×

பாச்சுவும் அத்புத விளக்கும்!

ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் உணர்வுகள் சூழ் மலையாளப் படம். தமிழ் டப்பிங்கிலும் இப்படம் காணக் கிடைக்கிறது. மும்பையில் ஒரு ஆயுர்வேத பார்மசி நடத்திவரும் பாச்சு எனும் இளைஞன், கேரளாவில் இருக்கும் தன் அப்பா,அம்மாவை சந்தித்துவிட்டு அப்படியே தன் திருமணத்திற்காக பெண் பார்க்கவும் வருகிறார். வேலை முடிந்து திரும்பிச் செல்லும்பொழுது மும்பையில் இருக்கும் தன்னுடைய முதலாளியின் எழுபத்திரண்டு வயதுள்ள உம்மாவை கேரளாவிலிருந்து தன்னுடன் கூட்டிச்செல்லும் பொறுப்பு முதலாளியால் பாச்சுவுக்குக் கொடுக்கப்படுகிறது. உம்மா சகிதமாக ஏசி கோச்சில் ஏறிச் செல்கிறார் பாச்சு. ஆனால் பாச்சு கண் அயர்ந்த வேளையில் கோவாவில் இறங்கி ஓடிவிடுகிறார் உம்மா. இதைப்பார்த்து உம்மா பின்னாலேயே இறங்கும் பாச்சுவின் பயணங்களாகக் கதை நகர்கிறது. இவர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுவிட்டு தனியாக மும்பைக்குச் செல்லும் சிறுவனும் இணைந்துகொள்ள பயணம் இன்னும் சுவாரஸ்யமாகிறது.

ஒரு வழியாக உம்மாவைத் தேடிப் பிடித்து முதலாளியிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் தறுவாயில், உம்மா தான் ஏன் கோவாவில் இறங்கினார் என்பதற்கான கதையைச் சொல்கிறார். நிதி என்னும் ஏழைச் சிறுமியின் தாய் உம்மாவின் வீட்டில் வேலை செய்ததாகவும், நிதியின் படிக்கும் ஆர்வத்தால் தன் சொந்த செலவில் படிக்க வைத்திருக்கிறார் உம்மா. ஆனால் நிதியின் குடும்பச் சூழலால் அவளது தாய் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள நிதியின் படிப்பு நிறுத்தப்படுகிறது. மேலும் நிதிக்கு இரண்டு தங்கைகள் இருக்கவே வேலைக்காக கோவாவில் உள்ள தன் பாட்டியின் வீட்டிலிருந்து அங்கே இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு வேலைக்குச் செல்கிறாள். அவளைப் படிக்க வைக்கவும், அவள் வாழ்வை முன்னேற்றவும்தான் உம்மா கோவாவில் இறங்கியதாகக் கூறுகிறார். கதையைக் கேட்டு தான் செய்த தவறு அறிந்து வருந்துகிறார் பாச்சு. நிதியை அழைத்து வந்தால் மும்பையில் இருக்கும் மருந்துக்கடையை உனக்கே சொந்தமாக்கு கிறேன் என உம்மா பாச்சுவுக்கு வேலை கொடுக்க புறப்படுகிறார் பாச்சு. ஒரு கட்டத்தில் ஒரு சிறுமியின் படிப்புக்காகத் தான் போராடுகிறோம் என்னும் உணர்வு மேலோங்க உயிரையே பணயம் வைத்து நிதியைக் கூட்டிக்கொண்டு வர முயற்சிக்கிறார் பாச்சு. இப்படி படம் முழுக்க ஒரு சிறுமியின் படிப்பு, ஒரு வயதான பெண்ணின் ஆசை, நிம்மதி, மேலும் பாச்சுவுக்கு திடீர் தோழியாகும் ஹம்சத்வானியின் தனிமையான வாழ்க்கை என படம் முழுக்க உணர்வுகளைக் கடத்துகிறது.

பாச்சுவாக ஃபகத் ஃபாசில், உம்மாவாக விஜி வெங்கடேசன், சிறுமி நிதியாக த்வானி ராஜேஷ், ஹம்சத்வானியாக அஞ்சனா ஜெயபிரகாஷ் இன்னும் சில பளிச் கேரக்டர்களாக படம் முழுக்கவே உணர்வுக் குவியலாக நம்மைக் கடத்துகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம், அதற்காக எத்தனையோ பெண் பிள்ளைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என நிதியின் கதாபாத்திரம் மூலம் மிக அழகாக சொல்லிச் செல்கிறது அகில் சத்யன் இயக்கத்தில் இந்த ‘பாச்சுவும்
அத்புத விளக்கும்’ மலையாளப் படம்.

The post பாச்சுவும் அத்புத விளக்கும்! appeared first on Dinakaran.

Tags : Senshavam Suth ,OTD ,Mumbai… ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!