×

கொடுத்த கடனை கேட்டு வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை: புளியந்தோப்பு பகுதியில் பரிதாபம்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கொடுத்த கடனைக் கேட்டு கந்துவட்டிக்காரர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றதையடுத்து, ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைந்து தூக்கில் தொங்கி லோடுமேன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் சுந்தர் (27). எழும்பூர் பகுதியில் டிராவல்ஸ் கம்பெனியில் லோடுமேன் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், தனுஷ்கா (4), கயல் (3), ஒன்றரை வயதில் கனு ஆகிய 3 மகள்கள் உள்ளனர். குடும்ப தேவைக்காக அதே பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி என்பவரிடம் 8 மாதங்களுக்கு முன்பு ஷாம் சுந்தர் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அவர் வட்டி கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அஸ்கர் அலி, முழு பணத்தையும் கேட்டு அடிக்கடி ஷாம் சுந்தருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஷாம் சுந்தர் வீட்டிற்கு வந்த அஸ்கர்அலி, வீட்டில் யாரும் இல்லாதை பார்த்துள்ளார். ஏற்கனவே பூட்டி இருந்த வீட்டு கதவுக்கு அவர் மற்றொரு பூட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனை அறிந்த ஷாம் சுந்தர், அஸ்கர் அலியிடம் விரைவில் பணத்தை கொடுத்து விடுவதாகவும், குழந்தைகள் உள்ளதால் வீட்டை திறந்து விடும்படியும் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அஸ்கர் அலி வீட்டை திறக்க முடியாது எனக் கூறிவிட்டார். இதனையடுத்து ஷாம் சுந்தர் அங்கிருந்து சென்று விட்டார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி மீனாட்சி, வீட்டுக்கு வந்ததும் ஷாம் சுந்தரை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கும் அவர் கிடைக்காததையடுத்து இறுதியாக இரவு 12 மணி அளவில் தயவுசெய்து வீட்டு சாவியை தந்து விடுங்கள், குழந்தைகள் சாலையில் நிற்கிறார்கள், பணத்தை நான் எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று கூறிய மீனாட்சி, அஸ்கர் அலியிடம் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை திறந்தபோது, படுக்க அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் ஷாம் சுந்தர் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனாட்சி கதறி அழுதுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஷாம் சுந்தர் உடலை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அஸ்கர் அலி சாவியத் தர மறுத்ததும், வீட்டின் ஜன்னலை உடைத்து ஷாம் சுந்தர் வீட்டிற்குள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை கே.பி.பார்க் பகுதியில் 10வது மாடியில் குடியிருக்கும் அஸ்கர் அலியை (39) போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு கடன் தொல்லையால் தந்தை தற்கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கொடுத்த கடனை கேட்டு வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை: புளியந்தோப்பு பகுதியில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Loduman ,Pulianthoppu ,Perambur ,tamarind ,
× RELATED பணம் திருடியவர்களை பிடிக்க...