×

மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு சென்னையில் விற்பனைக்கு வந்த பெரிய மீன்கள்: விலை குறையாததால் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு சென்னை காசிமேட்டில் நேற்று அதிக அளவில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. பெரிய வகை வஞ்சிரம் கிலோ ரூ.1100, பாறை ரூ.600, சீலா, சங்கரா ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறையாததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சிடைந்தனர். மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டு 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் கடந்த மாதம் 14ம் தேதி வரை இருந்தது. இதனால் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 18ம் தேதி குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. இதனால், மீன்கள் விலை குறையாமல் தடைக்காலத்தில் இருந்தது போலவே மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தடை முடிந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான 25ம் தேதியும் மீன் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சுமார் 450 முதல் 500 விசை படகுகள் நேற்று கரை திரும்பின. அதில் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் பிடிப்பட்டிருந்தது. குறிப்பாக வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. அதே நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. இதனால், நேற்று அதிகாலை முதல் காசிமேட்டில் மீன்வாங்க மக்கள் குவிய தொடங்கினர். கூட்டம் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாக தான் காணப்பட்டது. பெரிய வகை மீன்களாக நிறைய கிடைத்ததால் சங்கரா, பாறை, இறால், கடம்பா போன்ற மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை விலை கூடுதலாக விற்கப்பட்டன.

இதேபோல் மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதாவது, பெரியவகை வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரை விற்கப்பட்டது. கொடுவா ரூ.600, சீலா ரூ.500 சங்கரா ரூ.500 பாறை ரூ.600 இறால் ரூ.400, நண்டு ரூ.300, நவரை ரூ.200, கானங்கத்தை ரூ.200, கடம்பா ரூ.300 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. மீன்விலை அதிகமாக இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் விலையை பொருட்படுத்தாமல் மீன் பிரியர்கள் பெரியவகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. அதே போல சென்னை சிந்தாதிரிப்பேட்ைட மீன் மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் மீன் வாங்க கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது.

The post மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு சென்னையில் விற்பனைக்கு வந்த பெரிய மீன்கள்: விலை குறையாததால் பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Kasimet ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...