×

திறப்பு விழாவே மூடு விழாவானது பிரியாணிக்காக குவிந்த மக்கள் கடையை மூடிய கலெக்டர்: ‘மட்டனுக்கு சிக்கன் இலவசம்’ என அறிவிப்பால் வினை

வேலூர்: காட்பாடியில் பிரியாணி கடை திறப்பு விழாவில் மட்டன் பிரியாணி ஒன்று வாங்கினால், சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால், மக்கள் முண்டியடித்தனர். அவ்வழியாக வந்த கலெக்டர் இதைப்பார்த்து கடையை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே காட்பாடி-வேலூர் சாலையில் நேற்று புதிய பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ‘ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. காலையில் கடை திறந்ததும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்தபடியும், கையால் முகத்தை மறைத்தபடியும் காத்திருந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென இறங்கி கடையில் ஆய்வு செய்தார்.

அப்போது, ‘நீங்க என்ன பிச்சையா போடுறீங்க, உங்கள் கடையை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதி படாதவாறு நிழற்கூடமோ, இருக்கை வசதி எல்லாம் செய்து கொடுக்காமல் இப்படி அவதிப்படுகிறார்கள்’ என கோபமாக கேட்டார். மேலும் பொதுமக்களை கலைந்து செல்லும் படியும், கடையை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கடையை மூட முயன்றனர். ஆனால் வாடிக்கையாளர்கள் கலைந்து செல்லாமல் கடைக்குள் சென்றுவிட்டனர். இதையடுத்து அனைவரையும் விரட்டியடித்து போலீசார் கடையை மூடினர். தொடர்ந்து அங்கிருந்த எஸ்ஐயை அழைத்து இனி இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்து சென்றார். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையில், புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்று பெறாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திறப்பு விழாவே மூடு விழாவானது பிரியாணிக்காக குவிந்த மக்கள் கடையை மூடிய கலெக்டர்: ‘மட்டனுக்கு சிக்கன் இலவசம்’ என அறிவிப்பால் வினை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Katpadi ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...