×

தெளிவு பெறுவோம்: எனக்கு யாரும் தரமாட்டேன் என்கிறார்களே?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தெளிவு பெறுவோம்

எனக்கு யாரும் தரமாட்டேன் என்கிறார்களே?
– மு.ராஜராஜன், ஹைதராபாத்.

பதில்: சிலருக்கு இதைப் போன்ற ஒரு எண்ணம் உண்டு. யாரும் நம்மை மதிப்பதில்லை. நமக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எல்லோருமே அலட்சியப் படுத்துகிறார்கள் என்று நினைப்போர்கள் அதிகம். பெரும்பாலும் இது கற்பனையாகவே இருக்கும். யார் யாரைப் பார்ப்பது போல இன்று இருக்கிறார்கள் அவரவர்களுக்கு அவரவர் வேலை. இதில் உங்களை கவனிப்பதற்கா நேரம் இருக்கிறது? ஒரு அன்பர் நம்மிடம் புலம்பினார்.

‘‘என்னை யாரும் கண்டுக் கொள்வதில்லை’’
‘‘நீங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும். பலராலும் விரும்பப்பட வேண்டும், அவ்வளவுதானே’’ என்றேன்.
“ஆமாம். அதற்கு என்ன வழி?’’ என்றார் ஆவலோடு.

‘‘சரி, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’’
‘‘கேளுங்கள்’’
‘‘ஒரு திருமணம். மாப்பிள்ளை தோழர்கள் நான்கு ஐந்து பேரோடு மண்டபத்தில் காலையில் இருந்த மாப்பிள்ளை, இன்னொரு நண்பரோடு சேர்ந்து எங்கேயோ போய்விட்டார். மண்டபம் பரபரப்பாகி விடுகிறது. எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடுகிறார்கள்… யாரைத் தேடுகிறார்கள். மாப்பிள்ளையைத் தேடுவார்களா, அவர் நண்பர்களைத் தேடுவார்களா?’’
‘‘மாப்பிள்ளையைத் தான் தேடுவார்கள்.’’
‘‘ஏன்?’’

‘‘தாலி கட்டுவதற்கு அவர் முக்கியமல்லவா?’’
‘‘அதேதான். நாம் முக்கியம் என்றால் மாப்பிள்ளையைத் தேடுவது போல, நம்மைத் தேடுவார்கள். நமது தேவையை இந்த சமூகம் உணர வேண்டும். உங்கள் முக்கியத்துவத்தையும் தேவையும் உணரும்படி உங்கள் நற்செயல்கள் அமைய வேண்டும்.’’

‘‘ம்…’’
‘‘அவர் இருந்தால் இப்படி ஆகுமா”, “அவர் இல்லாமல் போய்விட்டாரே” என்று சொல்லும்படியாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘‘அவர் இருந்ததால்தான் இப்படி ஆகியது” என்றோ, “நல்ல வேளை. அவர் இல்லை.” என்று நினைப்பது போல் நடந்து கொள்ளக்கூடாது. இப்படி இருந்தால் உங்களுக்கான முக்கியத்துவம், தானே உங்களைத் தேடி வரும். நீங்கள் புலம்ப வேண்டியது இல்லை. முக்கியத்துவத்தைத் தேடிப் போக வேண்டியது இல்லை.’’

? அறிவு என்பது என்ன?

– பார்கவி, சேலம்.

பதில்: அறிவு என்பதற்கு திருவள்ளுவர் அற்புதமான விளக்கத்தைத் தருகிறார். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீ இ நன்றின்பால் உய்ப்பது அறிவுஇதற்கு உரை சொன்ன பரிமேலழகர், மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்லவிடாது, அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, தீயதனின் நீக்கி நல்லதன் கண் செலுத்துவது அறிவு என்றார். எது நமக்கும், நம் ஆத்மாவுக்கும் நன்மை செய்கின்றதோ அதற்கு அறிவு என்று பெயர். எது மெய்ப் பொருளை நோக்கி ஒருவனுக்கு ஞானத்தைத் தருகிறதோ அதற்கு மெய்யறிவு என்று பெயர்.

ஒருவரது நன்னடத்தைக்கு அறிவே வழிகாட்டி. பலவகையான எண்ணங்கள் வாழ்நாள் முழுதும் ஒருவரது மனத்தை தாக்கிய வண்ணமே இருக்கும். அவற்றுள் வேண்டாதவற்றை முன்னரே ஒதுக்கிக் கொள்வது மனத்துக்கு இயலாது. அறிவுதான் ஓய்வு ஒழிச்சலின்றி, எப்பொழுதும் விழிப்போடு இருந்து மனத்தை அதன் போக்கில் விட்டுவிடாமல் அது தீயதைப் பற்றும்போது பிடித்து நிறுத்தி நல்ல வழியில் செலுத்த வேண்டும். மனத்தை எப்பொழுதும் நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டது அறிவு. ஒருவனுடைய அறிவுடைமை, அவனுக்குத் தீமை வருவதையும் தடுக்கும். அவன் பிறருக்குத் தீமை எண்ணுவதையும் விலக்கும். அதைப் போலவே, அவனுக்கு நன்மை எது என்பதையும் காட்டும்.

பிறருக்கு நன்மை செய்யவும் தூண்டும். அறிவுள்ளவன் தீயவழியைத் தெரிவு செய்ய மாட்டான். தீயவழியில் செல்பவன் அறிவற்றவனாகவே கருதப்படுவான்.வாழ்க்கைச் சூழல் ஒருவனுடைய ஆளுமை உருவாக்கத்துக்கும், நன்னெறி ஒழுகுதலுக்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது. நல்ல சூழல் உதவியாக அமையாதபோதுகூட, அவன் தன் அறிவுச் செயற்பாட்டை விழிப்பாக வைத்திருந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி அது நாடிச் செல்லும் தீயவழி போகவிடாது தடுத்து நிறுத்தி நல்ல வழியில் ஒழுகுவானானால், ஆளுமையும் உயரும் வாழ்வும் மேம்படும். உலகியலில் பார்க்கலாம்.

ஒரு காரை, ஒருவர் ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று இன்னொரு கார் இவரை முந்திச் சொல்கிறது. இப்பொழுது அவர் இரண்டு வழிகளில் செயல்படலாம். ஒன்று அறிவின் வழி.
இன்னொன்று உணர்ச்சியின் வழி.தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தி, அவரை முந்திச் செல்ல முயலலாம். அல்லது, ‘‘என்னமோ, போகின்றான் போ’’ என்று தன் வேகத்தில் தொடர்ந்து தன் வழியில் போய்க் கொண்டிருக்கலாம். முதல் வழியில் நடந்தால் உணர்ச்சி வழியில் நடந்ததாகப் பொருள்.

சில பேருந்துக் காரர்கள் இப்படித்தான் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வார்கள். அனாவசியமான வேகத்தோடு செல்வார்கள். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்துக்குள்ளாகிவிடும். “ஓவர் டெக் செய்து போகிறார்களா, போகட்டும். நாம் நம்முடைய வழியில், நம்முடைய வேகத்திலே செல்வோம் என்று நினைத்துக் கொண்டு இருந்தால், நாம் தேவையில்லாமல் வேகத்தைக் கூட்டி, தேவையில்லாத மன உளைச்சலுக்கும் பதட்டத்துக்கும் ஆளாகி செயல்பட வேண்டிய அவசியம் இருக்காது.

சீதையை இலங்கையில் தேடப் போன அனுமன், ராவணனின் அரண்மனையில், ராவணன் தூங்குவதைப் பார்க்கிறான். ராவணனை அங்கேயே கொன்றுவிட வேண்டும் என்று உணர்ச்சி வசப்படுகின்றான். சற்றே சிந்தித்துப் பார்த்து, ‘‘நம்மை இங்கே அனுப்பியது சீதையைப் பார்த்து வரத்தானே தவிர, ராவணனைக் கொல்வதற்காக அல்ல’’ என்று முடிவுக்கு வந்து விடுகின்றான். அறிவு உடையவர்கள், ஒரு காரியத்துக்கு வந்து, வேறு காரியத்தைச் செய்ய மாட்டார்கள், என்று அறிவின் துணை கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்துகின்றான்.

என்று ஊக்கி, எயிறு கடித்து,
இரு கரமும்பிசைந்து, எழுந்து
நின்று, ஊக்கி,உணர்ந்து உரைப்பான்
நேமியோன்பணி அன்றால்
ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல்
உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்
பின்தூக்கின்இதுசாலப்
பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்”
நம்மில் பெரும்பாலோர் உணர்ச்சி வழியைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே இங்கே மோதிக் கொண்டு நிற்கிறார்கள்.

? தூதுவளைக் கீரையால் நினைவாற்றல் வரும் என்கிறார்களே, உண்மையா?

– சிவசுந்தரம், பாளையங்கோட்டை.

பதில்: தூதுவளைக் கீரையால் நினைவாற்றல் வருமா என்பது தெரியவில்லை. ஆனால் அது மிக அற்புதமான கீரை. காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. ஆன்மிகத்தில் இந்த கீரைக்கு ஒரு மதிப்பு உண்டு. ஒரு நாயன்மார் வாழ்க்கையோடும், ஒரு வைணவ ஆச்சாரியார் வாழ்க்கையோடும் தொடர்புடையது இந்த தூது வளைக் கீரை. சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். யாகத்தின் மூலம் கொடுக்கிற ஆஹுதிகள், அக்னிமூலமாக பரமசிவனை சென்றடைகிறது.

இருந்தாலும், அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாகவந்து, அந்த ஹவிஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது. ஈசனின் பரம பக்தரான சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார். தம்பிரான் தோழரல்லவா. சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம் கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்தான் என்று புரிந்துவிட்டது.

தினம் அவருக்கு தூதுவளைக்கீரையைத் தந்து, நட்பினைப் பெற்று, தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டார். வைணவத்தில், நாதமுனிகள் சீடர் உய்யக்கொண்டார். உய்யக்கொண்டார் சீடர் மணக்கால் நம்பி. அவர் ஆளவந்தாரை வைணவ திசைக்குத் திருப்புவதற்காக இந்த தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தினார். இந்த கீரை, தூது சென்று அவரை வளைத்து வைணவம் நெறிக்குத் திருப்பியது என்பதால், தூதுவளைக் கீரையை “தூது சென்று வளைத்த கீரை’’ என்று நயமாகச் சொல்லுவார்கள். என் நண்பர் ஒருவர், தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிடுவார்.

தினமும் 20 அல்லது 30 ஆங்கில வார்த்தைகளை மனப்பாடம் செய்வார். தூது வளைக் கீரையை சாப்பிட்டதாலோ அல்லது நன்றாகப் படித்ததாலோ தெரியவில்லை, அதிகமான ஆங்கில வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டே போனார்.

அதற்கு பிறகு, நான் வெளியூர் சென்றுவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து அந்த நண்பரைச் சந்திப்பதற்காக சென்றேன். அவர் இல்லை. அவருடைய உறவினரைச் சந்தித்தேன்.‘‘என்ன தூதுவளைக் கீரையைச் சாப்பிடுவாரே நண்பர், அவருடைய நினைவாற்றல் இப்பொழுது எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டேன். அவர் உறவினர் சொன்னார்;

‘‘அதை ஏன் கேட்கிறீர்கள். ரொம்ப அதிகமாகிவிட்டது. மனிதன் போன ஜென்மத்து விஷயங்களைக் கூட நினைவுபடுத்திச் சொல்லுகிறார்’’ என்றார்.

‘‘சரி அவரைப் பார்க்க வேண்டுமே,
இப்பொழுது எங்கு இருக்கிறார்?’’
உடனே அவர் சொன்னார்;
‘‘ஆஸ்பத்திரியில்’’
எந்த ஆஸ்பத்திரி என்று கேட்கவில்லை.

? வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? எதைச் செய்தால் சிறப்பாக இருக்கும்?

– பாலகணேசன், திருவையாறு.

பதில்: மிக எளிதான விஷயம்தான். சிலவற்றைக் குறைக்க வேண்டும். சிலவற்றைக் கூட்ட வேண்டும். இப்படிச் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதைக் குறைக்க வேண்டும், எதைக் கூட்ட வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்;

குறைக்க வேண்டிய சில விஷயங்கள்:

1. கவலையைக் குறைக்க வேண்டும்.
2. வளவளவென்று பேசுவதைக் குறைக்க வேண்டும்.
3. அதிகமாக உண்பதைக் குறைக்க வேண்டும்.
4. பிறருக்கு உபதேசம் செய்வதைக் குறைக்க வேண்டும்.
5. அதிகமாக, அனாவசியமாகச் செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.
6. பிறர் மீது கோபப்படுவதைக் குறைக்க வேண்டும்.

கூட்ட வேண்டிய சில விஷயங்கள்:

1. சுறுசுறுப்பைக் கூட்ட வேண்டும்.
2. சிறிது தூரம் செல்வதாக இருந்தாலும்கூட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதை குறைத்து, நடையைக் கூட்ட வேண்டும்.
3. சிந்தனையைக் கூட்ட வேண்டும்.
4. படிப்பதைக் கூட்ட வேண்டும்.
5. உண்ணும் போது மென்று சாப்பிடும் பழக்கத்தைக் கூட்ட வேண்டும்.
6. தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்ற வைராக்கிய உணர்வைக் கூட்ட வேண்டும்.
7. பத்து ரூபாய்க்கு இரண்டு ரூபாயாவது சேமிப்பது என்கின்ற சேமிப்பு உணர்வைக் கூட்ட வேண்டும்.
8. தினசரி பிரார்த்தனை செய்வதையும், தியானம் செய்வதையும் கூட்ட வேண்டும்.
9. உடற்பயிற்சி நேரத்தைக் கூட்ட வேண்டும்.
10. குடும்பத்தோடு கலந்து பேசுவதைக் கூட்ட வேண்டும்.
11. நல்ல இசையைக் கேட்கின்ற நேரத்தைக் கூட்ட வேண்டும்.

கூட்ட வேண்டியது கூட்டி, குறைக்க வேண்டியதை குறைத்தால், உங்கள் வாழ்வு வளமையாகவும் செழுமையாகவும் இருக்கும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுவோம்: எனக்கு யாரும் தரமாட்டேன் என்கிறார்களே? appeared first on Dinakaran.

Tags : Kumkum ,M. Rajarajan ,Hyderabad ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!