×

கிரிக்கெட் அணியைப் போல எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி: கேப்டன் சுனில் சேத்ரி டுவிட்

பெங்களூரு: 14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நேற்றிரவு இறுதி போட்டி நடந்தது. இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் குவைத் வீரர் அல்கால்டி கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் லல்லியன்சுவாலா சாங்டே கோல் அடிக்க 1-1 என இந்தியா சமன் செய்தது. பின்னர் ஆட்டத்தின் கடைசி வரை கோல் எதுவும் விழாததால் சமனில் இருந்தது.

கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் முதல் 5 வாய்ப்பில் குவைத் 2வது , இந்தியா 4வது வாய்ப்பையும் தவறவிட்டன. தொடர்ந்து 6வது வாய்ப்பில் இந்தியா கோல் அடித்த நிலையில், குவைத்தின் அந்தவாய்ப்பை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து. சிறப்பாக செயல்பட்டு முறியடித்தார். இதனால் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுவரை நடந்துள்ள 14 தொடர்களில் இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 50ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41லட்சம்) பரிசும், குவைத்திற்கு 25ஆயிரம் டாலரும் (ரூ.20.5லட்சம்) பரிசாக வழங்கப்பட்டது.

இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி கோல்டன் பால் , கோல்டன் ஷு விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி தனது டுவிட்டர் பதிவில், கிரிக்கெட் அணியைப் போல எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி, நாங்கள் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம். நன்றி இந்தியா என பதிவிட்டுள்ளார்.பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,பிரியங்காகாந்தி, தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post கிரிக்கெட் அணியைப் போல எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி: கேப்டன் சுனில் சேத்ரி டுவிட் appeared first on Dinakaran.

Tags : Captain Sunil Sethri Dwight ,Bangalore ,14th South Asian Football Championship ,Kandirawa Ground ,Sunil Sethri Dewitt ,Dinakaran ,
× RELATED எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ்...