×

கத்தியுடன் நடுரோட்டில் ரகளை: பிரபல ரவுடி சிறையில் அடைப்பு

 

புதுச்சேரி, ஜூலை 11: முத்தியால்பேட்டையில் நடுரோட்டில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை காவல் சரகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்ஐ சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருசுகுப்பம், பிரான்சிஸ் அன்சாரி வீதி, சின்னநாடார் வீதி சந்திப்பு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டிருந்த வாலிபரை சுற்றிவளைத்து விசாரித்தனர். சோதனையில் கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் குருசுகுப்பத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்கிராஜ் (32) என்பதும், ரவுடியான இவர் மீது 4 கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. குண்டாஸில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த அவர், மீண்டும் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டிருக்கவே அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவின்கீழ் வழக்குபதிந்த போலீசார், விக்கியை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே லாஸ்பேட்டை, மடுவுபேட் ரவுடியான பார்த்திபன் என்ற பாரதி (25) தற்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவரால் மீண்டும் ஊரில் பொதுஅமைதிக்கு களங்கும் ஏற்படும் சூழல் இருப்பதால் 2 மாதம் ஊரில் நுழைய தடைவிதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா தலைமையிலான போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

The post கத்தியுடன் நடுரோட்டில் ரகளை: பிரபல ரவுடி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpettai ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு