×

மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மாவிளக்கு போடுதல்

ரேணுகா தேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன், அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் `துளிமாவு’ என்கிற வெல்லம், நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக, மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக்கொண்டு தங்களின் வயிற்றுப்பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுண்டு.

சிலர், மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் திருச்சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர். தீபம் மலையேறியதும், மாவிளக்குகளை ஒன்றாக சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து, அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.

புனிதநீர் கொணர்தல்

சில திருக்கோயில்களில் நடைபெறும் விழாவின் போது, அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக புனிதமான நீர்நிலைகளிலிருந்தும், அருவி மற்றும் திருக்குளங்களிலிருந்தும் புனிதநீரை குடங்களில் நிரப்பி மேளதாளத்துடன் கொண்டுவருவர். பின்னர், அதனை அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.

பொங்கலிடுதல்

பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும். திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதுண்டு. சில கோயில்களில், பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர்.

பொங்கலிடும்போது, பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர். பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே பிரதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தயாரானதும் அதனை பெரிய வாழை இலையில் வைத்து, அதனுடன் பலவகை பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து, அதன் பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து, படையலை நிறைவு செய்வர். பின்னர், அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

படையல் எடுத்தல்

மாரியம்மனுக்கு முன், தலைவாழை இலை போட்டு, அதில் நிவேதனங்களாக பொங்கல், சாதம் போன்றவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பழவகைகள், தேங்காய், இளநீர், பானகம், நீர்மோர், இனிப்பு பட்சணங்கள் போன்ற எல்லா பதார்த்தங்களையும் வைத்து மாரியம்மனுக்கு நிவேதனம் செய்வர். அந்த சமயத்தில், மாவிளக்குகள் ஏற்றுவதும் உண்டு. இதன் முடிவில் பெரிய தீபாராதனை நடைபெறும். பின்னர், நிவேதன பதார்த்தங்களை பக்தர்கள்
எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

மஞ்சள் நீராட்டு விழா

மாரியம்மன் திருக்கோயில் உற்சவத்தின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறுவது, மஞ்சள் நீராட்டு விழாவாகும். மஞ்சள் நீராட்டு விழாவன்று மாரியம்மன் மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு, ஊரை வலம் வருவாள். அவ்வாறு வரும்போது பக்தர்களின் வீடுகளில் மஞ்சள் நீர் ஆராதனையை ஏற்று கற்பூரதீப வழிபாடு நடக்கும். வலம் வந்து முடிந்தபின் மீண்டும் கோயிலுக்குத் திரும்புவாள். அதன் பிறகு, மஞ்சள் நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். பக்தர்கள், அன்று மஞ்சள் ஆடையை அணிந்து மஞ்சள் பூசிக்கொள்வர். சாமியாடுவோரின் பாதங்களை மஞ்சள்நீரால் கழுவுவர். இதனை ஒரு சடங்காகவே நடத்துவர்.

இத்துடன் விழா இனிதே நிறைவு பெறும். விழாவில் தொடக்கத்தில் போடப்பட்ட பந்தல், அலங்காரங்கள், தோரணங்கள், கொடியேற்றப்பட்ட கம்பம் போன்றவை ஒவ்வொன்றாக விழா முடிந்த சில தினங்களில் அகற்றப்படும்.

தொகுப்பு: விஜயலட்சுமி

The post மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் appeared first on Dinakaran.

Tags : Mariamman ,Renuka Devi ,Avvur ,
× RELATED தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்