×

பெரியபாளையத்தில் இன்று முதல் ஆடித்திருவிழா: 300 போலீசார் பாதுகாப்பு பணி

 

ஊத்துக்கோட்டை, ஜூலை 17: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானியம்மன் திருக்கோயிலில் இன்று முதல் 10 வாரங்களுக்கு ஆடித்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தரவிருக்கின்றனர். இவர்கள் சனிக்கிழமை இரவு தங்கி, மறுநாள் ஞாயிறன்று அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணிந்து, பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பவானியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, வார விடுமுறை நாட்களில் 10 வாரத்துக்கும் டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் 250 போலீசார், 50 ஊர்க்காவல் படையினர் என 300 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், இத்திருவிழாவின்போது சூதாட்டம், திருட்டு, பிக்பாக்கெட் மற்றும் விபசாரம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களை போலீசார் மாறுவேடங்களில் கண்காணிக்கின்றனர்.

மேலும், ஆடித்திருவிழா நடைபெறும் 10 வாரங்களுக்கும் வார விடுமுறை நாட்களில் ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் லாரி உள்பட பல்வேறு கனரக வாகனங்களை ஊத்துக்கோட்டையில் மடக்கி திருவள்ளூர், சத்தியவேடு வழியாகவும், சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் ஜனப்பன்சத்திரத்தில் மடக்கி சத்தியவேடு வழியாகவும் திருப்பி விடப்படும் என டிஎஸ்பி கணேஷ்குமார் தகவல் தெரிவித்தார்.

The post பெரியபாளையத்தில் இன்று முதல் ஆடித்திருவிழா: 300 போலீசார் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : festival ,Periyapalayam ,Oothukottai ,Adithiruja ,Sri Bhavaniyamman temple ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...