×

தீராத பிரச்னைகளை தீர்க்கும் சிதக்னி குண்ட ஸம்பூதா

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 8

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

4. சிதக்னி குண்ட ஸம்பூதா (சிதக்னி குண்ட ஸம்பூதா நமஹ)

இந்த லலிதா சகஸ்ரநாமத்தில் சித் என்பது அம்பாளான பிரம்மமாகும். அக்னி என்பது நெருப்பாகும். குண்டம் என்பது வேள்வி நிகழும் வேள்விச் சாலை. வேள்வித் தீயை எரியூட்டி அதனுள் எல்லாவற்றையும் இட்டு நிரப்பிச் செய்யப்படும் இடம். வேள்வியை தேக்கி வைக்கும் இடம் என்றும் கூறலாம். சம்பூதா என்றால் தோன்றுவது என்று பொருள். வேள்வித் தீயினிலிருந்து தோன்றிய அம்பாள் அல்லது பிரம்மம் என்பது நேரடியான பொருளாகும்.

எதற்காக தோன்றினாள் என்று பார்ப்போம் வாருங்கள்! இந்த சஹஸ்ரநாமம் கூறப்பட்டிருக்கும் பிரம்மாண்ட புராணத்தில் பண்டாசுரனின் கதை வருகின்றது. பண்டாசுரன் என்பவன் யார். பண்டாசுரன் என்பவன் மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றியவன். சிவனால் எரிக்கப்பட்ட சாம்பலிலிருந்து தோன்றியவன் எப்படி அசுரனாகி எழுவான் என்கிற கேள்வி வரும். அதற்கு முன்பு இந்த பண்டாசுரன் என்பவன் உண்மையில் அசுரனா அல்லது நமக்குள் இவன் என்னவாக இருக்கின்றான் என்பதை கொஞ்சம் தத்துவத்தோடு பார்ப்போம்.

பண்டா என்கிற சொல்லானது பந்த் என்ற சொல்லின் விரிவாகும். நமக்கெல்லாம் தெரிந்த சொல்தான். பந்த் என்றால் ஸ்தம்பிக்கச் செய்தல், அப்படியே நிறுத்துதல் என்று பொருளாகும். இந்த பண்டாசுரன் என்பவன் ஞானத்தை, தன்னுடைய சொரூபத்தை அறியச் செய்யாது தடுத்து நிறுத்துபவன். அந்த பண்டாசுரன் மன்மதனின் சாம்பலிலிருந்து மீண்டும் எப்படி உற்பத்தியானான். சிவன் மன்மதனை எரித்து விட்டாரே என்கிற கேள்வி வரும். ஈசன் மன்மதனை வெறுமே சாம்பலாக்கினார். காம, குரோத, மோக, மதமாச்சரியங்கள் அனைத்தும் அங்கு வெந்து சாம்பலாகின.

ஆனால், அதன் சூட்சுமமான வாசனைகள், உள்ளே ஸ்தூல, சூட்சும, காரண சரீரம் வரையிலும் வியாபித்திருந்தது. ஏனெனில், இவற்றின் மூல மலமான, ஜீவனின் மூல அகந்தையான, போலி நான் அப்படியே இருந்தது. அதைச் சுற்றியுள்ள வாசனைகளை அழியாது அந்த நான் பார்த்துக் கொண்டன. அதனால், மூல அஞ்ஞானம் பிழைத்திருந்தது. அதை அழிப்பது என்பது சாதாரண ஜீவனால் கூட இயலாத காரியம். அது விருத்தியடைந்து விருத்தியடைந்து பண்டாசுரனாக மாறிவிட்டிருக்கின்றது. அவனை அம்பாளே அழிக்கட்டும் என்று சிவன் விட்டு வைத்தார்.

ஸ்தூல வாசனைகளை சிவன் அழித்துவிட்டு உள்ளே உள்ள சூட்சும வாசனைகளை சக்தி அழிக்கட்டும் என்று சிவம் விட்டு வைத்தது. சரீரம் வந்த பின்னர், காமம், குரோதம், மதமாச்சரியங்கள் வந்து சேருகின்றதெனில், இந்த சரீரம் அதாவது உடல் தோன்றுவதற்கு ஒரு காரணம் இருந்ததே அதுவே மூல அகந்தையாகும். அதை அழிக்க வேண்டியே இந்திராதி தேவர்கள் யாகம் செய்தார்கள். இங்கு இந்திராதி தேவர்கள் என்பதை தத்துவார்த்தமாக பார்க்கும்போது இந்திரியங்களையே இந்திராதி தேவர்கள் என்கிறோம். இப்படிப்பட்ட இந்திரியங்களால் செய்யப்படும் யாகம்.

இன்னும் ஆழமாகப் பார்த்தால் பாவச் செயல்கள், புண்ணியங்கள், நல்ல எண்ணங்கள் என்று நம்முடைய எல்லைக்கு உட்பட்ட சில வாசனைகளை நாம் தொடர்ச்சியாக செய்து தீய வாசனைகளை அழிக்க முடியும். ஆனால், பண்டன் என்கிற எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருக்கும் வாசனையை என்ன செய்வதென்று இந்திராதி தேவர்களுக்கு தெரியவில்லை.

எனவேதான் யாகம் செய்தார்கள். கிட்டத்தட்ட எங்களால் எதுவும் முடியாது என்கிற சரணாகதியே அது. மரத்தினுடைய கிளைகளை நீங்கள் வெட்டி விடலாம். ஆனால், வேரை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் அந்த சரணாகதி செய்தார்கள். அந்த யாகத் தீயினின்று ஆத்ம சொரூபம் வெளிப்பட்டது. லலிதாம்பாள் வெளிப்பட்டாள் என்பதே பொருளாகும்.

அது சரி, அதெப்படி நம்முடைய இந்திரியங்கள் யாகத்தை நிகழ்த்தும்?

ஆமாம். அது சாத்தியமே. இதுவரையிலும் நம்முடைய இந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்றவற்றின் மூலமாக வெளிப் பிரபஞ்சத்திலிருந்து வரும் விஷயங்களை நன்கு அனுபவித்து மனதிற்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும். அவை நினைவுகளாக, ஞாபகங்களாக, வாசனைகளாக இருக்கும். இது எதை அனுபவித்ததோ அதை மீண்டும் மீணடும் அனுபவிக்கவே துடிக்கும். இதைத்தான் நாம் சிற்றின்பம் என்கிறோம். இது வெறுமே இந்த ஜீவனை இங்கேயே வைத்திருக்கும். வெறுமேஉடலளவில் வைத்தபடி இருக்கும். அதைத் தாண்ட விடாது. அதாவது மனமானது வெளியுலகை நோக்கி ஓடியபடி இருக்கும்.

இப்படி வெளியுலகை நோக்கி ஓடியபடி இருக்கும் மனமானது இன்றல்ல… நேற்றல்ல… பல்வேறு பிறவிகள்தோறும் ஓடியபடி இருக்கும். இவற்றை தடுத்து அந்த இன்பங்களெல்லாம் ஒன்றுமல்ல. வெறும் வாசனைகளே… அதனால் அலைகழிக்கப்படுபவையே என்று திட நிச்சயமாக உணர்ந்தவுடன், அதே இந்திரியங்களை உள்முகமாக, அந்தர்முகமாக திருப்புதலுக்குப் பெயர்தான் இங்கு வேள்வி நிகழ்த்துதலாகும். புறத்தில் ஓடுகின்ற மனதை மடக்கி அகத்தே திருப்புதல்தான் யாகமாகும். அதாவது ஞானம் என்கிற அக்னியை நோக்கி எப்பொழுது இந்திரியங்கள் திரும்புகின்றதோ அங்கு சிதக்னி வெளிப்படுகின்றது.

இதன் தொடக்கம்தான் ஆலயங்களுக்கு செல்லுதல். அதன் பிறகு ஜபம் செய்தல், தியானத்தில் அமர்தல். நான் யார் என்று ஆத்ம விசாரம் செய்தல் என்று அது தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும். அப்படி இந்திரியங்களை மெதுவாக உள்முகமாக திருப்பி திருப்பி அகத்தே இருக்க வைக்கும் யாகத்தைச் செய்யும்போது அந்த அகம் என்கிற குண்டத்திலிருந்து சித் அக்னி எனும் பிரம்ம சொரூபம் வெளிப்படுகின்றது. ஏன் இந்திரியங்களை அகமுகமாக திருப்ப வேண்டுமெனில் அது இருக்க வேண்டிய இடமே அகம்தான். புறமல்ல. அப்படி புறத்தே சென்றதன் விளைவே இந்த பிரச்னைகள்.

ஆசைகள். அவஸ்தைகள், துயரங்கள், துக்கங்கள்… என்று நீங்கள் இப்போது சந்திக்கும் எல்லாமும். ஆனால், இந்த நாமம் சொல்கிறது, தயவு செய்து உங்கள் இந்திரியங்களை அகத்தே திருப்புங்கள். கொஞ்சம் திருப்பினால் கூடப் போதும். மீதியை அம்பாள் பார்த்துக் கொள்வாள். அப்படி வெளியே ஓட வைத்துக் கொண்டிருக்கும் மூல அஞ்ஞானமான பண்டாசுரனுக்கு அடிபணியாமல் அவன் சொல்கின்ற, ஏவுகின்ற எந்த வேலையையும் பார்க்காமல் இந்திரியங்கள் வெறுமே உள்முகமாக திரும்பும்போது அதுவே இங்கு யக்ஞமாகின்றது. அப்படி வேள்வி செய்யும்போது சகலமும் அந்த அக்னியில் போடப்பட்டு அந்த சிதக்னியிலிருந்து அம்பாள் தானே வெளிப்படுகின்றாள்.

ஒரு அக்னி வெளிப்பட வேண்டுமென்றால் அதற்கு விறகு தேவை. அந்த விறகிலிருந்துதான் அக்னி வெளிப்பட முடியும். ஆனால், இந்த சிதக்னிக்கு எந்த விறகும் தேவையில்லை. உபநிஷதம் இங்கு ஒரு அக்னியைக் கூறுகின்றது. ந இந்தனம் இதி அக்னிஹி… அதாவது இந்த அக்னிக்கு விறகு தேவையில்லை. எதையும் எரியூட்டாமலேயே வெளிப்படும் அக்னி இது. இந்த ஞானாக்னியானது தானே சுயமாக பிரகாசிக்கக் கூடியது. இந்த சிதக்னியானது எப்போதும் இருப்பதும் கூட. இங்கு இந்திரியங்கள்தான் அதை நோக்கித் திரும்ப வேண்டும்.

இப்போது இங்கு ஒரு சந்தேகம் வருகின்றது. அம்பாள் என்கிற சிதக்னி தோற்றமும் மறைவும் அற்றவள். ஆனால், இந்த நாமத்தில் சம்பூதா.. என்கிற வார்த்தை வருகின்றது. தோற்றமும் மறைவும் அற்றவள் தோன்றினாளா என்றாள் தோன்றவில்லை. எப்போதும் இருப்பவளே. இங்கு இந்த ஜீவனுடைய இந்திரியங்கள் வேள்வியை நிகழ்த்தி அந்த சிதக்னியை தரிசிக்கின்றார்களோ அப்போது அந்த ஜீவனுக்கு தோன்றியதையே இங்கு தோன்றுதல் என்று சொல்கிறார்கள். அப்படி தோன்றுதலையே என்று நாம் தரிசிக்கின்றோமோ. நாம் அது என்று எப்போது உணர்கின்றோமோ அதுதான் ஜெயந்தி.

ஒருமுறை சீரடி பாபா, ‘‘எப்போது உங்களுக்குள் இருக்கும் ஆத்மாவை அறிந்து அந்த ஆத்மாவே நான் என்று உணர்கிறீர்களோ அன்றைய நாளே ஜெயந்தி’’ என்றார். மற்றபடிக்கு நீங்கள் கொண்டாடுவதெல்லாம் உங்களுடைய திருப்திக்கும்… என்மீது கொண்ட பக்திக்குமாவே நான் கொள்வேன் என்று உறுதியோடு கூறினார்.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அந்த பண்டாசுரன் என்கிற மூல அஞ்ஞானமாகின்ற அகங்காரத்தை தங்களால் இயன்ற மட்டும் அழிக்க வேண்டிய யாகத்தை ஒருவன் செய்கின்றான்.

ஒரு கட்டத்தில் இதை அழிக்கும் சக்தியானது தன்னிடத்தில் இல்லை என்றும் அந்த அம்பாள், சிதக்னியே அதை அழிக்கும் என்பதை உணர்த்துவதே சிதக்னி குண்ட சம்பூதா என்பதாகும். இன்னும் சூட்சுமமாக பார்த்தால் எங்கும் எல்லைக்கு உட்படாத எல்லா இடங்களிலும் நீக்கமற பிரிந்திருக்கும் ஆத்மாவானது தன்னை ஆத்மாவிலிருந்து பிரித்துக் கொண்டு ஒரு எல்லைக்குட்பட்ட தேகமாக பிரித்துக் கொண்டதோ அதுவே மூல மலமாகும். மூல கன்மமாகும். அதுவே மூல ஆணவம். அந்த சிதைந்து போனதை மீண்டும் இங்கு அம்பாள் ஒன்றிணைத்து வைக்கின்றாள். இறுதியில் ஞானம் ஒன்றே நமக்குத் தேவை. அந்த ஞானத்தை நோக்கி திரும்புங்கள் என்று அறைகூவல் விடுத்தலையே இங்கு நாமமாக வெளிப்படுகின்றது.

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

தீராத பிரச்னைகளை தீர்க்கும் நாமம் யாருடைய வாழ்க்கையில் எத்தனை முயற்சித்தாலும் ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையோ அவர்கள் இந்த நாமத்தை 108 முறை தினமும் சொல்லிவர சகல பிரச்னைகளும் தீரும். ஏனெனில், எவராலும் முடியாத, தன்னாலும் என்ன செய்வதென்ற பிரச்னையை இந்த நாமத்தைச் சொல்லிச் சொல்லியே தீர்க்க முடியும்.

நாமம் சொல்லும் கோயில்

காஞ்சிபுரம்

இந்த பண்டாசுரனை அழித்தவள் காஞ்சிபுரம் காமாட்சி ஆவாள். பண்டாசுரன் வதம் நிகழ்ந்த தலமே காஞ்சிபுரம். ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழ்வதும், அம்பாள் பக்தர்களால் உபாசிக்கப்படும் தேவியுமான காஞ்சி அன்னை காமாட்சி பேசும் தெய்வமாக போற்றப்படுகிறாள். வேண்டும் வரங்களை விரைந்து தரும் வரப்பிரசாதியும் இவளே. காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது.

காஞ்சிக்கு வந்து அன்னை கொலுவிருந்ததற்கு காரணம் உண்டு. கயிலையில் சிவனின் கண் பொத்தி விளையாடினாள் உமையவள். ஈசனின் நெற்றிக்கண் ஒளிபட்டு பார்வதி கருநிறம் கொண்டாள். சாபத்தின் விளைவாய் காசியில் சில காலம் அன்னபூரணியாகவும், மாங்காட்டில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவே காமாட்சியாக தவமிருந்து, பிறகு சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜித்தாள். அப்போது கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வர மணல் லிங்கத்தை தன் திருக்கரத்தால் கரையாவண்ணம் காத்தாள். பஞ்சாக்னி வளர்த்து தவமிருந்து காம இச்சையை சுட்டெரித்ததால் காமாட்சி எனும் பெயருடன் சாப விமோசனம் பெற்றாள்.

மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உருவான பண்டாசுரன் எனும் அசுரனை அனைத்து தேவர்களின் துணையோடு வதைத்த லலிதா திரிபுரசுந்தரியின் வடிவினளாக இத்தலத்தில் நிலைகொண்டாள். தன் கணவரான ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப்படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது. முதல் பிராகாரத்தில் இருபத்து நான்கு தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காமகோடி காமாட்சி, அஞ்சன காமாட்சி எனும் அரூப லட்சுமி, ஸ்ரீசக்ரம் என மூன்று வடிவங்களில் இங்கு தேவி ஆராதிக்கப்படுகிறாள். முதல் வடிவான காஞ்சி காமாட்சி, காயத்ரி மண்டபத்தின் நடுவில் தென் கிழக்கு திசையை நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் தேவி அருட்காட்சியளிக்கிறாள்.

மற்ற அம்பிகை ஆலயங்களைப்போல அபயவரத முத்திரைகள் இல்லாது பாசம், அங்குசம், மலர்க்கணைகள், புஷ்ப பாணங்கள் போன்றவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ளாள். அம்பிகையின் இடப்புற கோஷ்டத்தில் சேனா நாயகி எனப் போற்றப்படும் வாராஹியும், இரண்டாம் வடிவான அரூபலட்சுமியும் இடம் பெற்றுள்ளனர். வாராஹிக்கு முன்னே அம்பிகை பண்டாசுரனைக் கொன்று பூமியில் புதைத்ததின் நினைவாக ஜெயஸ்தம்பம் உள்ளது. இரு உருவில் பெரிய விநாயகர்களும் வாராஹிக்கு முன் அருள்கின்றனர்.

(சக்தி சுழலும்)

The post தீராத பிரச்னைகளை தீர்க்கும் சிதக்னி குண்ட ஸம்பூதா appeared first on Dinakaran.

Tags : Sidhagny Kunta Sambuta ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி