×

தனிச் சந்நதி கொண்டருளும் ஆதிசேஷன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*திருச்சிறுபுலியூர்

ஆதிசேஷன் விளங்குகிறான். பல்வேறு காரணங்களுக்காக பெருமாள் பூலோகத்தின் பல தலங்களில் அர்ச்சாவதாரம் கொண்டிருக்கிறார். எப்போதும் திருமாலுடனேயே, அவர் அர்ச்சாவதாரமாக எங்கே திகழ்ந்தாலும் அங்கெல்லாமும் தானும் உடனிருக்க வேண்டும் என்ற ஏக்கம் ஆதிசேஷனுக்குள் துளிர்விட்டது.அவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய திருமால் ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தந்தார்.

அதன்படி, கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே மெலிதான ஒரு பகைமை தோன்றியது. தான் வெறும் படுக்கையாக மட்டுமே அமைந்து பெருமாளுக்கு சேவை செய்ய, கருடனோ, அவரை அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சுமந்து சென்று அந்தந்தத் தலங்களிலுள்ள பக்தர்களின் அபிமானத்தைப் பெற்று வந்து விடுகிறான். தான் பாற்கடலை விட்டு தாண்ட இயலாத பொறுப்பில் இருக்க, கருடனோ, மஹாவிஷ்ணு சஞ்சரிக்கும் இடத்துக்கெல்லாம் தானும் அவரை சுமந்து சென்று புகழ் பெற்று விடுகிறான்.

இத்தனைக்கும் ஏதேனும் பொறுப்பை நிறைவேற்றி விட்டு வரும் திருமாலின் சோர்வை நீக்க, தான் மிருதுவான படுக்கையாகக் காத்திருப்பதில் ஆதிசேஷனுக்குப் பெருமைதான். ஆனால் அது உலகோர் எத்தனை பேருக்குத் தெரியும்? தானும் கருடனைப் போலவே, திருமாலுடன் தானும் எப்போதும் உடனிருப்பவன்தான் என்பதை பிறர் அறியச் செய்ய வேண்டும்; அப்புறம், ஈரேழுலகத்தோர் அனைவரும் தனக்கு கருடனுக்குச் சமமான முக்கியத்துவம் தருவார்கள்; தானும் திருமால் அர்ச்சாவதாரம் மேற்கொள்ளும் எல்லா தலங்களிலும் ‘நின்றால் குடையாகி, அமர்ந்தால் சிம்மாசனமாகி, படுத்தால் மஞ்சமாகி’ சேவை புரிய நேர்ந்தால், தனக்கும் அதே மதிப்பும், மரியாதையும் கிட்டும் என்று ஊகித்தான்.

அதற்காகவே கருடனுடன் பொறாமை கொண்டான், பகைமை கொண்டான்.தனக்குச் சமமாக அந்தஸ்து பெற நினைக்கும் ஆதிசேஷன் மீது அடங்கா கோபம் விளைந்தது கருடனுக்கு. ‘வெறும் படுக்கையான இவன் என்ன முக்கியத்துவம் பெறுவது?’ என்ற அகங்காரக் கோபம். ஊர்ந்து செல்லும் அவனை, பறந்து பறந்து தாக்க முற்பட்டான். அந்தத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத ஆதிசேஷன் பல இடங்களுக்கு ஓடி தப்பிக்க முயன்றான். ஒரு கட்டத்தில் இந்தச் சிறுபுலியூர் தலத்துக்கு வந்தான்.

இங்குள்ள தீர்த்தக் கரையில் திருமாலை எண்ணிக் கடுந்தவம் மேற்கொண்டான். தன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன் இப்படித் தவித்து மருகுவது கண்டு அவன் மீது இரக்கம் கொண்டார் திருமால். அவன் முன் பாலமூர்த்தியாகத் தன்னைக் குறுக்கிக் கொண்டு காட்சியளித்தார். அவனுக்கு அபயமளித்தார். கருடனைக் கண்டித்தார். அவரவர் பொறுப்பு அவரவருக்கு. அததற்கென்று தனித்தனியாகப் பெருமை உண்டு. இதில் ஒருவரைப் பார்த்து மற்றவர் அசூயைப்படவோ, திமிர் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லை என்று இருவருக்கும் அறிவுறுத்தினார்.

தனக்கு ஆறுதலளித்து அபயமும் வழங்கிய திருமாலின் திருக்கருணையால் உய்வடைந்த ஆதிசேஷன், அந்த சந்தோஷத்தில், ‘என்ன கருடா, சௌக்கியமா?’ என்று கேட்டான். அப்போது திருமாலின் அறிவுறுத்தலால் மனம் தெளிவடைந்திருந்த கருடன், ‘‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே”என்று பதிலளித்தது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தது இந்த திருச்சிறுபுலியூரில்தான் என்று தலவரலாறு கூறுகிறது.

இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததற்கு சிவபக்தர் ஒருவரே காரணம். அவர் மத்தியந்தன முனிவரின் மகன். சிறுவயது முதலே சிதம்பரம் நடராஜப் பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். தினமும் நடராஜருக்கு மலர் சாத்தி மகிழ்ந்த இந்த அடியவர், அவ்வாறு தான் சமர்ப்பிக்கும் மலர்கள் முற்றிலும் தூய்மையானவையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக வெள்ளி முளைக்கு முன்னாலேயே முகிழ்த்திருக்கும் மலர்களைக் கொய்ய மரங்களின் மீது ஏறுவார்.

அதாவது பொழுது புலர்ந்து தேனீக்கள் அந்த மலர்களை நாடிவந்து தேனை உண்டிடும் முன்னர் அந்தப் பூக்களைப் பறித்து விடுவார் அவர். இதற்காகவே மரம் ஏற வசதியாக, சிவபெருமான் அருளால் புலிநகங்கள் கொண்ட கால்கள், கைகளையும், இருளிலும் எளிதாகப் பார்க்கவல்ல புலிக்கண்களும் பெற்றவர். இதனாலேயே இவர் வியாக்ர பாதர் – புலிக்கால் முனிவர் என்று பெயர் பெற்றார்.

தன் இறைத் தொண்டின் நிறைவான பயனாகத் தனக்கு முக்தியளிக்க வேண்டும் என்று நடராஜப் பெருமானிடம் வருந்தி வேண்டிக் கொண்டார் முனிவர். ஆனால், நடராஜர், அருமா கடலமுதப் பெருமாளை தரிசித்தாலேயே அந்தப் பேறு அவருக்குக் கிட்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி இந்தத் தலத்துக்கு வந்தார் புலிக்கால் முனிவர். இவருக்கு, இந்தத் தலத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளித்து, பெருமாளையும் அடையாளம் காட்டினார். இந்த முனிவரின் வருகையைப் பதிவு செய்யும் வகையில் இந்தத் தலம் சிறுபுலியூர் என்றழைக்கப்பட்டது. அதோடு பெருமாள் கோயிலுக்கு எதிரில் ஒரு சிவலிங்கம் இன்றளவும் இந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. தன் விருப்பம்போல பெருமாளின் அருளால் முக்தி அடையப் பெற்றார் வியாக்ர பாதர்.

பொதுவாகவே பெருமாளின் சயனக் கோலத்தை மூன்றாக வகைப்படுத்திப் பேசுவார்கள். ஒன்று தலசயனம், இரண்டு வடசயனம், மூன்று ஜலசயனம். தலசயனம் என்றால், வெறுமே தரையில் பெருமாள் படுத்திருக்கும் கோலம். இந்தத் திருக்கோலத்தை சென்னையை அடுத்த மகாபலி புரத்தில் காணலாம். வடசயனம் என்றால் ஆலிலை மீது பெருமாள் படுத்திருக்கும் கோலம். இந்தக் கோலத்தை வில்லிபுத்தூரில் நாம் தரிசிக்க முடியும். வடம் என்றால் ஆலமரம்.

வடபத்ரம் என்றால் ஆலிலை. இந்த வடபத்ரத்தில் சயனித்திருப்பவர்தான் வடபத்ரசாயி (சயனன்). ஜலசயனத் திருக்கோலத்தை பெருமாள் கொண்டிருப்பது இந்த திருசிறுபுலியூரில்தான். அதாவது ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பது. ஆதிசேஷன் பொதுவாக கடலில் மிதந்தபடி பெருமாளைத் தாங்கியிருப்பார் அல்லவா, அதனால் இந்தக் கோலம் இங்கே ஜலசயனம் என்றழைக்கப்படுகிறது.

மூலவருக்கு அருமா கடல் அமுதன் என்று பெயர். உற்சவர், கிருபா சமுத்திரப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுரத்தினுள் நுழையும்போது பெருமாளும் பிரமாண்ட தோற்றம் கொண்டிருப்பார் என்று நினைத்து அவரை தரிசித்தால் வியப்பு விழிகளையும், மனதையும் கவ்வும். ஆமாம், மிகச் சிறிய வடிவினராக, பாலசயனராகக் காட்சியளிக்கிறார், பெருமாள். இந்தத் தோற்றமும் தன்னை நாடிவந்து பணிந்த புலிக்கால் முனிவருக்காகத்தான். சிவபெருமான் யோசனைப்படி, தவமியற்றி பெருமாள் தரிசனமும் கண்டபோது அந்த பிரமாண்ட தோற்றம் பார்த்து விக்கித்துப் போனார் முனிவர்.

இரண்டு கண்களுக்குள்ளும், விரித்த இரு கரங்களுக்குள்ளும் அடங்காத அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் காண முடியும், எப்படி கரங்களால் தீண்டி இன்புற முடியும் என்று திகைத்துப் போனார் அவர். ஆமாம், திருவனந்தபுரம் திவ்ய தேசத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மூன்று வாசல்கள் வழியாக, தனித்தனியாக சிரம், நாபி, பாதம் என்று தரிசிப்பது போல நெடிய தோற்றம்! அவருடைய தர்மசங்கடத்தைப் பார்த்த பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம் தன்னை அப்படியே சுருக்கிக் கொண்டார். புலியாருக்காக இப்படி சிறுவடிவினனாகப் பெருமாள் மாறியதாலும், இத்தலம்சிறுபுலியூர் என்று வழங்கப்படுகிறது என்பார்கள்.

இந்தச் சிறு கோலத்திலும் இவர் தன் நாபிக் கமலத்தில் பிரம்மனைத் தாங்கியிருக்கிறார். திருவடிகளுக்கு அருகே ஸ்ரீதேவி – பூதேவியரோடு சிறுவடிவில் புலிக்கால் முனிவரும் (இவருக்கும் பிரத்யேக வழிபாடுகள் நடைபெறுகின்றன), கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.ஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில் தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்றமாகப் படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும், தனக்கு அது திருப்தியளிக்கவில்லை என்பதால், ஏக்கமும், ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார்.

உடனே, இவரையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச் செய்தார். திருவனந்தபுரம் போல பக்தர்கள் தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக அசைத்து தரிசிக்க வேண்டிய அவசியம்போல், திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்! ஆமாம், விஸ்வரூபம். ஆனால், பகவானின் அண்ணாந்த தரிசனத்துக்கு முன்னால் கழுத்து வலி தெரியுமா என்ன?

திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து இந்த திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்:

கருமா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே

‘மிகப் பெரிய, கருநிறம் பூண்ட மேகம் போன்றவனே நீ குளிர்ச்சிமிக்கவன்தான்; ஆனால் அன்பு இல்லாதவர் உன்னை நெருங்க முடியாதபடி நெருப்பாக தகிப்பவன். அதே சமயம், அன்பர்களுக்கு குளிர்ந்த நீர் போன்று மகிழ்வளிப்பவன். மிகப் பெரிய மலை போன்ற வடிவுடையவன் நீ; ஆனால் இந்த சிறுபுலியூர் தலத்தில் அன்பருக்காகச் சுருக்கிக் கொண்ட பெருந்தகை நீ. இந்தத் தலத்தில் திருமகள் நிலைத்து வாழ்கிறாள். இது போதாதென்று பெறற்கரிய கடல் அமுது போன்றவனாகவும் நீ திகழ்கிறாய். உனது திருவடிகளைச் சரணடைகிறேன்’ என்று பாடி மகிழ்கிறார் ஆழ்வார்.

கோயிலினுள் செல்வோம் ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், பெருமாளின் பால சயனத் தோற்றத்துக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளார். இடது பக்கம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாக சாலையும், ஆழ்வார்கள் சந்நதியும் அமைந்துள்ளன. மூலவரை தரிசித்து விட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம். தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை நோக்கியபடியும் அடுத்தடுத்து மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன. கூடவே விஷ்ணு துர்க்கை.

தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனிச் சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின் கரையில் எழுந்தருளியிருக்கிறார்.

தனக்குத் தனி சந்நதி அமைய அருள் புரிந்த பெருமாளுக்கு நன்றி சொல்லும் பாவம் முகத்தில் தெரிகிறது. கருடனுக்குச் சமமாக இவரையும் பக்தர்கள் வணங்க வழி செய்து கொடுத்திருக்கிறார் அல்லவா? இவர் அனைத்து வகையான நாகதோஷங்களையும், சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளையும் பெருமாளின் கருணையோடு தீர்க்க வல்லவர்; மகப்பேறும் அருளும் பெருந்தகையாளன்.

மயிலாடுதுறை – பேரளம் – திருவாரூர் பாதையில் கொல்லுமங்குடி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளதுதிருச்சிறுபுலியூர்.காலை 7 முதல் 12 மணிவரை; மாலை 5 முதல் 8 மணிவரை கோயில் திறந்திருக்கும். கோயில் தொடர்புக்கு: 04366-233041 – 233826

தொகுப்பு: சுபஹேமா

The post தனிச் சந்நதி கொண்டருளும் ஆதிசேஷன் appeared first on Dinakaran.

Tags : Kondarulum ,Trichirubuliyur ,Perumal ,Tanich Sannadi ,Kondarulum Adisashan ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்