×

ஆன்மா: இரண்டு ஜன்மங்களுக்கு இடையேயான பாலம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 53

(பகவத்கீதை உரை)

அர்ஜுனனின் மனக் குழப்பத்தைத் தீர்க்கவும், அவனுக்கு மனோதிடம் ஏற்படுத்தவும் கிருஷ்ணன் செய்யும் உபதேச முயற்சிகளை, அவற்றுக்கான விளக்கங்களை மேலும் தொடருமுன் ஆன்மாவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம். ஆன்மா அழிவற்றது என்கிறார் கிருஷ்ணன். அது அடுத்தடுத்த ஜன்மங்களுக்குள் ஊடுருவக்கூடியது. அடுத்தடுத்து உடல், மனம், உயிர் இவற்றைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த உடலின் வாழ்நாள் இறுதிவரை உடனிருக்கக்கூடியது.

இந்த ஆன்மாவுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அது நடந்ததற்கும், நடக்காததற்கும் இடைப்பட்டுப் பயணிக்கிறது. நினைவுக்கும், மறதிக்கும் இடையே உலவுகிறது. இந்தப் பூவுலகை விட்டுப் போனால், எதைக் கொண்டு போகப்போகிறோம் என்ற தத்துவத்தை நம்மில் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
மாவீரன் அலெக்ஸாண்டர், தான் இறந்த பிறகு, சவப்பெட்டியில் தன் இருகைகளும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி செய்து, சுமந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டானாம்.

அதாவது, உலகின் பெரும்பாலான பகுதி களைத் தன் ஆளுமைக்குக் கொண்டுவந்து, அவற்றுக் கெல்லாம் அதிபதியாக விளங்கிய தான், இப்போது, இறந்துவிட்ட இந்த கட்டத்தில் என்னுடன் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காக! நிலையாமை உடலுக்கும், உயிருக்கும் எப்படி பொதுவோ, அதேபோல சேகரிக்கும், சம்பாதிக்கும் பொருட்களுக்கும் பொதுவாகும். அதனாலேயே, உயிர் பிரியும் காலம்வரை உடனிருப்போரை மகிழ்வித்து அதனால் தானும் மகிழ்ந்து வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சரி… பணம், பொருள், வீடு, வாகனம், வயல்வரப்பு, சொந்தம், பந்தம், நட்பு, காதல், பாசம் என்று எதையுமே இறந்தபின் கொண்டுபோக முடியாதுதான். ஆனால், உடலை விட்டு உயிர் பிரிந்தபின், ஆன்மாவும் பிரிந்து அடுத்த உடலை நாடிச் செல்கிறதே, இந்த ஆன்மா மட்டும் எதையோ சுமந்துதான் செல்கிறது.
அது என்ன? ‘எந்த ஜன்மத்தில் செய்த பாபமோ இப்போது வந்து வாட்டுகிறது’ என்ற ஆற்றாமைக் குரலை நாம் கேட்கிறோம். முந்தைய ஜன்மங்களில் செய்த செயல்களுக்கான பலன்கள் இந்த ஜன்மத்தில் பலிக்கின்றன.

அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை நிரூபிக்க முடியாது என்றாலும், அந்த அங்கலாய்ப்புக்கும் அர்த்தம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே பூரணத்துவம் பெற்றுவிட்டதாக எந்த மனிதரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற இயலாமல் போன பணிகள் நிறைய இருக்கலாம். இந்த ஏக்கம் நிரந்தரமாக அவருடன் தங்கியிருக்கலாம்.

அவர் யாரையேனும் ஏமாற்றியிருக்கலாம், பொய் சொல்லியிருக்கலாம், நம்பிக்கை மோசடி செய்திருக்கலாம், இழிகுற்றம் புரிந்திருக்கலாம். இறப்புத் தருணத்தில் இந்த உணர்வுகள் ஏக்கமாகவும், குற்ற உணர்வாகவும் உறைந்துவிடலாம். அதேபோல, பிறர் மகிழும் வண்ணம் நன்மைகள் செய்திருக்கலாம், சரியான சமயத்தில் உதவியிருக்கலாம், நட்பாலோ உறவாலோ சந்தோஷப்படுத்தியிருக்கலாம், அடுத்தவர் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கலாம், அன்பால் பலரை ஆதரித்திருக்கலாம், யோசனைகளால் பலருக்கு நல்வழி காட்டியிருக்கலாம்.

இறப்புத் தருணத்தில் இந்த மகிழ்ச்சி நினைவலைகளும் உறைந்துவிடலாம். இந்த ஏக்கங்கள், ஏமாற்றங்கள், நிறைவேறாத ஆசைகள், முடிவுறாத திட்டங்கள், குற்ற உணர்வு அல்லது மகிழ்ச்சி உணர்வுகள், உண்மையான, சத்தியபூர்வமாக வாழ்ந்த நிறைவு, நன்றியறிதல் போன்றவை உடலோடு மண்ணாகியோ, எரியூட்டப்பட்டோ மறைவதில்லை. அவை ஆன்மாவுடன் பயணிக்கின்றன.

ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த உணர்வுகளைத் தேக்கியபடி வேறு உடலையும், உயிரையும் தேடும் ஆன்மா, அப்படிக் கிடைத்தபின் அந்த உணர்வுகளை மனத்திடம் அது கொடுத்துவிடுகிறது. மனம் அதற்கேற்றாற்போல இயங்குகிறது. நன்மையோ, தீமையோ ஏற்பட, அதை அந்த மனம், உடல், உயிர், ஆன்மா எல்லாம் அனுபவிக்கின்றன. இந்த கட்டத்தில் ஆன்மா ஒரு துறவியைப் போல எதனாலும் பாதிக்கப்படுவதில்லை என்றாலும், தான் சார்ந்திருக்கும் உடல், உயிர், மனம் இவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மௌன சாட்சியாக விளங்கிக் கொண்டுதானிருக்கிறது.

உடலை விட்டு உயிர் பிரியும் முன்னால், நிரந்தரமாக மனம் அடங்குவதற்கு முன்னால், இந்த உயிரும், மனமும் ஆன்மாவிடம் கோரிக்கை வைக்கலாம்! அதாவது ‘இந்தப் பிறவியில் நாங்கள் அனுபவித்த நிறை குறைகளை உடனிருந்தே கவனித்த நீ, நாங்கள் செய்த நற்செயல்களின் நற்பலன்களையும், துர்செயல்களின் துர்பலன்களையும் எடுத்துச் செல், அடுத்த ஜன்மத்தில் நற்பலன்களுக்கான நன்மைகளையும், துர்பலன்களுக்கான தீமைகளையும் வேறு உடல், உயிர், மனம் ஆகியவை மூலமாக அடையச்செய்,’ என்று கேட்டுக் கொள்ளலாம்.

இந்த வகையில், அடுத்தடுத்து ஜன்மங்கள் தோன்றத் தோன்ற, கூடவே வரும் ஆன்மா, தான் சுமந்து வந்த நேர்மறை உணர்வுகளுக்கு நன்மைகள் கிடைக்குமா என்று பார்க்கிறது; அதேபோல, எதிர்மறை உணர்வுகளுக்குத் தீமைகள் கிடைக்குமா என்றும் பார்க்கிறது. அடுத்தடுத்த ஜன்மங்களில் கொஞ்சம், கொஞ்சமாக எதிர்மறை உணர்வுகள் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாததாகவே ஆகிவிடும்போது, இந்த கட்டத்தில், ஆன்மா இடம் பெறக்கூடிய உடல், மனம், உயிர் எல்லாம் தெய்வாம்சம் பொருந்தியதாகி விடுகின்றன.

அப்படி தெய்வம்சம் பொருந்தியவர்களே ஞானிகளாகப் போற்றப்படுகிறார்கள். ஆகவே, போகும்போது நாம் முற்றிலுமாக எதையும் உலகிலேயே விட்டுவிட்டுப் போவதில்லை. சந்தோஷ, ஏக்க உணர்வுகளை மிச்சமாகக் கொண்டுதான் போகிறோம். அடுத்த ஜன்மத்திற்காக அதை ஆன்மா சுமந்து வருகிறது, அந்த ஆசாபாசங்களுக்கு ஏற்ப நன்மை தீமைகளை நம்மை அனுபவிக்கச் செய்கிறது. ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ ஜனனமும், மரணமும் நம் அனுபவங்கள் தவிர்க்கவே முடியாதவை.

எப்படியாக ஜனிக்கிறோம், எப்படியாக மரணிக்கிறோம் என்ற தனி நபர் வித்தியாசம் தவிர, இந்த இரு நிகழ்வுகள் மட்டும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு. இந்த உண்மையை நம் வாழ்வில் தினந்தோறும் நம்மை உணரச்செய்கிறார் பகவான். ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்று வள்ளுவர் சொல்வதற்கிணங்க, இரவில் தூக்கமாக மரணத்தைத் தழுவுகிறோம். விடியற்காலையில் ஜனனமாகப் புதுநாளைக் காண்கிறோம். இந்த, தூக்கம் விழிப்பு என்ற கால இடைவெளியில் நாம் கனவுகளைக் காண்கிறோம். அந்தக் கனவுகள் நமக்கு தூக்கத்திலேயே சந்தோஷம் தருவதாகவோ அல்லது துக்கம் தருவதாகவோ அமைகின்றன.

இந்த இடைவெளிக் காலத்தை ஆன்மாவின் காலம் என்று கொண்டோமானால், மரணத்துக்கும் மீண்டும் ஜனனத்துக்குமான கால இடைவெளியும் ஆன்மாவுக்கு உரியதாகிறது. கனவே இல்லாத தெளிவான, நிம்மதியான உறக்கம் என்றால், அது ஞானிகளின் வாழ்க்கை என்று உவமைப்படுத்தலாம்.
ஆக, ஒவ்வொரு ஜன்மத்திலும் ஆன்மாவும் தனக்கென இந்த பொறுப்பை மேற்கொண்டு தான் வருகிறது என்றே சொல்லலாம். சரி, இப்போது கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் மீண்டும் கவனிப்போம்.

அஜோபி ஸன்னவ்யயாத்மா பூதானாமீச்வரோபி ஸன்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா (4:6)

‘‘நான் அழிவற்றவன்தான். எனக்கு மனிதர்களைப் போன்ற ஜன்ம வரையறை எதுவும் இல்லைதான். அனைத்து உயிரினங்களுக்கும் நான் ஈஸ்வரனாகவே விளங்குபவன்தான். ஆனாலும், நான் அவதரிக்கிறேன். என்னால் துலங்கும் இயற்கையை நான் வசப்படுத்தி, யோகமாயையால் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.’’ சூரியனுக்கே சத்தியத்தை உபதேசம் செய்தவர் கிருஷ்ணன் என்றால், அவர் ஜன்மங்களைக் கடந்தவர் என்றுதான் பொருள். பிறப்பு, இறப்பு என்ற மனித இயற்கையை விஞ்சியவர் அவர். ஆகவே, இந்தக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவர். அவர் எல்லைகளற்றவர்.

ஆரம்பத்துக்கும் முன்னதாகவும், முடிவுக்கும் பின்னதாகவும் வியாபித்திருப்பவர். அவர் தாமே விரும்பினால்தான் ஏதேனும் ஓர் உருவத்தில் அவரால் ‘ஜனிக்க’ முடியும். இந்த ஜனனமும் பிற எல்லா உயிரினங்களையும்விட உயர்ந்ததாகவே அமையும். இப்படி, தான் நினைக்கும்போதெல்லாம் ஜன்மம் எடுப்பதால்தான் கிருஷ்ணருக்கு தன்னுடைய எல்லா ஜன்மங்களும் நினைவில் இருக்கின்றன. அதனால்தான் அத்தகைய ஒவ்வொரு ஜன்மத்திலும் தன்னுடைய செயல்பாடுகளும் நினைவில் இருக்கின்றன. தான் யாருக்கு உபதேசித்தோம், எதை உபதேசித்தோம் என்பதெல்லாமும் அவரால் துல்லியமாக நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது.

இது பிற உயிரினங்களுக்கு சாத்தியமில்லை. குறிப்பாக மனிதர்களுக்கு. ஏனென்றால் நினைவாற்றல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாக அமைந்திருக்கும் ஒரு குணம். அதற்கு அதிகபட்சமாக ஒரு ஜன்மத்துக்கு மேல் வாரண்டியோ, கேரண்டியோ கிடையாது! மனிதர்களைப் பொறுத்தவரை பிறப்பும், இறப்பும் சொல்லப்படுவதும், கேள்விப்படுவதுமான சம்பவங்களே. அதிலும் தனிப்பட்ட முறையில், தான் பிறப்பதையும், தான் இறப்பதையும் ஒருவனால் சொல்ல முடியாதது விசித்திரம்தான்.

ஏன்? பிறக்கும்போது பேச்சு வருவதில்லை; இறக்கும்போது பேச்சு அடங்கிவிடுகிறது! ஆனால் வாழ்கிறோம். இன்னொருத்தர் பிறப்பதையும், இறப்பதையும் பார்த்து அதைத் தெரிந்து கொள்கிறோம்; தெரிவிக்கிறோம். ஆனால், சொந்த பிறப்பு, இறப்புக்கு ஒருவனால் சுய சாட்சியாக விளங்க முடிவதில்லை! ஒரு ஜன்மம் வாழக்கூடிய வாய்ப்பு வந்தும் இந்த இருநிலைகளைப் பற்றியும் இன்னொருவர்தான் சொல்ல வேண்டியிருக்கிறது! ஆனால், கிருஷ்ணனுக்குத் தான் எங்கே, யாராக, எப்போது யாருக்குப் பிறக்கப்போகிறோம், அதேபோல எங்கே, எப்போது, எப்படி இறக்கப் போகிறோம் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியும்.

பிரபஞ்சத்தையே படைத்து, எல்லா உயிரினங்களையும் படைப்பவருக்கு எதுவுமே புதிராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் அவருக்குத் தெரியும். அதனாலேயே எல்லாவற்றையும் அவரால் நினைவில் இருத்திக் கொள்ளவும் முடியும். இப்படி ஒவ்வொரு ஜன்மத்திலும் அவதாரமெடுக்கும் பரந்தாமன், அந்த ஒவ்வொரு ஜன்மத்திலும் மக்களின் முன்னேற்றத்துக்காகப் பல வினைகளைப் புரிகிறார். ஆனால், இவையெல்லாம் தனக்காக இல்லை! அவரவர் கர்மப்படி அவரவருக்குண்டான கர்மப் பயன்களை மக்கள் அனைவரும் பெறுமாறு செய்கிறார்.

அந்தப் புருஷனின் அவதாரநெறி அது. ஜன்மங்களுக்கிடையேயான தொடர்பையும் கொஞ்சம் பூடகமாக உணரலாம். இறப்பு என்பது மனித குலத்தைப் பொறுத்தவரை சோகமானது. இறக்கப் போகும் மனிதனும் வருத்தத்தில் ஆழ்கிறான், சுற்றியிருப்பவர்களும் வேதனைக்குள்ளாகிறார்கள். அங்கே அழுகை பொதுவாகிறது. இறப்பவன் உலகை இழக்கிறான், அவனுடைய சொந்த பந்தங்கள் அவனை இழக்கின்றன. ஆகவே அழுகை இவனுக்கும், அவர்களுக்கும் பொதுவாகிறது.

இவனுடைய ஏக்கம், சந்தோஷம் குற்றஉணர்வு ஆகிய படிமங்களைச் சுமந்துகொண்டு இவனுடைய ஆன்மா இன்னொரு உடலைத் தேடிச் செல்கிறது. அடுத்த ஜன்மத்துக்கான ஒரு உடல் கிடைப்பதான வாய்ப்பில் அது கருவுக்குள்ளே ஒடுங்குகிறது. கரு வளர்கிறது, குழந்தை வடிவாகப் பிறக்கிறது.
அவ்வாறு பிறக்கும்போது அந்தக் குழந்தை அழுகிறது! அதாவது முந்தைய ஜன்மத்து இறப்பில் மேற்கொண்ட அழுகையின் தொடர்ச்சி! ‘மீண்டும் மரணத் துன்பத்தை அனுபவிக்கவேண்டுமா?’ என்ற வேதனையின் வெளிப்பாடு! ஆனால், பிறந்த அதே நாளில் அந்தக் குழந்தையின் அழுகை மறைந்துவிடுகிறது, அதனை சந்தோஷம் பற்றிக்கொள்கிறது, அது மலர்ந்து சிரிக்கிறது.

அவ்வளவுதான். அந்தக் குழந்தைக்கு முந்தைய ஜன்மத்தின் நினைவு என்பது, அந்த அழுகை நேரத்தோடு சரி! ஆனால், பிறந்த அந்தக் குழந்தையைக் கண்டு சுற்றியிருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரிக்கிறார்கள். இது புதியதொரு ஜனனத்திற்கான வரவேற்பு. முந்தைய ஜன்மத்தில் இந்தக் குழந்தை யாராக இருந்திருக்குமோ என்ற மர்மம் விலகாத கிளர்ச்சியூட்டும் பரபரப்பு. ஆன்மா இன்னொரு சரீரத்துக்குள் புகுந்து புது ஜன்மம் எடுக்கும்போது, அது முந்தைய பிறவிகள் பற்றிய நினைவுகளைத் துறந்து விடுகிறது.

ஆனால், கிருஷ்ணன் சரீர ரூபமாக இறங்கி வரும்போது, கூடவே முந்தைய ஜன்மம் மட்டுமல்ல, தன்னுடைய முதல் முதலான ஜன்மத்து நினைவுகளையும் கொண்டுவந்துவிடுகிறார். அதனால்தான் அவரால் தம்முடைய ஒவ்வொரு அவதாரத்தின்போதும் தம்முடன் வாழும் மனிதர்களின் மேம்பாட்டுக்கு சில வினைகளை ஆற்ற முடிகிறது. மனிதர்களின் முந்தைய ஜன்மத்து பாவ, புண்ணிய கணக்குகளை அனுசரித்து அவர்களுக்கு அனுபவங்களை அளிக்க முடிகிறது.

அந்த அனுபவங்களில் சில சுகமானதாக இருந்தாலும், சில, படிப்பினையாக முடிகின்றன. படிப்பினைகளால் பக்குவம் பெற்று, தவறைத் திருத்திக் கொள்ளவும், மீண்டும் தவறிழைக்காமலும் பழகிவிடும் மனிதருக்கு, அடுத்த ஜன்மத்தில் கிருஷ்ணன் தரும் படிப்பினை அனுபவங்கள் குறையும்! இப்படி குறைந்து கொண்டே வந்தால், பின்னர் ஒரு ஜன்மத்தில் ஞானிநிலை ஏற்பட்டுவிடும். அப்போது அவர் சொல்வதெல்லாம் பலிக்கும் – மனித சேவையாற்றும் பகவானின் பிரதிநிதியின் பொறுப்பாக!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post ஆன்மா: இரண்டு ஜன்மங்களுக்கு இடையேயான பாலம்! appeared first on Dinakaran.

Tags : Kunkumum ,Srikkrishna ,Arjuna ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!