×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

542. மஹாவராஹாய நமஹ (Mahaavaraahaaya Namaha)

ஸ்ரீபராசர பட்டர் என்ற மகான், வராக புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாகாத்மியத்துக்கு விளக்கவுரை வழங்கி உள்ளார். அந்த விளக்கவுரையின் அறிமுகப் பகுதியில், திருமாலின் மற்றைய அவதாரங்களோடு ஒப்பிட்டு வராகப் பெருமாளின் பெருமைகளை அழகாக விளக்குகிறார். இதை நஹி நிந்தா நியாயம் என்று வடமொழியில் சொல்வார்கள். மற்ற அவதாரங்களைக் குறைத்துச் சொல்வது இங்கே நோக்கமில்லை, வராகனின் பெருமையைச் சொல்வதே நோக்கம் என்ற கோணத்தில் மட்டும் இதை அணுகுமாறு வாசகர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்துமே வராகரின் பெருமைகளைப் பறைசாற்றப் பராசர பட்டர் தந்த விளக்கங்கள்.

வைகுண்டத்தில் பரவாசுதேவனாகத் திருமால் விளங்குகிறார். அவர் திருவடி களில் நாம் சரணாகதி செய்ய முடியுமா என்றால், நம்மால் வைகுண்டநாதனை இங்கிருந்து சென்று அணுக முடியாதே. பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் திருவடியில் சரணாகதி செய்ய முடியுமா என்றால், இந்த ஊனக் கண்களுக்குப் பாற் கடல் தெரியவே தெரியாது. எனவே அணுகுவது மிகவும் கடினம். பகவானின் அவதாரங்களுள் மத்ஸிய அவதாரத்திடம் சரணாகதி செய்யலாமா என்றால், அதற்கு ரசமாகப் பராசர பட்டர் விளக்கம் தந்தார். மத்ஸிய மூர்த்தியே மீன் வடிவில் தண்ணீருக்குள் இருக்கும் போது, அவர் எப்படிப் பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பார் என்று கேட்டார் பட்டர். மத்ஸிய மூர்த்தியால் முக்தி தர முடியாது என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வராகனின் பெருமையைச் சொல்லும் நோக்கில் இது சொல்லப்பட்டது.

அவ்வாறே கூர்ம மூர்த்தி, தானே முதுகில் மந்தர மலை என்னும் பாரத்தைச் சுமந்திருப்பதால், மற்றவரின் பாரத்தை எப்படி இறக்குவார் என்று கேட்டார் பராசர பட்டர். நரசிம்மர் கழுத்துக்கு மேல் ஒரு விதமாகவும், கழுத்துக்குக் கீழே வேறு விதமாகவும் இருப்பதால் அவரையும் நம்ப முடியாது. வாமனரோ, சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால் மூவுலகங்களையும் அளந்ததாலே, அவரையும் நம்ப முடியாது. கையில் கோடாரியோடு உக்ரமாக இருக்கும் பரசுராமரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது.

வசிஷ்டரின் சிஷ்யனான ஸ்ரீராமன், ஆசாரத்தில் குறைவுள்ள நம்மை ஏற்பாரா என்று தெரியாது. இவை அனைத்துமேகூட நஹி நிந்தா நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும்.பலராமன் தேன் பருகிக் களித்திருப்பதால், நம்மைக் கவனிக்க அவருக்கு நேரம் இருக்குமா என்று சொல்ல முடியாது. விளையாட்டாகப் பொய் சொல்லி லீலை செய்யும் கண்ணபிரான், நம்மை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது. கல்கி அவதாரமே இன்னும் எடுக்காத நிலையில், அவரை எப்படி நம்புவது.

இப்படி மற்றைய அவதாரங்கள் இருக்க, நாம் வராகப் பெருமாளைத் தான் நம்பிப் பற்றிக்கொள்ள வேண்டும். பிரளயக் கடலில் முழ்கிக் கிடந்த பூமியை மீட்டது போல் பிறவிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் நம்அத்தனை பேரையும் மீட்டு அருள்புரிய வல்லவர் வராகப் பெருமாளே ஆவார். எல்லாவற்றுக்கும் மேலாக, என் திருவடிகளை இளமைக் காலத்தில் ஒருவர் பற்றிக் கொண்டால், முதுமை நிலையில் அந்த பக்தன் என்னை மறந்தாலும் நான் அந்த பக்தனை மறவாமல் காப்பேன் என்று வாக்களித்தவர் வராகப் பெருமாள்.

ஆக வடிவத்தாலும் பெரியவர், கருணையாலும் பெரியவர். நம்மாழ்வாரும் ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று வராகப் பெருமாளை விட்டால் வேறு தஞ்சமில்லை என்று பாடுகிறார். இப்படி வடிவத்தாலும் கருணையாலும் உயர்ந்து நிற்கும் வராகப் பெருமாள் மஹாவராஹ என்று அழைக்கப்படுகிறார். மஹாவராஹ என்றால் பெரிய பன்றி வடிவம் பூண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 542-வது திருநாமம்.“மஹாவராஹாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், அந்த வராகப் பெருமாள் நம்மையும் பிறவிப் பெருங்கடலில் இருந்து மீட்டெடுத்துக் காத்தருள்வார்.

543. கோவிந்தாய நமஹ (Govindhaaya Namaha)

பூமிதேவியின் அம்சமாகப் பூமியில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார், மானிடவர்க்கு என்று பேச்சுப் படாது, மாதவனையே மணம்புரிய விரும்பி வாழ்ந்து வந்தாள். அந்தக் கண்ணன் தன்னை வந்து மணந்து கொள்ள வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினாள் ஆண்டாள். ஆனால் அவளது ஆசை இன்னும் வெள்ளமாகப் பொங்கி வந்த பின் அவளுக்குக் காட்சி தந்து மணம் புரியலாம் என்று எண்ணிக் கண்ணன் கொஞ்சம் காலம் தாழ்த்தினான்.

இதன் விளைவாக, ஆண்டாள் மேலும் வாடத் தொடங்கினாள். அப்போது ஆண்டாளின் தோழிகள், நீ இப்படி அனாவசியமாக இறைவனை மணக்க வேண்டும் என்று சொல்லி, உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே. முடிந்தால் ஒரு நல்ல பக்தராகப் பார்த்து மணம் செய்துகொண்டு அவரோடு இணைந்து ஓர் ஆன்மீக வாழ்க்கையை வாழப் பார். அதை விட்டுவிட்டு, பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் எழுந்து வந்து உனக்கு மாலை யிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.ஆனால், ஆண்டாள் தன் கொள்கையில் இருந்து மாறவில்லை. தன்னை நம்பியவர்களைத் திருமால் நிச்சயம் காப்பார் என்று சொன்னாள் ஆண்டாள். அதற்குச் சான்றாக ஒரு வரலாற்றையும் சொன்னாள்.

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்
மாசுடம்பின் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே

முன்னொரு சமயம் இரணியாட்சன் என்ற அசுரன் பூமியைப் பிரளயக் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, பூமியே பாசி படிந்து போயிருந்தாள். அதற்காக அவளை வெறுக்காமல், மிகப்பெரிய வடிவம் கொண்ட வராக மூர்த்தியாக அவதாரம் செய்து, அந்த பூமியை மீட்டெடுத்தார் அல்லவா திருமால். அதுபோலத்தான் அவரே கதி என்று காத்திருக்கும் என் போன்றோரையும் நிச்சயமாக அவர் தேடி வந்து ரட்சிப்பார் என்று பதிலளித்தாள் ஆண்டாள்.

மேலும், அந்த வராகப் பெருமாள்தான், இப்போது திருவரங்கத்தில் அரங்கனாக எழுந்தருளி உள்ளார். அந்த வராகர் சொன்ன வார்த்தைகள் என் உள்ளத்தில் இன்றும் ஒலிக்கின்றன. நீங்கள் எவ்வளவு பெயர்த்து எடுக்க முயன்றாலும், அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் இருந்து நீங்கா என்றாள் ஆண்டாள்.

ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபம் ச மாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்
என்பது வராகன் சொன்ன வார்த்தை.

அடியாரை மறவாமல் காப்பேன் என்று அவன் சொன்ன இவ்வார்த்தை பொய்க்காது என்று சொன்னாள் ஆண்டாள்.அந்தப் பூமியைக் காத்த பகவான், இந்தப் பூமியாகிய ஆண்டாளையும் காப்பான் என்று நம்பி இருந்த ஆண்டாளை, உரிய காலத்தில் காத்தபடியால், வராகப் பெருமாள் கோவிந்த என்று அழைக்கப்படுகிறார். கோவிந்த என்றால் பூமியைக் காத்தவர் என்று பொருள். கோ என்றால் பூமி, கோவிந்த என்றால் பூமியைக் காத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 543-வதுதிருநாமம்.“கோவிந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் துன்பக் கடலில் துவளாதபடி திருமால் காத்தருள்வார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…