×

கலெக்டர் ஆய்வுசெய்து 20 நாளாகியும் அதிகாரிகள் அலட்சியம் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கழுகுமலை, ஜூலை 9: கழுகுமலை பேரூராட்சி பகுதியில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி செல்வதோடு ஏராளமான இடங்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதை கலெக்டர் ஆய்வு நடத்தி 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடைப்புகளை சரிசெய்யாமல் அலட்சியத்துடன் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நாலாட்டின்புதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கழுகுமலை பேரூராட்சிக்கு தினமும் 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 லட்சம் லிட்டருக்கும் குறைவாக குடிநீர் வருவதால், சீராக குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து நாலாட்டின்புதூர் நீரேற்றும் நிலையத்தில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் அளவுக்கும், விநியோகம் செய்யப்படும் குடிநீர் அளவுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய பசும்பொன் நகர் பகுதியில் பேரூராட்சி சார்பில் குடிநீர் அளவு மீட்டர் பொருத்தப்பட்டது.

மேலும், பேரூராட்சி சார்பில் குடிநீர் குழாயில் உள்ள உடைப்புகள் கண்டறியப்பட்டு சரி செய்யும் பணி நடந்தது. இதனிடையே கடந்த ஜூன் 15ம் தேதி நாலாட்டின்புதூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்த தூத்துக்குடி கலெக்டர், கழுகுமலைக்கு நீரேற்றும் செய்யப்படும் அளவை சரி பார்த்தார். இதைத்தொடர்ந்து, நாலாட்டின்புதூர்- கழுகுமலை சாலையில் குழாயில் உடைப்பு பகுதிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேலும் பசும்பொன் நகரில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் எவ்வளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளை உடனடியாக சரிசெய்யவும், குடிநீர் விநியோகித்தில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்யவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், கலெக்டர் ஆய்வு முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித பணிகளையும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே நாலாட்டின்புதூரில் இருந்து கழுகுமலைக்கு வரும் வழியில் புதூர், வானரமூட்டி பட்டப்பயிற்சி நிறுவனம் அருகே அங்குள்ள குறுங்காடு திட்டப்பகுதி, காளாங்கரைப்பட்டி அருகேயுள்ள பகுதி, கழுகுமலை – கெச்சிலாபுரம் இடையேயுள்ள பகுதி ஆகிய இடங்களில் பைப்லைனில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்படாததால் அதில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீரானது பெருக்கெடுத்து குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘ஏற்கனவே கலெக்டர் தனது ஆய்வின்போது, சீவலப்பேரியில் இருந்து வரும் குடிநீர் குழாயிலும், நாலாட்டின்புதூரில் இருந்து கழுகுமலை செல்லும் குழாயில் உள்ள உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், தற்போது வரை உடைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்யாமல் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவது மட்டுமின்றி, சரிவர குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உடைப்புகளை சீரமைக்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

The post கலெக்டர் ஆய்வுசெய்து 20 நாளாகியும் அதிகாரிகள் அலட்சியம் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Dinakaran ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்