×

பெ.நா.பாளையத்தில் ரூ.2.75 கோடியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

 

பெ.நா.பாளையம், ஜூலை 19: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து அத்திப்பாளையம் வரை செல்லும் தார் சாலையை புதிதாக அமைப்பதற்காக நடந்த பூமிபூஜையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவை விமான நிலையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இச்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இச்சாலையை புதிதாக அமைக்க தமிழக அரசு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையத்தில் இருந்து கருங்குட்டை வரையிலான சாலைக்கு ரூ.1.75 கோடியும், இடிகரை பேரூராட்சிக்குள்பட்ட கருங்குட்டையில் இருந்து அத்திப்பாளையம் நால்ரோடு வரையிலான சாலைக்கு ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளது. மொத்தம் ரூ.2.75 கோடி செலவில் 5 கி.மீ. வரையிலான சாலை புதிதாக அமைக்கப்படுகிறது.

இதற்காக, ஜி.கே.டி பள்ளி அருகில் நடந்த பூமி பூஜைக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் விஷ்வபிரகாஷ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார், 18வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பேரூராட்சிகள் துணை இயக்குநர் துவாரகநாத் சிங், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெ.நா.பாளையத்தில் ரூ.2.75 கோடியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi ,Pooja ,BNA Palayam ,Pena Palayam ,Bhumi Pooja ,Coimbatore Periyanayakanpalayam ,Athipalayam ,
× RELATED சபரிமலையில் இன்று வைகாசி மாத...