×

மெக்கானிக்கை தாக்கிய எஸ்ஐயை கண்டித்து பொன்னேரி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

பொன்னேரி, மார்ச் 18: பொன்னேரியில், காவல்துறை உதவி ஆய்வாளருக்கும், பைக் மெக்கானிக்குக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பைக் மெக்கானிக்கை தாக்கிய உதவி ஆய்வாளரை கண்டித்து பொன்னேரி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. பைக் மெக்கானிகான இவர், நேற்று முன்தினம் மாலை பொன்னேரி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, அருகே சீருடையின்றி மப்டியில் இருந்த உதவி ஆய்வாளருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த இளைஞரை உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த இளைஞரின் உறவினர்கள் ஆர்டிஓ அலுவலக சாலையில் ஒன்று திரண்டு காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சாதிக் பாஷாவை தாக்கிய உதவி ஆய்வாளர் மது போதையில் இருந்ததாகவும், அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாதிக் பாஷாவை தாக்கியவர், சென்னையைச் சேர்ந்த தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் என்பதும், ஒரு வழக்கு தொடர்பாக பொன்னேரிக்கு வந்திருந்ததாகவும், அப்போது சீருடை இல்லாததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் முறையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொன்னேரி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே, காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியதால் காயமடைந்த பைக் மெக்கானிக் சாதிக் பாஷா பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் காரணமாக பொன்னேரி காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது

Tags : Ponneri police station ,SI ,Ponneri ,Sadik ,Ponneri, Tiruvallur ,
× RELATED திருத்தணி தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்