×

கோடி பலனைத் தந்தருளும் ருத்திரகோடீஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒரு முறை அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்களும் முனிவர்களும், ஈசனிடம் முறையிட்டார்கள். அவர்கள் மீது கருணை கொண்ட இறைவன் தனது உடலில் இருந்து, கோடி ருத்திரர்களை படைத்தார். பெரும் ஜடா முடியும், புலித்தோல் ஆடையும், கபால மாலையும், நாகாபரணமும் பூண்டு கை களில் பலவிதமான ஆயுதங்கள் தாங்கி படு பயங்கரமாக இருந்தார்கள் அவர்கள். அந்த ருத்திர கணங்கள், ஈசனின் அடிபணிந்து அவரது கட்டளைக்காக காத்திருந்தார்கள்.

அவர்களை கண்டு புன்னகை பூத்த இறைவன், அரக்கர்களை அழித்துவிட்டு வருமாறு பணித்தார். ஈசன் கட்டளைப் படியே, அரக்கர்களை அழித்து உலகை காத்து வந்தார்கள் இந்த கோடி ருத்திரர்கள். காலம் உருண்டு ஓடியது. தேவர்கள், அமுதம் வேண்டி பாற்கடலை கடைய சித்தம் ஆனார்கள். பாற்கடலை கடைய மத்து வேண்டுமே? பாற்கடலை கடைய உகந்த மத்து மந்தாரமலைதான் என்று தீர்மானித்தார்கள். ஆகவே, மந்தார மலையை பூமியில் இருந்து பெயர்த்து எடுத்தார்கள். ஆனால், அப்போது நடக்கக் கூடாத விபரீதம் ஒன்று நடந்தது. மந்தார மலையை பெயர்த்து எடுத்ததால் பூமியில் ஒரு பெரிய குழி உருவானது.

அந்த குழியின் வழியே அதலபாதாளத்திலிருந்து கோர உருவம் கொண்ட பல அசுரர்கள் வெளியில் வந்து உலகிற்கு பல இன்னல்கள் தந்தார்கள். அவர்கள் அக்கிரமம் தாங்காமல் ஈசனிடம் மீண்டும் சென்று முறையிட்டார்கள், ரிஷிகளும் தேவர்களும். மீண்டும் இறைவன் ருத்திர கணங்களை அழைத்து, அந்த அசுரப் பதர்களை அழித்து ஒழிக்கும்படி கட்டளையிட்டார். ஈசன் கட்டளைப் படியே அந்த அசுரர்களை ருத்திர கணங்கள் அழித்தது.

ஆனாலும், அந்த அரக்கர்கள் போன ஜென்மத்தில் பெரும் சிவ பக்தர்களாக இருந்ததால், சிவ பக்தர்களை கொன்ற பாவம், ருத்திர கணத்தை சூழ்ந்து கொண்டது. பாவம் நீங்க வழி சொல்லுமாறு ருத்திர கணங்கள், ஈசனை முறையிட்டது. தமிழகத்தில் வேதமே மலையாகி தன்னை வழிபட்ட திருத்தலமாக விளங்கும் திருக்கழுக்குன்றம் சென்று தன்னை பூஜிக்கும்படி கட்டளையிட்டார்.

ஈசன் சொல்படி பூமிக்கு வந்த ருத்திர கணங்கள், திருக்கழுக்குன்ற மலை அடிவாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் அங்கே காலடி எடுத்து வைத்ததும் அங்கே கோடி சிவலிங்க ரூபங்கள் தோன்றியது. ருத்திர கணத்தை சேர்ந்த ஒவ்வொரு ருத்திரரும் ஒரு லிங்கத்தை பூஜிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்த சிவபூஜையின் மகிமையால் அவர்களை சூழ்ந்த பாவம் அவர்களை விட்டு ஓடியது.

அவர்களும் பய பக்தியோடு தங்கள் பூஜையையும் தவத்தையும் தொடர்ந்து செய்து வந்தார்கள். அவர்களது தவத்தையும், பக்தியையும் மெச்சி தக்க சமயத்தில் காட்சி தந்தார் சிவபெருமான். விடை ஏறி வந்த பரம் பொருள் “ வேண்டும் வரம் யாது?’’ என்று அவர்களை வினவினார்.“உங்களை நாங்கள் பூஜித்து அருள் பெற்றதன் நினைவாக, இந்த ஊரும், நாங்கள் உருவாக்கிய தீர்த்தமும், இங்கு குடிகொண்டு அருளப்போகும் உங்கள் பெயரும், எங்கள் பெயருடனேயே விளங்க வேண்டும். நாங்கள் பூஜித்த இந்த தலத்தில் நீங்கள் என்றென்றும் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டி, இறைவனின் பாதக் கமலங்களை பணிந்தார்கள் ருத்திர கணங்கள்.

அவர்கள் விரும்பிய படியே வரம் தந்து மறைந்தார், வரத மூர்த்தியான இறைவன். இறைவன் மறைந்த அடுத்த நொடி ருத்திர கணங்கள் பூஜித்த கோடி லிங்கங்கள் வானில் பறக்க ஆரம்பித்தன. பறக்க ஆரம்பித்த லிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போல ஒன்றை நோக்கி மற்றொன்று சென்றது. ஆனால், லிங்கங்கள் உண்மையில் மோதிக் கொள்ளவில்லை. ஒன்றுக்குள் மற்றொன்று ஐக்கியமானது. இப்படியே கோடி லிங்கங்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டறக் கலந்து, ஒன்றாக ஒரே சிவ (சுயம்பு) லிங்கமாக காட்சி தந்தது. கோடி லிங்கங்கள் சேர்ந்து ஒரே லிங்கமான அதிசயத்தை கோடி ருத்திரர்களும் பார்த்து பரவசம் அடைந்தார்கள்.

கைகளை சிரத்தின் மேல் குவித்து “சம்போ சங்கரா’’ என்று உருகிப் போனார்கள். கோடி ருத்திரார்கள் பூஜித்த லிங்கங்களும் ஒரே லிங்கமாகி, அற்புத கோலம் காட்டிய ஈசனுக்கு “ருத்திர கோடீஷ்வரர்’’ என்ற திருநாமம் வழங்கப் பட்டது. ஊருக்கு ருத்திரகோட்டீஷ்வரம் என்ற பெயர் வந்தது. கோயிலின் வாசலுக்கு அருகில் இருக்கும் தீர்த்தம், “ருத்திர கோடி தீர்த்தம்’’ என்று அழைக்கப்படுகிறது.

ஒரு முறை இந்த தலத்து இறைவனை, கருட வாகனம் ஏறி, திருமால் தரிசிக்க வந்தார். கோயிலின் வாசலில் இறங்கிய திருமால், கருடனை வாயிலிலேயே இருக்கும் படி பணித்துவிட்டு கோயிலின் உள்ளே சென்றார் திருமால். உள்ளே சென்ற திருமால் வெகு நேரமாகியும் வெளியே வராததால், கருடனும் கோயிலுனுள் செல்ல முயன்றார். ஈசன் அனுமதி இல்லாமல் உள்ளே செல்லக் கூடாது என்று நந்திதேவர் அவரைத் தடுத்தார்.

இதனால் கோபமடைந்த கருடனுக்கும் நந்திக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. கோபமடைந்த நந்திதேவர், ஒரு முறை சுவாசத்தை இழுத்து விட்டார். அதனால் கருடனின் சிறகெல்லாம் பறந்து போய், அவரும் வானத்தில் இங்கும் அங்கும் அந்த மூச்சுக் காற்றால் பறந்து அல்லல் பட்டார்.

இறுதியில் பூமியில் புதையுண்டும் போனார். இதற்கிடையில் நிகழ்ந்ததை அறிந்த திருமால் ஈசனிடம் வேண்ட, ஈசன் கருடனைக் காத்து அருள்புரிந்தார். நந்தி தேவர் தனது மனைவியான சுயசம்பிரபையோடு வந்து இந்த இறைவனை வழிபட்டு இருக்கிறார். அதனால், மனைவி யுடன் இருக்கும் நந்தியை இந்த தலத்தில் தரிசிக்கலாம். மூன்று பிரதோஷங்கள் இந்த தல இறைவனை கண்டு தரிசித்தால் புத்திரபாக்கியம் ஏற்படுகிறது என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். அப்பர் பெருமான் தனது க்ஷேத்திரக் கோவை திருப்பதிகத்தில் இந்த தலத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

“உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதிச்சுரம் விவீச்சுரம் வொற்றி யூருங்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே’’

இதில் ருத்திரகோடி என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவது இந்த திருத்தலத்தைத்தான்.

காசி தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்கள், இறைவனின் உடலாகவும், கோடி ருத்திரர்கள் வழிபட்ட இந்த தலம் இறைவனது இருதயமாகவும் கருதப்படுகிறது. இந்த தலத்து இறைவனை தரிசித்தால், கோடி சிவாலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. பக்தியோடு ஒரு முறையேனும் “ருத்திரகோட்டீஷ்வரா’’ என்று அழைத்தால், முறையாக பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு கோடி முறை ஜெபித்த பலன் கிடைக்கிறது. அதே போல, ஒரு முறை இறைவனை வலம் வந்தாலோ, அல்லது ஒரு வில்வம் சமர்ப்பித்தாலோ, வழிபாடு செய்தாலோ, துதி பாடினாலோ கோடி கோடியாக பலன் கிடைக்கிறது.

ராஜகோபுரம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என ஒரு பெரிய சிவன் கோயிலுக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் பெற்ற திருக்கோயில் இது. சுவர்ண பந்தனம் செய்யப்பட்ட கோயில் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தலத்து அம்பிகை அபிராம நாயகி என்று அழைக்கப் படுகிறாள். பெண்ணில் நல்லாள் என்றும் கூறுகிறார்கள்.

கட்டுக்கு அடங்காத காளியின் கோபத்தை சாந்தப் படுத்தியதால் இறைவி சற்றே சாய்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஐம்பத்தொரு சக்திபீடங்களில், `ருத்திராணி பீடம்’ என்று அழைக்கப்படுவது இந்த திருத்தலம்தான் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இப்படி பல சிறப்புகள் கொண்ட திருத்தலத்தை நாமும் சென்று தரிசித்து கோடி கோடியாக நற்பலன்களையும், இறை அருளையும் பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post கோடி பலனைத் தந்தருளும் ருத்திரகோடீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Ritrakodieswarar ,Kodi ,Easan ,Rutrakodieswarar ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!