×

சென்னை அரசு பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று அதிகாலை பணியில் இருந்த அரசு பஸ் கண்டக்டர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாட்டார்மங்கலம் கிழக்கு தெருவில் வசித்தவர் வரதராஜன் (53). பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று பெரம்பலூரில் இருந்து மால்வாய் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக சென்றார். கருணாநிதி என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேருந்து வந்தபோது, கண்டக்டருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக ஓட்டுனர் கருணாநிதி பேருந்துடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது, அங்கு வரதராஜனை பரிசோதித்த மருத்துவர், நெஞ்சு வலி அதிகமாக இருப்பதால், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வரதராஜனை ஆம்புலன்சில் ஏற்றும்போது, பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் இன்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சென்னை அரசு பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Chennai government ,Dindivanam ,Tindivanam ,Perambalur ,Government ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...