×

முடி காணிக்கையின் முக்கியத்துவம்

குழந்தைகளுக்கான பல்வேறு சடங்குகளைக் குறித்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான சடங்குகள் “முடி இறக்குதல்” அல்லது “மொட்டை போடுதல்”, காது குத்துதல். இதில் முதலில் முடி காணிக்கை தருதல் அல்லது முடி இறக்குதல் குறித்து நாம் பார்ப்போம். இது எல்லாச் சமயங்களிலுமே உண்டு.

இந்து சமயம் மட்டுமல்லாது, பிற சமயங் களிலும் இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர். இதற்கு, விதவிதமான காரணத்தைச் சொல்லுகின்றார்கள். கடந்த பிறவியின் தொடர்புகளைத் துண்டிப்பதற்காக மொட்டை போடுவதாக ஒரு நம்பிக்கை சில சமயங்களில் உண்டு. இந்த பிறவியில், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் மொட்டை போடுவதாகச் சிலர் சொல்லுகின்றார்கள்.

எது எப்படியோ, நம்முடைய இந்து சமயத்தின் பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளுக்கு தங்கள் குலதெய்வக் கோயில்களிலோ அல்லது இஷ்ட தெய்வக் கோயில்களிலோ அவசியம் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதில் சைவ, வைணவ, அம்மன் ஆலயங்கள் என்றெல்லாம் வேறுபாடு இல்லை.

திருப்பதியிலும், அழகர் கோயில் போன்ற பிரசித்த பெற்ற வைணவக் கோயில்களிலும் முடி காணிக்கை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 முதல் 600டன் தலைமுடிகள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக பக்தர்களால் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த முடியை, ஏலம் விடுவதன் மூலமும் கோயில் நிர்வாகத்திற்கு கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது.

திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்துவதால் குபேரர் மற்றும், லட்சுமி தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாம் காணிக்கையாக கொடுக்கும் முடியின் அளவைவிட, பல மடங்கு அதிகமான செல்வத்தை பெருமாள் நமக்கு அள்ளி தருவார் என்பதும் நம்பிக்கை.
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் மட்டும் 600-க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தினமும் 20,000-க்கும் அதிகமான பக்தர்கள் முடிகாணிக்கை வழங்கி வருகின்றனர். சிலர் வைத்தீஸ்வரன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற சைவ ஆலயங்களில் முடி காணிக்கை தருகின்றனர். சிலர் பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலிய பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் முடி காணிக்கை தருகின்றனர். சிலர் சமயபுரம் போன்ற அம்மன் கோயில்களில் முடி காணிக்கை தருகின்றனர்.

எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம். இந்தத் தலையைப் பாதுகாப்பதும், இந்த உடம்புக்கு அழகு தருவதும், தலையில் உள்ள அந்த முடியே ஆகும்.  அதனைத் தான், விதவிதமாக நாம் அலங்காரம் செய்து கொள்ளுகின்றோம். தலைமுடி இல்லாவிட்டால் அழகு குறைகிறது. அதனால், நான் அதை மிகமிக முக்கியமானதாகக் கருதுகின்றோம். முடி என்ற சொல்லுக்கு கேசம் என்ற பொருள் இருந்தாலும், அது மானத்தோடு தொடர்பு உடைய ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
(அதிகாரம்: மானம் குறள் எண்:969)

மயிர் நீங்கியபின் உயிர் வாழமுடியாத கவரி போன்ற இயல்புடையவர் மானம் கெட நேர்ந்தால் தம் உயிரை அழித்துக் கொள்வர். கவரிமா என்பது ஒரு வகை விலங்கு. அதன் உடல் முழுவதும் மயிர் நிறைந்திருக்கும். தன் மயிர்த் திரளிலிருந்து மயிர் நீக்கப்பட்டால், அது உயிர் வாழ இயலாது என்பது அதன் இயற்கை. அதுபோல, `மானம் உயிர்நிலை’ என்று மனிதர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் மானத்துக்கு கேடு உண்டானால், இயல்பாகவே தம்முடைய உயிரை விட்டுவிடுவர்.

முடி என்ற சொல், மானம், மதிப்பு என்ற சொல்லோடு தொடர்புபடுத்தப்படுவது. மானம், உயிர் இவற்றில் ஒன்றுதான் தங்கும் என்னும் நிலை வந்தால் உயிரைப் பலியாகக் கொடுத்து மானம் காப்பர் நற்பண்பு ஓம்பும் உணர்வுள்ள மாந்தர். உயிரா மானமா என்ற நிலை வரும்போது வாழ்வைத் துறப்பது சிறந்தது என்பது வள்ளுவக் கோட்பாடு. ‘மானம் வரின்’ என்பதற்கு ‘மானம் கெடவரின்’ அதாவது ‘மானம் கெடநேர்ந்தால்’ என்று பொருள் கொள்வர்.

இங்கே தலைமுடி என்பது உயிரோடும், மானத்தோடும் தொடர்புடைய ஒரு குறியீடாக பயன்படுத்தப்படுவதால், இதை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கின்ற பொழுது. நம்முடைய மானத்தையும் நம்முடைய உயிரையும் அவனிடத்தில் சமர்ப்பணம் செய்கின்றோம் என்ற பொருளில் வருகின்றது. அதனால்தான் நாம் ஒரு கஷ்டத்தில் இதனை நேர்த்திக் கடனாக செய்கின்றோம். குழந்தைகளும் தீர்க்காயுளோடு வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையின் உயிருக்குக் குறியீடாக, தலைமுடியை, நாம் கோயிலில் குலதெய்வத்துக்கு காணிக்கையாகத் தருகின்றோம்.

அடுத்து முடி என்பது தலையில் வைக்கக் கூடிய கிரீடத்தைக் (பதவியை) குறிக்கும். ‘‘முடி சூடுதல்” என்கின்றோம். தன்னுடைய முடியைக் கழற்றி கீழே வைத்துவிட்டால், அவன் தன்னைத் தியாகம் செய்வதாக – தான் தோல்வி அடைந்ததை அறிவிப்பதாகப் பொருள். அதாவது, சரணாகதி அடைந்ததாகப் பொருள். நாம் முடி காணிக்கையை இறைவன் திருத்தலத்தில் செய்வதால், நாம் அவனுக்குத் தோற்றவர்களாக, நம்மை அவனுக்கு சரணாகதி செய்து கொண்டதாகக் கருதுகிறோம். இதை ஆண்டாளின் பாசுரம்;

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபி மான பங்கமாய் வந்து நின்
பள்ளிக்கட்டில் கீழே

– என்ற பாசுரம் எடுத்துரைக்கிறது.

எல்லா அரசர்களும், தங்களுடைய எல்லா பதவிகளையும், மான அவமானங்களையும் இறைவனிடம் சமர்ப்பித்து விட்டார்கள் என்பதற்கு அடையாளமாக தங்கள் முடியை (கிரீடத்தை) இறக்கி இறைவன் காலடியில் வைத்துவிட்டு காத்திருந்தார்கள் என்று வருகிறது. வைணவத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு. ஒருவர் செய்த நன்றிக்கு ‘‘தலையல்லால் கைமாறில்லை’’ என்பார்கள்.

தலை இல்லாமல் இருக்க முடியாது என்பதால், தலைமுடியை இறைவனுக்கு காணிக்கையாக (கைம் மாறாக) ஒரு அடையாளமாகத் தருகிறோம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதற்கு ஆன்மிகக் காரணங்களைத் தாண்டி அறிவியல் காரணங்களும் உண்டு. தாயின் கருப்பையில், பனிக்குடத்தில் வளரும் குழந்தை, அந்த பனிக்குட நீரில் ஊறிப்போய் இருக்கும். குழந்தை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால், தலையில் உள்ள கழிவுகள் அப்படியேதான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துத்தான் போக்க முடியும்.

மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறிவிடும். இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருவது குறையும். ஒற்றைத் தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது. குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். உடலுக்கு ‘வைட்டமின் டி’ சத்து எளிதில் கிடைக்கும். இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி அடர்த்தி இல்லாமல் மெலிதாக இருக்கும். மொட்டை போடுவதின் தாத்பர்யம் என்ன வென்றால், கத்தி படபட மயிர்க்கால்கள் வலுவடைந்து புது வலுவான முடிவரும்.

சிலர் குழந்தைகளுக்கு முடி வளர வளர, மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். இது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. பிறந்த ஒரு மாதக் குழந்தைக்கு மொட்டை போட மாட்டார்கள். குழந்தையின் மண்டைத் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். குறைந்த படசம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் செல்ல வேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post முடி காணிக்கையின் முக்கியத்துவம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!