×

தெளிவு பெறுவோம்

அடங்காப் பிடாரி என்று சிலரைச் சொல்கிறோம். பிடாரி அம்மன் என்ற தேவியையும் வழிபடுகிறோம். அதற்கு என்ன பொருள்?
– ஹரிணி, குன்னூர்.

உலக அன்னையான அம்பிகைக்கு `பீடாபஹாரி’ என்றும் ஒரு பெயர். பீடாபஹாரி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, நம் பீடைகளை நீக்குபவள் என்று அர்த்தம். பீடாபஹாரி அம்மன் என்ற பெயரே பேச்சு வழக்கில் மருவி, பிடாரி அம்மன் என சிலரால் அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் கோபத்தால் வையும்போதும் ஆசிர்வாதமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பிடாரி என்பதால் அந்த அம்மன் அருள் உனக்குக் கிட்டட்டும் என்று திட்டல் ஆசிர்வாதமாகக் கூடக் கொள்ளலாம். ‘நீ நாசமத்துப் போக’ என்றும் ஒரு வசவு உண்டு. அதாவது நாசமற்றுப் போக என்று பொருள். கோபத்தை வெளிப்படுத்துவதிலும் எத்தனை நல்லெண்ணம் பாருங்கள்!

?அனுமார், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்வது போன்ற படத்தை, வீட்டில் வைத்து வழிபடக் கூடாதா? அனுமன் படத்தை வீட்டில் வைத்திருந்தால் வீடே தடுமாறிப் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்களே?
– விமலாம்பிகா, பாண்டி.

இந்த கருத்து முற்றிலும் தவறு. ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்வது போன்ற படத்தைத் தாராளமாக வீடுகளில் வைக்கலாம், வழிபடலாம்.

?இரவு நேரங்களில் ‘நாராயணா’ என்ற நாமத்தையும் ‘ராமா’ என்ற நாமத்தையும் சொல்லக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
– சுதா, பட்டீஸ்வரம்.

இறைவன் நாமத்தைச் சொல்வதற்கு எல்லா நாளும் நல்ல நாள்தான், எல்லா நேரமும் நல்ல நேரம்தான். இஷ்ட தெய்வத்தின் எந்த நாமத்தையும் எக்காலத்திலும் ஓதலாம். இதற்கு நாராயணா, ராமா ஆகிய நாமங்கள் விதி விலக்கல்ல. ‘‘எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் கவலை இல்லாமல் பகவானைத்தான் பூஜிக்க வேண்டும்’’ என்கிறார், தேவரிஷி நாரதர். ‘‘துஞ்சலும் துஞ்சலில்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தோறும்’’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. இதற்கு, ‘‘உறங்கும்போதும் உறக்கம் இல்லாதபோதும் மனமுருகித் தினந்தோறும் (நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்களை) நினையுங்கள்’’ என்று பொருள்.

‘‘இரவு நேரங்களில் ஆஞ்சநேயர், ஸ்ரீராமரைத் தியானம் செய்துகொண்டிருப்பார். அத்தகைய நேரங்களில் நாம் ராமநாமம் சொன்னால், ஆஞ்சநேயரின் தியானம் கலைந்து ராமநாமம் சொல்லப்படும் இடத்திற்கு ஓடி வந்து விடுவார். அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இரவு நேரத்தில் நாம் ராமநாமம் சொல்லக்கூடாது’’ என்ற கருத்து சிலரிடையே நிலவுகிறது. இது அர்த்தமற்றது.

?அம்மன், விஷ்ணு, முருகன், விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை எத்தனை முறை வலம் வருவது நல்லது?
– மூர்த்தி, கடலூர்.

தெய்வத்தை வணங்குவதற்கும், வலம் வருவதற்கும் கணக்கு ஒன்றுமில்லை. சிலர் ஒரு முறை நமஸ்கரித்து, ஒருமுறை வலம் வருகிறார்கள். சிலர் மூன்று முறை வணங்கி, மூன்று முறை வலம் வருகிறார்கள். அது அவரவருடைய சம்பிரதாயத்தையும் சௌகரியத்தையும் பொறுத்தது. பக்தியுடன் செய்யும் வணக்கத்தை எப்படி இருந்தாலும் தெய்வம் ஏற்கும்.

?கோயில்களில் நவகிரகம், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியவர்களுக்குச் சந்நதிகள்
இருக்கின்றன. இவர்களில் முதலில் யாரை வணங்க வேண்டும்?
– வடிவு, நாமக்கல்.

முதலில் சண்டேஸ்வரர், இரண்டாவது பைரவர், மூன்றாவது நவகிரகங்கள் என்று வணங்குவது முறை.

தொகுப்பு: அருள் ஜோதி

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Tags : Adankab Bidari ,Pitari Amman ,Harini ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூரில் பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்