×

புதுக்கோட்டை ஜிஹெச், ஆலந்தா அணையை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வு

தூத்துக்குடி, ஜூலை 20: புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் ஆலந்தா அணையை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் கள ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் உறுப்பினர்களான காந்திராஜன், சந்திரன், சிந்தனைசெல்வன், சிவக்குமார், சேவூர் ராமச்சந்திரன், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேற்று 2வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி சுகாதார பகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதி ஆலந்தா அணை ஆகிய பகுதிகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் குழு தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் பார்வையிட்டு கூறியதாவது: புதுக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மக்கள் தொகை 40,353. இதில் 20,306 ஆண்கள், 20,047 பெண்கள். 53 குக்கிராமங்கள் உட்பட 11 பஞ்சாயத்துகள் அடங்குகிறது. புதுக்கோட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது. இது தேசிய தரச்சான்றிதழ் பெற்ற வட்டார ஆரம்ப சுகாதார நிலையமாகும். இங்கு மாதந்தோறும் சுமார் 5,500 புறநோயாளிகள் மற்றும் 200 உள்நோயாளிகள் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தற்போது ரூ.93,26,971 மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. 23 கிராமங்களுக்குட்பட்ட இந் அலுவலகத்திற்கு நடப்பு நிதியாண்டிற்கு வருவாய் இலக்கு ரூ.22 கோடியாகும். ஜூன் மாதம் வரை ரூ.4.2 கோடி எட்டப்பட்டு உள்ளது. இதுவரை 1796 ஆவணங்கள் பதியப்பட்டு உள்ளன. ஆலந்தா கிராமத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகளவில் வெள்ளநீர் வரும்பொழுது கரை பலவீனமான இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்ததால் மண் மேடாகி முட்புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் அணையின் கால்வாய் அகலம் குறைந்து போதிய படுகை வீழ்ச்சி இல்லாமல் நீர் கொள்திறன் குறைந்து காணப்பட்டதால் இவை அனைத்தையும் புனரமைப்பதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது சீராக உள்ளது.

இத்திட்டத்தால் அணை கால்வாயின் கொள்செல் திறன் அதிகரிக்கப்பட்டு விரைவில் தண்ணீர் வரும்பொழுது நிரம்பும் வகையில் மறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. அணை விரைவாக முழுகொள்ளளவை எட்டி விவசாயம் சிறப்பாக நடைபெறும், என்றனர். முன்னதாக புதுக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி 6 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் ஒரு பயனாளிக்கு குழந்தை நலப்பெட்டகம் ஆகியவற்றை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், தாசில்தார்கள் பிரபாகரன், சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை ஜிஹெச், ஆலந்தா அணையை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pudukottai GH ,Alanta Dam ,Legislative Assembly Evaluation Committee ,Thoothukudi ,Pudukottai Government Hospital ,Alanta Dam.… ,Dinakaran ,
× RELATED புளியம்பட்டி அருகே ரூ.2 கோடியில் ஆலந்தா அணை புனரமைப்பு பணி