×

ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது: கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லி விஞ்ஞான் பவனில் 50வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் நிதி, மனித வள மேலாண்மை மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரிவிதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழ் நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கிணங்க இருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் இணையத்தை, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 – இன் கீழ் சேர்த்து ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள 7 ஜூலை 2023 நாளிட்ட அறிவிக்கை வணிகர்களின் நலனுக்கு எதிராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் சட்டமீறல்களை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாகவும் உள்ளது. இது நாடெங்கும் உள்ள வணிகர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 11-ஆவது மற்றும் 12-ஆவது அட்டவணையில் உள்ள, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் செய்கடமைகள் தொடர்பான சேவைகள் மற்றும் 25 விழுக்காடுக்கு பொருட்கள் மிகாத கூட்டு வழங்குகை சேவைகளை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஒன்றிய / மாநில அரசுகள் பெறும்போது தற்போது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உள்ளது.
இதனை குறிப்பிட்ட சில வரிவிலக்கு இனங்கள் என வரையறுத்து மாற்றியமைக்க உத்தேசித்துள்ள திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

அதனை முற்றிலுமாக கைவிடுமாறு வலியுறுத்தி உள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளுக்கு நியமிக்க வேண்டிய நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை தெரிவு செய்ய மாநில அளவிலான தெரிவு செய்யும் குழுவுக்கு அதிகாரமளிக்க தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கேன்சர் நோய்க்கான விலை உயர்ந்த மருந்தினை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை குறைப்பதற்கு வரிவிலக்களிக்கும் பரிந்துரைக்கு தமிழ்நாடு ஆதரவு தெரிவித்தது. மேலும், குறிப்பிட்ட அரிய வகை நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு விலக்களிக்கும் பரிந்துரைக்கும் தமிழ்நாடு ஆதரவு தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது: கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Minister ,Thangam ,South ,New Delhi ,50th Goods and Services Tax ( ,GST ,Council ,Delhi ,Vigyan Bhawan Union Finance ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...