×

பிரதோஷ பிரதட்சணம் ஆரம்பித்த தலம்

சென்னை – கோயம்பேடு

சுறுசுறுப்பான சென்னை பட்டினத்தின் போக்குவரத்து சங்கமமும், காய்கனி வர்த்தகமும் ஒருங்கே அமையப்பெற்ற ‘கோயம்பேடு’ இதிகாச பெருமை வாய்ந்தது என்று அறியும்போது, வியப்பாகத்தான் இருக்கிறது. குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் இருவரும் எழுந்தருளியுள்ள சிவ வைணவத் திருத்தலம் இது. திரேதா யுகத்தில் தோன்றிய மிகப் பழமையான கோயிலாக நம்பப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் ‘குறுங்காலீஸ்வரர்’, ‘குசலவபுரீஸ்வரர்’ என்ற நாமங்களுடன் வடக்கு நோக்கியும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, வைகுண்டவாசப் பெருமாள் என்ற நாமத்தோடு கிழக்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர்.

அரச மரத்தடி விநாயகர் தெற்கு முகமாகவும், லவ-குச புஷ்கரணி தீர்த்த கரையில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கியும் கொலுவிருந்து பக்தர்களுக்கு அருள்கின்றனர். இவ்விரு கோயில்களின் நடுவே அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் சரபேஸ்வரர் அவதார காட்சி சுதை சிற்பங்களாக அமைந்துள்ளது. சீதையை சிறை மீட்டு திரும்பிய ராமன், முடி சூட்டிக்கொண்டு ராஜபரிபாலனம் செய்து வந்தார். அச்சமயம் தன் குடிமகன் ஒருவனது விமரிசனத்தின் விளைவாக சீதையை காட்டிற்கு அனுப்பினார். கர்ப்பிணியான சீதை, காட்டில் வாழ்ந்த வால்மீகி முனிவரிடம் அடைக்கலம் புகுந்தாள். அங்குலவன், குசன் என்ற ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வந்தாள்.

தான் மேற்கொண்ட அஸ்வமேத யாகத்தின் நிறைவாக, தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் வகையில் ராமர் அனுப்பி வைத்த குதிரை லவ-குசர் வாழ்ந்த காட்டின் எல்லைக்குள் வந்தது. அந்த குதிரை வந்ததன் நோக்கம் புரியாமல் விளையாட்டாக, அதைப் பிடித்து கட்டி வைத்தனர் அந்த பாலகர்கள். இதையறிந்த ராமன் தன் குதிரையை மீட்க சகோதரர்கள் லட்சுமணன், பரதன், சத்ருக்னகன் ஆகியோரை காட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் லவ-குசன் போரிட்டு தோல்வியுறச் செய்தனர். பிறகு ராமனே அவர்களுடன் போரிட வந்தபோதுதான் வால்மீகி உண்மை உணர்ந்து தந்தை-பிள்ளைகளை ஒருவருக்கொருவர் ‘அறிமுகப்படுத்தி’ இணைத்து வைத்தார்.

பிறகு, லவகுசன் இவ்விடத்தில் ஈஸ்வரனை நோக்கி தவமிருந்ததாகவும், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனமளித்த மஹேஸ்வரன் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்கு அங்குலமாக குறுகி காட்சியளித்து மகிழ்வித்ததாகவும் இக்கோயில் தல வரலாறு கூறுகிறது. வடக்கு நோக்கி அமையப்பெற்ற இக்கோயிலின் உள்ளே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றை கடந்து சென்றால் நாற்பதுகால் பொது மண்டபத்தின் வலப்புறமாக சுவாமி குறுங் காலீஸ்வரர் சந்நதியை அடையலாம். நான்கு அங்குல உயரத்தில், சிறிய சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார், சுவாமி.

எனவே, ‘குறுங்காலீஸ்வரர்’ என்றும், குசலவன் வழிபட்டதால் ‘குசலவபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கு வலப்புறம் தர்மசம்வர்த்தினி என்றும், அறம் வளர்த்த நாயகி என்றும் போற்றப்படும் இத்திருத்தல அன்னை, கருணைப் பார்வை அருள்கிறாள். சிவமந்திர சக்திகளோடு அம்மன் தனது 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளைப் பெற்றுத் திகழ்கிறாள்.

திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், தன்னை பாதிக்காத அகந்தையில் இருந்த நந்திக்கு அவனுடைய அகங்காரத்தை இத்தலத்து அன்னை தெளிவித்தார். நந்திபெருமான் மூக்கணாங் கயிற்றுடனும், அன்னை இடது பாதத்தை முன் வைத்துக் காட்சியளிப்பதும், இச்சம்பவத்தை உண்மை என நிரூபிக்கின்றன. ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட மேற்கூரையுடைய சிம்ம வாகினியான அம்பாளின் சந்நதியில் உள்ள ஒரு தூணில் ஜிகுனு மகரிஷி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் இத்தலத்தில் தங்கி, ஆயிரம் பிரதோஷம் கண்டு இறையருள் பெற்றவர் என்ற பெருமையுடையவர்.

சுவாமி மற்றும் அம்பாள் சந்நதிகளுக்கிடையே நவகிரக சந்நதியும், நாற்பதுகால் மண்டபமும், மிகுந்த சிற்பக்கலை அம்சத்துடன் விளங்குகின்றன. இம்மண்டபத்தில் உள்ள கல் தூண்களில் ராமாயணக் காட்சிகள், தத்ரூபமாக சிற்பக்கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலில் ராமரின் அஸ்வமேத யாக குதிரையை லவகுசன் அடக்கி பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி காண்போர் விழிகளை வியப்பால் விரிய வைக்கும்.

பஞ்சவர்ண நவகிரக சந்நதி இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு. ஒரு சதுர மேடையில் தாமரை வடிவில் கிரகங்கள் அமைந்து அதன் மேல் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய ரதம் நிற்கிறது. நடுவே சூரிய பகவான் தன் இரு மனைவியருடன் அமர்ந்து ரதத்தை செலுத்துகிறார். யானைகளின் துதிக்கை வடிவில் அதன் அச்சு அமைந்துள்ளது. சூரிய பகவானைச் சுற்றிலும் மற்ற கிரக அதிபதிகள் தத்தமது வாகனங்களுடன் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுறக் காட்சியளிக்கின்றனர்.

12 ராசிகளும் அழகிய பூ வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டுள்ளது, கூடுதல் அழகு, சிறப்பு. பீடத்திற்கு வெள்ளைக் கல், தாமரைக்கு சிவப்புக் கல், ரதம் கருப்புக் கல், நவகிரகங்கள் பச்சைக் கல், தளத்திற்கு மஞ்சள் கல் என ஐந்து நிறங்களில் அமைந்து சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது, இந்த புதுமையான பஞ்சவர்ண நவகிரக சந்நதி. உலகிலேயே பிரதோஷ வழிபாடு முதன் முதலில் தோன்றியது இக்கோயிலில்தான் என்கின்றனர்.

ஆதி பிரதோஷம் நடைபெற்ற இத்தலத்தில்தான் ‘சோமஸீத்தம் எனப்படும் பிரத்யேகமான பிரதோஷ பிரதட்சிணம் தோன்றியதாம். இக்கோயிலில் ஒருமுறை பிரதோஷ தரிசனம் செய்தவர்கள், ஆயிரம் பிரதோஷ வழிபாட்டுப் பலனை அடைவதாக நம்பிக்கை நிலவுகிறது. முன் வாயிலில் உள்ள 16 கால் மண்டபத்தில் சரபேஸ்வரர் சந்நதி உள்ளது. ஞாயிறு தோறும் ராகு காலத்தில் அவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் சுமார் 6000 பேர் கலந்துகொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர்.

பித்ரு சாபம் நீங்கவும், தீய சக்திகளிலிருந்து விடுதலையடையவும் சரபேஸ்வரர் அருள் வேண்டி பூஜைகள் நடத்தப்படுவதாக கூறுகிறார்கள். வியாழக்கிழமைகளில் பால் குடம், விளக்கு பூஜை, அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும் அளிக்கப்படுகிறது. சிவபெருமான் சந்நதிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார் வைகுண்ட வாசப் பெருமாள். தன்னிரு தேவியருடன், நாற்கரங்களில் சங்கு சக்கரம், வில், அம்புடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலி-பீடம், கருடாழ்வார் சந்நதி உள்ளன. வலப்புறம் உள்ள மண்டபத்தில் வால்மீகி முனிவர், லவகுச திருவுருவங்கள் மற்றும் ஆழ்வார்களின் உருவங்களும் உள்ளன. பெருமாள் சந்நதியின் இருபுறமும் தாயார் கனகவல்லி, ஆண்டாள் சந்நதிகள் உள்ளன. இக்கோயில் நந்தவனத்தில் இரண்டு வில்வ மரத்திற்கிடையில் பின்னி பிணைந்த நிலையில் வேம்பும் அமைந்துள்ளது. இதனை ‘பார்வதி சுயம்வரா விருட்சம் என்று அழைக்கிறார்கள். திருமணம் நடக்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

அனைத்து உற்சவங்களும் நடைபெறும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை களில் மாலையில் ஆன்மிக இலக்கிய சொற்பொழிவு நடைபெறுகிறது. இங்குள்ள ‘லவகுச புஷ்கரணி தீர்த்தம் ராமாயண காலத்தில் லவகுசரால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சிவ வைணவ திருத்தலங்கள் ஒரே இடத்தில் அமைந்து அவை இரண்டுக்கும் ஒரே திருக்குளமான இத்தீர்த்தம், நம் முன்னோர்களது சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இக்கோயிலின் சிறப்புகள் அடங்கிய புராதனமான 16 கல்வெட்டுகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புராண, இதிகாச சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தின் கிழக்கே பெருமாள், வடக்கே சிவன், மேற்கே ஆஞ்ச நேயர், தெற்கே விநாயகப் பெருமான் என்று நான்கு திசைகளிலும் தெய்வங்கள் அமையப் பெற்று மக்களுக்கு அருள் புரிந்து வருவது எங்கும் காணவியலாத தனிச் சிறப்பு.

இத்தனை சிறப்புகள் பெற்ற இவ்வாலயங்களுக்கு பல்லவ மன்னர்களும், மூன்றாம் குலோத் துங்க சோழனும், விஜயநகர மன்ன-னான புக்கராயர் ஆகியோரும் திருப்பணிகள் செய்து பேறு பெற்றுள்ளதாக குறிப்பேடுகள் கூறுகின்றன. மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது என்பதை இத்திருக்கோயிலை
தரிசித்தாலேயே உணர முடியும்.

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பிரதோஷ பிரதட்சணம் ஆரம்பித்த தலம் appeared first on Dinakaran.

Tags : Prathosa Pradatshana ,Chennai ,Coimbade Agile Chennai starvation transport ,Goimbade ,Prathosha Pradatshana ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...