×

இந்த வார விசேஷங்கள்

மாதசிவராத்ரி, சனி பிரதோஷம்
15.7.2023 – சனி

இன்று சிவனுக்குரிய சிவராத்திரி. பிரதோஷம். காலை சந்திரனுக்குரிய ரோகிணி. பிறை சூடிய பெம்மான் அல்லவா. எத்தனை பொருத்தம் பாருங்கள். சனி மகா பிரதோஷம் வேறு, சிவபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மாத சிவராத்திரி என்கிறோம். அமாவாசைக்கு முந்தைய நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த விரதம் இருப்போருக்கு, நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடையும் உன்னதமான நற்பேறு கிடைக்கும்.

இந்த ஆடி மாதம் சிவராத்திரி முருகனால் வழிபடப் பட்டது. அதோடு சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் சிறப்பு. இன்று விரதமிருந்து சிவ வழிபாடு செய்வதும், சிவதரிசனம் செய்வதும், சிவநாமங்களைச் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். மாத சிவராத்திரியில், சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை.

இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் விலகும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இன்று பாட வேண்டிய பாடல்

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

சோம வார ஆடி அமாவாசை
17.7.2023 – திங்கள்

இன்று ஆடி மாதப்பிறப்பு. தட்சிணாயன புண்யகாலம். அதோடு சோம வார அமாவாசை. இந்த மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. ஆடி 1-ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று அமாவாசை வருகிறது. ஆடி 1-ஆம் தேதி வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும், ஆடி 31-ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது. எனவே இரண்டு அமாவாசை நாட் களிலும் பித்ரு தர்ப்பணம் தரலாம். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு பித்ரு கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாகச் சென்றடையும். ஒரே மாதத்தில் 2 அமாவாசை திதி வருகின்ற மாதத்தை ‘மலமாதம்’ என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இத்தகைய மலமாதத்தில் புதுமனை புகுவிழா, நிச்சயதார்த்தம், திருமணம், நிலைவாசல் படி ஸ்தாபித்தல், புது கிணறு வெட்டுதல் போன்ற எத்தகைய சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஆடி மாதம் என்பதால் திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய மாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் சுபகாரியம் செய்ய முடியாமல் போகுமே என்று கவலைப்படத் தேவையில்லை. ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய்காரகன் சந்திரன், தந்தைகாரகன் சூரியனுடன் இணைகிறார். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.

முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அன்று நம்மைக் காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். அமாவாசை நாளில் தானம் தர வேண்டும். எள் என்பதை வட மொழியில் திலம் என்று கூறுவார்கள். ‘திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:’ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் செல்வங்கள் உண்டாகும்.

புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானத்தாலும் கோ பூஜை வழிபாட்டாலும் பித்ருசாப தோஷங்கள் விலகும். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையும் இணைந்த நாள் அமாசோமவாரம். இந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும். வேண்டிய வரம் கிடைக்கும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் 5 கருட சேவை
18.7.2023 – செவ்வாய்

தென் தமிழ் நாட்டிலே பிரசித்தி பெற்ற வைணவத் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதாரத்தலமாக அமைந்த சிறப்பு இந்த ஒரு ஊருக்கு மட்டுமே உண்டு. அதுவும் இரண்டு ஆழ்வார்களும் தந்தையும் மகளுமாக இருப்பது அதைவிட சிறப்பு. மூன்றாவது சிறப்பு மகளாக அவதரித்தவர் சாதாரண மானிடப் பெண் அல்ல; பூமாதேவியே என்பது சிறப்பு. அந்தப் பெண்ணை பெருமாளே திருமணம் செய்து கொண்டார் என்பது அதைவிடச் சிறப்பு. பூமா தேவி துளசிச் செடியின் அடியிலே ஒரு பெண்ணாக அவதரித்து, பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டார். அவள் சூடிய மாலையைத் தான் பெருமாளே விரும்பிச் சூடினார் என்பதால், அவளுக்கு “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’’ என்று பெயர்.

பகவானை பக்தியாலும் தமிழாலும் ஆண்டதால் ஆண்டாள் என்று பெயர். அவள் அவதரித்த மாதம் ஆடி மாதம், பூர நட்சத்திரம்.

கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம்
பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம்

– என்ற மங்கள ஸ்லோகம் இதை விளக்குகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆண்டாளின் அவதார உற்சவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும். ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா இந்த ஆண்டு 14.7.2023 முதல் 25.7.2023 வரை நடைபெறுகிறது. 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மிக முக்கியமான நிகழ்வான இன்று பெரியாழ்வார் மங்களசாசனத்துடன் 5-ஆம் நாள் திருவிழா ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நான்கு வீதிகளிலும் பஜனை பாடல்களோடு பாகவதர்கள் எழுப்பும் நாம சங்கீர்த்தனம் விண்ணைத் தொடும்.

காலை திருவாடிப்பூர பந்தலிலே பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்வார். ஸ்ரீபெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்காலப்பன், ஸ்ரீஆண்டாள் ரங்க மன்னர் அனைவரும் இணைந்து இரவு கருட சேவையாக வீதிவலம் வருவார்கள். இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வலம் வரும் காட்சி அதி அற்புதமாக இருக்கும். 19-ஆம் தேதி தங்கமயமான தந்த பல்லக்கில் ஆண்டாள் வீதி உலா வர, மாலை ஸ்ரீரங்க மன்னர் யானை மீது வலம் வருவார்.

20-ஆம் தேதி காணவே கிடைக்காத அற்புதமான காட்சியான ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்கமன்னார் தலை சாய்ந்து சயன கோலத்தில் இருக்கும் ஆண்டாள் சயனமடிக் கோலம் காணக் காண அற்புதமான அதிசயம். இது கிருஷ்ணன் கோயிலில் நடைபெறும். 21-ஆம் தேதி ஆண்டாளுக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் குழுமி தேரை வடம் இழுப்பார்கள். திருமாலிருஞ் சோலை கள்ளழகர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மாலை பரிவட்டம் ஆண்டாளுக்கு அனுப்பப்படும். 23-ஆம் தேதி பத்தாம் நாள் திருவிழா, ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கேட்கும் நிகழ்ச்சி. அரையர் சேவை அதிஅற்புதமாக இருக்கும்.

மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்
20.7.2023 – வியாழன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவம் நடக்காத மாதமே இல்லை என்று சொல்லலாம். உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் இருக்கும் அதிசயம் மதுரையில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. அதில் இன்றைய உற்சவம் முளைக் கொட்டு உற்சவம். `ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளைநிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள்.

அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. நல்ல மழை பெய்து நாடெல்லாம் செழிக்க வேண்டிய பிராத்தனை உற்சவம் இது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்திசேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7-வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8-ஆம் நாள் குதிரை, 9-ஆம் நாள் இந்திர விமானம், 10-ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

தொகுப்பு:விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Mathasivarathri ,Sani Prathosha ,Sani ,Shivratri ,Shivanukuriya ,
× RELATED இந்த வார விசேஷங்கள்