×

ஆற்றில் குதித்த எஜமானிக்காக பாலத்தில் கண்ணீருடன் காத்திருந்த நாய்: வழிப்போக்கர்களிடம் குரைத்தபடி உதவி கேட்டது

திருமலை: ஆந்திர மாநில எல்லை காக்கிநாடா அருகில், புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் மாவட்டத்தை சேர்ந்தவர் காஞ்சனா(25). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது காஞ்சனா தனது அம்மாவுடன் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி மாலை ஏனாம்-எதுர்லங்கா பாலயோகி பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் காஞ்சனா குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது, காஞ்சனா உடன் வந்த வளர்ப்பு நாய், காஞ்சனா மீண்டும் வருவார் என்று பாலத்தின் மீது இருந்த செருப்பு அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

மேலும், பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றை நோக்கி நாய் குரைத்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக இளம்பெண் வராததால் செருப்புக்கு அருகில் கண்ணீருடன் படுத்துக்கொண்டது. அதோடு அவ்வழியாக செல்லும் வழிப்போக்கர்களிடம் செருப்பை பார்த்தும், ஆற்றை பார்த்தும் குரைத்தபடி உதவி கேட்டது. இதனால் யாரோ ஆற்றில் குதித்திருப்பதை அறிந்த அவ்வழியாக சென்ற மக்கள் ஏனாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் குதித்த காஞ்சனாவை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இரவு நேரம் ஆனதால் தேடும் பணிைய கைவிட்டு நேற்று முன்தினம் காலை தேடினர். அப்போது, காஞ்சனாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது காஞ்சனா என்பதை அறிந்து போலீசாரால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்து அழைத்தபோதுதான் அந்த நாய் அங்கிருந்து சென்றது. தனக்கு உணவு கொடுத்த இளம்பெண் ஆற்றில் குதித்து திரும்பாததால், தவித்தபடி அங்கேயே கண்ணீருடன் காத்திருந்த நாய், வழிப்போக்கர்களிடம் உதவி கேட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

The post ஆற்றில் குதித்த எஜமானிக்காக பாலத்தில் கண்ணீருடன் காத்திருந்த நாய்: வழிப்போக்கர்களிடம் குரைத்தபடி உதவி கேட்டது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Kanchana ,Enam district ,Puducherry ,Andhra state border ,Kakinada ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ