீ, சமஸ்கிருதத்தில் நூலை இயற்றுவதைவிட, வடமொழியில் கவிதை இயற்று’’ என கனவில் கட்டளையிட்டார். “அது உனக்கு சாமவேதம் போல பல மடங்கு பலனும், மன நெகிழ்வும் கிடைக்கும்’’ என்றும் கூறினார். உடனே துளசிதாசர் விழித்து எழுந்தார். அவர் கண் எதிரே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தந்தனர். ‘‘இறைவா, நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்’’ என்று மனம் உருகி இறைவனை வணங்கினார். துளசி தாசர் அடுத்த நாள், முதல் வேலையாக வடமொழியில், நூலை இயற்ற தொடங்கினார். மூன்று இடங்களிலே ஏற்றுகின்றார். அயோத்தி, வாரணாசி, சித்திரக் கூடம் ஆகிய இடங்களில், “ராம சரித மானசம்’’ என்னும் புதுமையான நூலை எழுதினார்.

இந்த நூல், அவதி மொழியிலிருந்ததால், வாரணாசியில் இருந்த பிராமணர்கள், துளசிதாசரின் நூலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், மனவருத்தமடைந்தார் துளசிதாசர். அங்கிருந்த பண்டிதர்கள் எல்லாம் ஒன்றுகூடி, இந்த நூலை, நம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைய ஏடுகள் உள்ள குவியலின் அடியில் நாம் வைப்போம். இறைவன் ஏற்றுக் கொண்டார் என்றால், நாமும் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால், ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று பிராமணர்கள் கூறினார்கள். அவ்வாறு துளசிதாசர் எழுதிய கையெழுத்து பிரதி ஏடுகளை, காசி விஸ்வநாதர் கருவறையில் உள்ள பிரதியேடுகளோடு வைக்கப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டது.

இரவு முழுவதும் தாசருக்கு தூக்கம் வரவில்லை. சிவபெருமான் தன்னுடைய நூல்களை ஏற்றுக் கொள்வாரா? மாட்டாரா? என்று தவித்தார். அவரைப் போலவே பிராமணர்களும், இந்த நூலை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பதை அறியவே தூங்காமல் காத்துக் கொண்டிருந்தனர். காலை பொழுது விடிந்தது. கதவைத் திறந்தால், என்ன நடக்கும் என்பதை அறிய பிராமணர்களும், ஊர் மக்களும் விஸ்வநாத ஆலயத்தின் முன்பாக கூடியிருந்தனர். கோயில் அர்ச்சகர், கோயிலை திறந்தார். கருவறையில் அனைவருடைய பார்வையும் சென்றது.

அங்கே நூல் குவியலில், அடியில் வைத்திருந்த நூலானது, மேலே முகட்டின் உச்சியில் காணப்பட்டது. அதன் மீது சிவனே, தன் கைப்பட “சத்தியம், சிவம், சுந்தரம்’’ என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, உண்மை, மங்களம், அழகு என்பது பொருளில் இது இருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு நல்ல செயல் நடந்தால், அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறமுடியாது. ஈசனே.. சாட்சி சொன்ன பிறகும்கூட, சில பிராமணர்களுக்கு மட்டும் ‘‘அது என்ன துளசிதாசர் எழுதியதை, சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்? அதிலும் காசி விஸ்வநாதன் ஏற்றுக் கொண்டாரா?’’ என்று புலம்பினர். துளசிதாசர் நூல், மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதை விரும்பாத பிராமணர்கள், இரவு தூக்கம் வராமல் திட்டங்களைத் தீட்டினர்.

துளசிதாசர் ஆசிரமத்தில், சீடர்கள் அனைவரும் உறங்கினர். வாயிற் கதவு எதுவும் மூடவில்லை. எல்லாக் கதவுகளும் திறந்தே இருந்தன. காரணம், திருடுவதற்கு உள்ளே எந்த பொருளோ, பணமோ எதுவும் இல்லை. ஒரு நாள் இரவு, இரண்டு திருடர்கள் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நோக்கம் பணமோ, பொருளோ அல்ல அந்த ஏடுகளை களவாட வேண்டும். திட்டப்படி பெட்டியிலிருந்து ஏடுகளை எடுக்கின்ற பொழுது, இரண்டு பேர் தடுத்து நிறுத்தி சண்டையிட்டனர்.

ஒருவன் கருநீல மேனியும், மற்றொருவன் பொன்னிற மேனியும் உடையவர். அந்த நூல்களை எடுக்கவிடாமல் தடுத்து, காவல் காத்து அவர்களை விரட்டி அடித்து தண்டனையும் வழங்கினார். மறுநாள் காலையில், துளசிதாசர் வெளியே வந்தார். அங்கே இரண்டு நபர்கள் மரத்தில் கட்டிப் போட்டு இருப்பதை கண்டார். “யார் நீங்கள்? எதற்காக உங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்? இந்தச் செயலைச் செய்தது யார்? என்று தாசர், அவர்களிடத்திலே கேட்டார்.

‘‘சுவாமி! யார் என்று தெரியாது. கையிலே வில்லை ஏந்திய இருவர், எங்களை இவ்வாறு கட்டிப் போட்டனர்’’ என்று கூறினார். ‘‘நீங்கள் என்ன திருட வந்தீர்கள்?’’ எனக் கேட்டார், துளசிதாசர்.‘‘உங்கள் ஏடுகளை எடுக்கவே நாங்கள் வந்தோம்’’ என்ற உண்மையை கூறி, அவரின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். மரத்திலே எங்களை கட்டிப் போட்டுவிட்டு, பொழுது விடிந்ததும் எங்களை கட்டிப் போட்டவர்கள் சென்றுவிட்டனர் என்று கூறியதும், ஆச்சரியத்தில் அப்படியே ஆழ்ந்து போனார் துளசிதாசர்.

என்னுடைய, “ராம சரிதம் மானச’’ கையெழுத்து பிரதியை காப்பதற்காகவே ராமரும், லட்சுமணனும் மானிட உருவில் வந்து இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாத்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். நிகழ்வை, கேள்விப் பட்டறிந்த பிராமணர்கள், துளசிதாசரின் ஏடுகளை பாதுகாக்க ராமரும், லட்சுமணரும் கையில் வில்லோடு ஆசிரமத்தை பாதுகாத்து திருடர்களை தண்டித்ததை எண்ணி அச்சம் கொண்டனர். ராமருக்குதான், துளசிதாசனின் மீது எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். அந்த நூலின் மீது எவ்வளவு கருணை இருக்க வேண்டும். தவறை எண்ணி விஸ்வநாதன் கோயிலில் சென்று வணங்கி, துளசிதாசருடைய பாதத்தில் விழுங்கி மன்னிப்பு கேட்டனர்.

உடனே அந்தப் பிரதிகளை, முகலாய மன்னர் அக்பரின் நிதி அமைச்சராக இருக்கின்ற, தோடர் மாலுக்கும் தனது நண்பருக்கும் அனுப்பி வைக்கின்றார். இவ்வாறு துளசிதாசரின் நூலை பாதுகாப்பதற்காக, எம்பெருமானே காவலாளியாக காவல் காத்தான் என்றால், துளசிதாசரின் பெருமை எத்தகையது என்பதை சொல்லிமாலாது. ஊர் மக்கள் அனைவரும், துளசிதாசரை பாதுகாக்க ராமரே துணை இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டனர். மாண்டவர் மீண்டதுண்டோ! விதவைக்கு வாழ்வளித்த மகான்.

ஒரு நாள் ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார், துளசிதாசர். ராம நாமத்தின் மீது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, `ராம்… ராம்.. ராம்’… என்று அவருடைய உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில், ஜெயபாலன் என்ற பிராமணர் ஒருவன் இறந்து விடுகின்றான். அவருடைய ஈமச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் மனைவிக்கு தகவல் செல்கிறது. அவருடைய மனைவியானவள், அலறி அடித்துக் கொண்டு மயானம் நோக்கி செல்கின்றாள். செல்லும் வழியில், துளசிதாசருடைய ஆசிரமத்தை கண்டாள். அவரிடத்திலே பணிந்து வணங்கிவிட்டு, செல்லலாம் என எண்ணினாள்.

ஆகவே, ஆசிரமம் வாயிலில் உள்ளே செல்கின்றாள். அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த துளசிதாசரை கண்டதும், அவர் பாதத்தில் விழுந்து, ‘‘சுவாமி…!’’ என்று மன வருத்தத்துடன் கதறி அழுகிறாள். கண்ணை மூடிக் கொண்டே துளசிதாசர், ‘‘நீ சௌபாக்கியவதியாக எட்டு குழந்தைகளுக்கு தாயாய் இருப்பாய்’’ என்று ஆசீர்வதிக்கிறார். அதைக் கேட்டதும், துக்கம் தாளாமல், அந்தப் பெண் அழுகிறாள். ‘‘சௌபாக்கியவதியா? குழந்தையா? சுவாமி!’’ அதற்கு வழியே இல்லையே.

நான் அந்தத் தகுதியை இழந்துவிட்டேன். என் கணவன் மரணம் அடைந்து விட்டார்.நான் எப்படி சௌபாக்கியவாதியாக, சுமங்கலியாக இருப்பேன், குழந்தைகளைப் பெற்றெடுப்பேன்’’ என்று அவள் கதறுகின்றாள். கண்ணைத் திறந்த துளசிதாசர், ‘‘பெண்ணே, நான் உன்னை ஆசீர்வாதம் செய்யவில்லை. என்னுடைய ராமர்தான் ஆசீர்வாதம் செய்தார். ஆகவே, எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நிச்சயமாக நீ சௌபாக்கியவதியாக வாழ்வாய். நன்றாகதான் இருப்பாய். ராமன் கூறினால், அந்த சொல்லில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆதலால், நீ சௌபாக்கியவதியே’’ என்று கூறி அவளை வழி அனுப்பினார்.

அவள் அழுது கொண்டே மயானம் நோக்கி செல்கின்றாள். அங்கே அத்தனை சடங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்பொழுதுதான் துயில் நீங்கி கண் விழித்தது போல எழுகின்றான் அந்த பிராமணன். மனைவியை பார்க்கின்றான். அவளுடைய கதறலைக் கண்டு ஆற்றாமையோடு அவரை அணைத்துக் கொண்டு, எனக்கு நற்கதி கிடைத்துவிட்டது என்று கூறினான். அப்பொழுது அவள் கூறுகின்றாள்; ‘‘துளசிதாசர் என்னை வாழ்த்தினார். அவருடைய வாழ்த்து வீண் போகவில்லை. நீங்கள் உயிர் பிழைத்துவிட்டீர்கள்.

யாருக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. மாண்டவர் மீண்டதுண்டோ? ஒரு கேள்வி உண்டு. ஆனால், இறந்த நீங்கள் மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் என்றால், அது இறைவனான துளசிதாசரின் அருட்பார்வை, ஆசீர்வாதமே ஆகும்’’ என்று கூறினாள். பின்னர், கணவரை அழைத்துக் கொண்டு நேராக துளசிதாசரிடம் வந்து பணிகின்றாள்.  ‘‘சுவாமி! இவரே, என்னுடைய கணவர். இவர் உயிர்பிழைத்தது உங்களுடைய கருணை’’ என்று கூறினாள்.

‘‘பெண்ணே! நிச்சயமாக என்னுடைய வரமோ? ஆசீர்வாதமோ? அல்ல. அது என்னால் வழங்கப்பட்டது என்றால் அது ராமனுடைய அருளினாலே நடந்த ஒரு நிகழ்வு. நீ நிச்சயம், நீண்ட நாள் நல்ல பிள்ளைகளோடு வாழ்ந்து முத்திகதியை அடைவாய்’’ என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.

ஊர்மக்கள் அனைவரும், இந்த செய்தியை அறிந்தனர். அதிசயத்தைக் கண்டு வியந்தனர். ஊரைக் கடந்து நகரம் எங்கும் துளசிதாசருடைய பெருமை வானளவு புகழப்பட்டது. இறந்தவரை உயிர் மீட்க செய்த மகான். விதவையான பெண்ணுக்கு சௌபாக்கியத்தை அளித்த இவருடைய அற்புத லீலைகள்! என்னே அதிசயம்! இன்னும் நிறைய இருக்கும் போல என்று பலரும் பலவிதமாக பேசிக் கொண்டனர். இந்த செய்தியானது முகலாய அரசனான அக்பர் அவைக்குச் சென்றது.

தொகுப்பு: பொன்முகரியன்

The post சிவபெருமானே ஏற்றுக்கொண்டார்! appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,Varanasi ,Kashi ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை