நன்றி குங்குமம் தோழி
அம்மா இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள் காயத்ரி.ஊருக்குச் செல்வதற்காகப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் சாரதா.அவருக்கு அருகில் குழந்தை சியாம் இருந்தான்.
அவர் பெட்டியில் வைக்கும் புடவைகளை கலைத்து வெளியே எடுத்துப் போட்டான்.“சமர்த்துக் குட்டி இல்லை. பாட்டி ஊருக்குப் போறேன். துணிகளை எடுத்து வைக்கணும். நீ பொம்மை வைத்து விளையாடு ராஜா” என அருகிலிருந்த கார் பொம்மையை எடுத்துக் கொடுத்தார்.பாட்டி கூறியது புரிந்ததைப் போல குழந்தை பொம்மையின் மீது கவனத்தைத் திருப்பிக் கொண்டான்.
அம்மாதான் எவ்வளவு பொறுமைசாலி… காயத்ரியின் மனம் விம்மியது.
இந்நேரம் நாமாக இருந்தால், “டேய் தொல்லை பண்ணாத, அந்தப் பக்கம் போய் விளையாடு” என படுக்கையை விட்டு இறக்கி விட்டிருப்போம் எனத் தோன்றியது.
அம்மா எப்பொழுதும் இப்படித்தான். வார்த்தைகளை சிதற விடமாட்டார். அவசியத்திற்குப் பேசுவார். அழுத்தமாகப் பேசுவார்.அப்பா இருக்கும் போதும் அப்படித்தான்.நமக்கு மூன்றும் பெண் குழந்தைகள். எப்படித்தான் கரையேற்றுவோம் என்கிற புலம்பலை அவள் எப்பொழுதும் வீட்டில் கேட்டதில்லை.கணவரின் வங்கிப் பணியில் வரும் சம்பளமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
அக்கா, தங்கை மூவருக்கும் படிப்பு, கல்யாணம் என யோசித்து யோசித்து பணத்தை சேமித்தார்.சேமிக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதில்லை.ஐந்து வருட பிக்சட் டெபாசிட்தான்.குறைந்த வட்டி கிடைத்தாலும் நிலையான பணம் என சமாதானம் இருக்கும்.ஒருவருக்கு சேமித்தப் பணத்தை மற்றவர்களுக்கு செலவு செய்வதில்லை. அப்படித்தான் மூவரும் படித்து முடித்தார்கள். சீரும் சிறப்புமாக கல்யாணம் செய்து வைத்தார்கள். அக்காக்கள் இருவருக்கும் அப்பா இருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது.காயத்ரி மட்டும் காதல் என வந்து நின்றாள்.
“அப்பா இல்லைனதும் உன்னோட வாழ்க்கையை நீயே தேர்ந்து எடுத்துட்டியா? நான் எதுக்கு இருக்கேன்” என கூச்சல் போடவில்லை.“பையன் யாரு? என்ன செய்கிறான் காயத்ரி” எனத்தான் கேட்டார்.“எங்க அம்மா கொஞ்சம் படபடவென பேசுவார் காயத்ரி. ஆனா, நல்லவங்க. அத்தையை பொறுமையா பேசச் சொல்லு. அவங்க சரின்னு சொல்லிடுவாங்க” என சரவணன் கூறியபோது காயத்ரி சிரித்தாள்.“எங்கம்மா நவீன பூமாதேவி. நீங்க வேணும்னா பாருங்க! அத்தை சரின்னு தான் சொல்லுவாங்க” உறுதியாகக் கூறினாள். காயத்ரி கூறியது போலத்தான் நடந்தது. அம்மா சென்று சொன்ன போது சரவணன் வீடு மறுப்பேதும் கூறவில்லை.திருமணமாகி ஹைதராபாத்திற்கு வந்துவிட்டார்கள்.
“அம்மா தனியாக எதற்கு இருக்கணும். நம்மகிட்டேயே இருக்கட்டும் என சகோதரிகள் மூவரும் முடிவு செய்தனர்.ஆனா, ஒருத்தர் மட்டும் எப்படி வைத்துக் கொள்வது. எல்லாரும் வேலைக்குப் போறோம். மாசத்துக்கு ஒருத்தர் கிட்ட இருக்கட்டும். யாருக்கு ரொம்ப அவசியமா இருக்கோ அவங்க கூட ரெண்டு மாசம் தங்கட்டும் என முடிவு செய்தார்கள்.அக்காக்கள் இருவரும் சென்னைதான். அதனால் எங்கு இருந்தாலும் அவர்களுக்குள் பிரச்னை இல்லை. ஆனால் காயத்ரியிடம் அம்மா வந்துவிட்டால் போதும்.“காயூ! சீக்கிரம் அம்மாவை அனுப்பி விடு. எனக்கு டூர் இருக்குடி” என்பாள் மூத்த அக்கா ஜானகி.
“எனக்கு மட்டும் என்னவாம் ரியாவும், கார்த்திக்கும் ஸ்டெடி லீவுல இருக்காங்க. படிக்கும்போது அவங்களுக்கு எப்பவும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும். இந்த முறை அம்மா என்கிட்டேதான்” இரண்டாவது அக்கா சரஸ்வதி அதிகாரமாக பேசுவாள்.“நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருக்கீங்க. நான் மட்டும் தனி ஆள். அதுவும் குழந்தை சின்னவன் இங்கேயே இருக்கட்டும்” என்பது காயத்ரியின் வாதம்.மூன்று பேரும் தன்னை வைத்துக் கொள்வதற்காக போட்டிப் போடுவதை சிரித்த முகத்துடன் பார்ப்பார் அம்மா. அவருக்கான கருத்தாக எதையும் சொல்லமாட்டார்.
இதோ நேற்றும் வழக்கம் போல பெரியக்கா ஃபோன் செய்தாள்.“இங்க பாரு காயூ..இருபது நாள் டூர். அதுவும் டெல்லியில். நினைச்சதும் ஓடி வர முடியாது. டுப்ளக்ஸ் வீடு. அம்மா இருந்தாதான் சரியா பராமரிக்க முடியும். உடனே சரவணன் கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்லி அனுப்பி விடு” என வைத்துவிட்டாள்.
அப்போது கணவனும் அருகில் இருந்தான். அவன் காதுகளிலும் ஜானகி பேசியது விழுந்தது.
அப்போது எதுவும் பேசவில்லை. ஆனால் மாலை அலுவலகம் இருந்து வரும்போது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து, அதை கையோட பிரிண்ட் அவுட் எடுத்தும் வந்திருந்தான்.
“எங்க அக்கா சொன்னதுதான் போதும்னு உடனே டிக்கெட் போட்டுட்டீங்க. எங்கம்மா என்ன நினைப்பாங்க” சொல்லும் போதே காயத்ரிக்கு அழுகை முட்டியது.
“என்ன நினைப்பாங்க” கழுவிய முகத்தை துடைத்துக் கொண்டே கேட்டான் சரவணன்.
“ம்ம்… மருமகனுக்கு நம்மை வைச்சிருக்குறதுல விருப்பம் இல்லை. அதான் ஜானகி கேட்டதும் அனுப்பி வைக்கிறாங்க. நாமளா பார்த்த மாப்பிள்ளையா இருந்தா இப்படி உடனே போகச் சொல்வாங்களான்னு நினைக்க மாட்டாங்களா?’“அப்படியா! அத்தை அந்த மாதிரி யோசிப்பாங்களா என்ன?“ஒரு வேளை நினைச்சா! வருத்தப்படுவாங்க…”“வேணும்னா கேட்டுப் பாரேன்…”“நீங்களும் உங்க அறிவும், ஏற்கனவே நீங்க செஞ்சது தப்புன்னு சொல்றேன். இதுல அவங்கக் கிட்டயே கேட்கச் சொல்றீங்க…”அந்த நொடியில் இருந்து கணவன்- மனைவி இருவருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.
முகத்தைப் பார்க்காமலேயே காபி டம்ளர் அவன் முன்பு வைக்கப் பட்டது. பிடிக்காத உப்புமா டிபனாக தட்டை நிறைத்தது.சரவணன் எதற்கும் ஏன் என்று கேட்கவில்லை.
“எல்லோரும் அம்மாவைப் போல பிள்ளைனு சொல்வாங்க. இவன் மாமியாரைப் போல அழுத்தக்காரன்…” கோபமாக நினைத்தாலும் அவளையறியாமல் களுக்கென சிரிப்பு வந்துவிட்டது.
துணிகளை அடுக்கி முடித்த அம்மா திரும்பிப் பார்த்தார். “என்ன காயூ சிரிக்கிற? சியாம் விளையாடுவதைப் பார்த்தா…”அப்போதும் தவறாக எண்ணமல் கேட்கும் அம்மாவின் தோள் மீது கைகளைச் சுற்றி அணைத்துக் கொண்டாள். அவளது முகவாய் அம்மாவின் கழுத்துப் பகுதியில் புதைந்தது.
“என்ன காயூ…” “சாரிம்மா. ஜானகி ஃபோன் செய்யும் போது அவரும் இருந்தார். என்னைக் கேட்காமலே டிக்கெட் போட்டுட்டு வந்துட்டார். இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்தா எனக்கு உதவியா இருக்கும்.” “எப்பவும் நடப்பது தானே காயூ.
மாப்பிள்ளை தவறா எதுவும் செய்யலை…”
“அப்போ வருத்தம் இல்லாமத்தானே கிளம்புறீங்க?”
அம்மா பதில் பேசவில்லை.
“என்னம்மா எதுவும் பதில் சொல்லல.” “எனக்கு இந்த ஓட்டம் போதும்னு தோணுது காயூ! அப்பாவுக்கு நல்ல மனைவியா, உங்களுக்கு நல்ல அம்மாவா இத்தனை வருடங்கள் வாழ்ந்தாச்சு. கொஞ்ச காலம் எனக்காகவும் வாழ்றேனே…” “என்னம்மா! என்னென்னமோ பேசுறீங்க. அப்போ எங்க மேலே ஏதோ கோபம் இருக்கு…” “அப்படி இல்லைம்மா. ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கான இடம்னு எதுவுமேயில்லை. இதோ உங்களுக்கும் அப்படித்தான் கணவன், குழந்தைகள், வேலை அப்படினு போனாலும் சில நேரங்கள்ல உங்களுக்கான பாட்டு, தோழிகள், பார்ட்டி அப்படினு காலம்போகுது. ஆனா இதுவரை எனக்குன்னு நான் எதுவும் யோசித்தது இல்லை.”“அதுக்குன்னு என்ன செய்யப் போறீங்க?”
“இதுவரைக்கும் உங்க வீட்டை எல்லாம் பார்த்துகிட்ட நான், கொஞ்ச காலம் நான் வாழ்ந்த வீட்டையும் பார்க்கணுமில்ல…”
“அப்போ மனசுல எதுவோ பிளான் இருக்கு அப்படித்தானே…”அழுவது போல பேசினாள் காயத்ரி. அக்காக்கள் இருவருக்கும் ஃபோன் செய்து உடனே அம்மா பேசியதைக் கொட்டிவிட வேண்டும் போலிருந்தது.“பிளான் போட்டு செய்யுற அளவுக்கு நான் எதுவும் யோசிக்கல காயூ. நமக்குத் தெரிந்த மனிதர்களோடு பேசுவது, பிடிச்ச வேலையை செய்வது,விருப்பமான கோவில், குளம்னு போறதுன்னு காலம் போகாதா?’
“உனக்கு என்ன வேலைம்மா தெரியும்?” அம்மாவின் பேச்சு மனதிற்குள் ஆதங்கத்தை ஏற்படுத்த பட்டென கேட்டுவிட்டாள். கேள்வி கேட்டவளை ஆழ்ந்து பார்த்தார் சாரதா. “நாலு பேருக்கு சமையல் பொடி கூடவா செஞ்சி கொடுக்க முடியாது காயூ!” சிரித்த முகத்துடன் கேட்ட அம்மாவிற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் காயத்ரி.
அப்போது சரவணன் வீட்டிற்குள் நுழைந்தான். எல்லாம் உங்களாலதான்… கணவனை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றாள் காயத்ரி.மாமியாரை பார்த்த சரவணனின் முகத்தில் அசாத்திய புன்னகை ஒன்று மிளிர்ந்தது. அதற்கான அர்த்தத்தை சாரதா புரிந்து கொண்டார்.நேற்றிரவு மருமகன் பேசியது அவருக்கு மனத்திரையில் ஒளிர்ந்தது. “அத்தை நிறைய நாளா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு தோணுது…” “சொல்லுங்க தம்பி. நானும் அம்மா போலதான்…” “அது எனக்குத் தெரியாதா அத்தை!’“அப்புறம் என்ன தயக்கம்?’
“எத்தனை நாளைக்கு அத்தை இந்த ஓட்டம். மூணு வீட்டுக்கும் மாறி, மாறி மாரத்தான் ஓடுற வயசா இது. ஓரிடத்துல இருந்து அமைதியா வாழ்க்கையை நிதானிச்சுப் பார்க்கிற வயசு அத்தை. உங்க கடமைகளை நிறைவா செஞ்சி முடிச்சு இருக்கீங்க. இனிமே எங்க வாழ்க்கையை பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு. காலமெல்லாம் பெரியவங்க வந்துதான் எங்களை பார்த்துக்கணும்கிற பழக்கத்தை அவங்களுக்குக் கொடுத்திட்டா, முடியாத காலத்துல முகத்தை காண்பிப்பாங்க. பெத்தவங்க கடமையும் ரயில் பயணம் மாதிரிதான் அத்தை. கடமையை முடித்து பொறுப்பைக் கொடுத்திட்டா பயணத்தின் நோக்கம் முடிஞ்சது…”சரவணன் கூறியதற்கு சாரதா புன்னகைத்தார்.
“என்ன அத்தை சிரிக்கிறீங்க?” “நீங்க உலகத்துல நடக்குற வழக்கத்துக்கு விடை சொல்றீங்க தம்பி. ஆனா என் பொண்ணுங்களை நான் அப்படி வளர்க்கல. மூணு பேரும் மாத்தி மாத்தி வரச் சொல்றதப் பார்த்த அக்கறையில சொல்றீங்க. அதுலயும் தப்பில்லை. ஆனா நீங்க சொன்னதை பிள்ளைங்ககிட்டே சொல்றேன். அவங்க சொல்ற பதிலை வைச்சு முடிவு செய்யலாம்” எனக் கூறினார். “சரிங்க அத்தை” எனக் கூறினான் சரவணன். இதோ கூறியும் விட்டார். ஆனால் பதில் எதுவும் பேசாமல் முறைத்துக் கொண்டு சென்ற மனைவியைப் பார்த்ததும்தான் சாரதாவை அர்த்தமாகப் பார்த்தான். மெதுவாக அறைக்குள் நுழைந்தான்.
அதற்குள் அக்காக்கள் இருவரிடமும் அழுதுகொண்டே கான்பிரன்ஸ் காலில் சொல்லி முடித்திருந்தாள் காயத்ரி. “இங்க பாரு காயத்ரி. இப்போ எதுக்கு அழுவுற. அம்மா சொல்றது சரிதான். எத்தனை நாளைக்குத்தான் நமக்காக வாழ்ந்துட்டு இருப்பாங்க. இனிமே அவங்க ஆசைப்பட்ட மாதிரி இருக்கட்டும். நம்ம வீட்டுக்கே போகட்டும். போன மாசம் நம்ம பக்கத்து வீட்டு விமலா ஆன்ட்டி கூட மார்க்கெட்ல பார்த்தப்ப கேட்டாங்க.
சாரதாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சுடி. கொஞ்சம் அனுப்பி வையுங்களேன்னு. என்னைக்கும் அம்மா யார் கிட்டேயும், எதையும் கேட்டதில்லைடி. இப்படி கேட்க வைச்சுட்டோம். இனி மேலும் அப்படிக் கூடாது. நீயும், சரவணனும் அவங்கக்கூட வாங்க. எல்லாரும் சேர்ந்து நம்ம வீட்ல விட்டுட்டு வருவோம்…” பெரிய அக்கா சொல்லி முடித்தாள். ஃபோன் அழைப்பு முடிந்தது. திரும்பிப் பார்த்தாள் காயத்ரி. சரவணனை தாண்டி பார்வை சென்றது. அவளது பார்வை சென்ற பக்கம் திரும்பினான் சரவணன். சாரதா நின்றிருந்தார். இப்போது அசாத்திய புன்னகை அவரது உதடுகளில் மின்னியது.
தொகுப்பு: சித்ரா.ஜி
The post சிறுகதை-பாசச் சிறகுகள்… appeared first on Dinakaran.