×

பொது சிவில் சட்டத்தி்லிருந்து சிறுபான்மையினருக்கு விலக்கு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை

லக்னோ: பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மட்டுமின்றி, அனைத்து மத சிறுபான்மையினருக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் வரும் 14ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம் 27ம் தேதி நடந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கைக்கு அதன் செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாரிய செய்தித் தொடர்பாளர் காசிம் ரசூல் இலியாஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘பொது சிவில் சட்டம் தொடர்பான எங்கள் ஆட்சேபனைகளை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுதொடர்பாக நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் 251 உறுப்பினர்களில் 250 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு தனிப்பட்ட முறையில் அனுப்புமாறு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிறரையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பழங்குடியினர் மட்டுமின்றி, அனைத்து மத சிறுபான்மையினர்களுக்கும் பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முஸ்லிம் சட்ட வாரியம் விரும்புகிறது’’ என்றார். முன்னதாக, சட்ட ஆணைய பிரதிநிதிகளுடன் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பொது சிவில் சட்டத்தி்லிருந்து சிறுபான்மையினருக்கு விலக்கு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Muslim Personal Law Board ,Lucknow ,Dinakaran ,
× RELATED நாட்டின் அரசியல் சட்டத்தை அனைவரும்...