×

டெல்லியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தலா ரூ.10,000; முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட யமுனை கரையோர மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும்,’ என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் பெய்த கனமழையாலும், யமுனை நதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யமுனை கரையோரத்தில் வசித்த மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், சாலைகளிலும், அரசின் நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கி உள்ளனர். ஆற்றில் வெள்ளம் தற்போது குறைந்து வருவதால், யமுனை காட் உள்ளிட்டசில பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரையும், சேறுசகதிகளையும் அவர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், முகாம்களில் தங்கி உள்ள மக்களை முதல்வர் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘யமுனை கரையோரம் வசித்து வந்த ஏழை மக்கள், வெள்ளத்தால் தங்கள் வீடுகளையும், தங்களின் பொருட்களையும் இழந்துள்ளனர். இவர்கள் தாங்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்காக, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு, இந்த தொகை அவர்களுக்கு உதவியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

The post டெல்லியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தலா ரூ.10,000; முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,New Delhi ,Yamuna ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...