×

உயர்பதவியை அருளும் ஸ்ரீமகாராக்ஞீ

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 6

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

2. ஸ்ரீமஹாராக்ஞீ (ஸ்ரீமஹாராக்ஞீ நமஹ)

லலிதாம்பிகையின் முதல் நாமமான ஸ்ரீமாத்ரே என்பது படைத்தல் என்கிற சிருஷ்டியை குறிக்கும். எது ஒன்று தன்னிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்ததோ அதுவே எல்லாவற்றையும் காத்து அருள்கின்றது. அப்படிப்பட்ட காத்தல் எனும் தொழிலைச் செய்யும் பேரரசிக்கே ஸ்ரீமஹாராக்ஞீ என்று பெயர். ராக்ஞீ என்றால் ராணி, அரசி என்று பெயர். மஹாராக்ஞீ என்றால் மகாராணி, பேரரசி என்று பெயர். ராக்ஞீ என்கிற பெயரிலிருந்தே ராணி என்கிற வார்த்தையும் வந்தது.

நாம் நம் பார்வையை கொஞ்சம் விசாலமாக உலகம் நோக்கி திருப்பிப் பார்ப்போமானால் நம்மால் சில விஷயங்கள் புரியாத புதிராக இருக்கும். மாபெரும் கடலை யார் உருவாக்கியது என்று பாருங்கள். அந்தக் கடலுக்குள் சிறிய மீன் முதல் மாபெரும் திமீங்கலத்தை யார் உருவாக்கியது என்று யோசியுங்கள். மீனைத் தவிர எத்தனை எத்தனை தாவர ஜங்கமங்கள் ஆழ்கடல் வரை பரவியுள்ளன. அந்தப் பிரமாண்டமான ஆழமும் அகலமும் கொண்ட அளக்க முடியாத சமுத்திரத்திலுள்ள ஒவ்வொரு உயிருக்கும் அது வாழுதல் பொருட்டு அதற்கான உணவை எப்படி யார் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது வெறும் கடல் எனும் சிருஷ்டியிலேயே இவ்வளவு விஷயங்கள். இதுபோல அடர்ந்த இருண்ட காடுகள், அதிலுள்ள புழு முதல் ராஜநாகம் வரை சர்ப்பக் கூட்டங்கள், மான் முதல் புலி வரை எத்தனை விலங்குகள். மனிதனை உருவாக்கி அவனுக்குள் சிறு செல் முதல் மூளை முதல் எல்லாவற்றையும் மிகக் கச்சிதமாக உருவாக்கி அதை செயல்படுத்துபவது யார் என்று வியக்க முடிகின்றதல்லவா! இவ்வாறு அண்ட பேரண்ட பிரபஞ்சத்தை உருவாக்கி வைத்துள்ளவளையே மகாராக்ஞீ என்று அழைக்கின்றோம்.

இந்த நாமத்தை வெறுமே வார்த்தையாக பார்த்தால் எல்லாவற்றையும் காத்து அருள்பாலிக்கும் மகாராணி என்று எளிதாக முடித்துக் கொண்டு நகர்ந்து விடுவோம். ஆனால் இதையும் தாண்டி இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை எப்படி காக்கின்றாள் என்று பார்த்தால் மட்டுமே இந்த நாமத்தின் ஆழ்ந்த பொருளை நாம் அறிய முடியும். அதை இந்த நாமத்தை பாராயணம் செய்தால் மட்டுமே நாம் அறிய முடியும். இந்த நாமமானது நமது மனதில் விதையாக ஊன்றி முளைத்து வரும்போது மட்டுமே அந்த பிரமாண்டமான காரியம் நம்முள்ளும் தரிசனமாகி வரும். இந்தப் பெயருக்குள்ளேயே அந்த மகாராக்ஞீயின் சக்தியும் அடங்கியிருக்கின்றது.

இதில் நாம் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாமத்திற்கும் வெளிப்புறமாக பிரபஞ்சத்தில் நடத்தப்படும் தொழிலை கொண்டு ஒரு விளக்கமும், அப்படியே நம்முள் அகத்தில் நிகழும் நம்மை உள்ளுக்குள் செலுத்தும் விஷயத்தையும் சேர்த்தே இங்கு பார்க்க வேண்டும். ஸ்ரீமாத்ரே எனும் திருநாமத்தில் சிருஷ்டி என்கிற விஷயத்தைப் பார்த்தோம். இன்னொரு கோணத்தில் சிருஷ்டி என்பது எண்ணத்தால் தொடப்படாத விஷயமாக நிகழ்வது என்றும் பார்த்தோம். இந்தக் கோணத்தில் சிருஷ்டி என்பது ஞான ஸ்பூர்த்தி என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

வெறுமே மண், மலை, காடு, உயிர்கள் மட்டுமல்ல. இந்தப் பிரபஞ்சம் எந்த சத்திய வஸ்துவான லலிதை எனும் பிரம்மத்திலிருந்து வெளிவந்ததோ அந்த மூலமே சிருஷ்டி என்கிற ஞான ஸ்பூர்த்தி. அந்த ஸ்பூர்த்தி என்கிற உருவாக்கும் சக்திக்கே ஸ்ரீமாத்ரே என்று பெயர். இப்போது இங்கு ஸ்ரீமகாராக்ஞீ என்று சொல்லப்படுவதை எப்படி பார்க்கவேண்டுமெனில், அப்படி ஒரு ஜீவனுக்குள் உருவான ஞான ஸ்பூர்த்தியை காக்கிற சக்தியே மகாராக்ஞீ ஆகும். இன்னும் கொஞ்சம் ஆழமாகபோய் புரிந்து கொள்வோமா!

ஒரு தனிமனிதன் மாயை என்கிற இந்த பார்க்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுபட நினைக்கின்றான். நான் உடம்பு என்கிற தேக அபிமானத்திலிருந்து விடுபட்டு ஞான நிலையை எய்த முயற்சிக்கின்றான். அதற்காக அவன் கோயில், பக்தி, சத்சங்கம், ஞானியர் தரிசனம், தத்துவத்தை அறிதல் என்று பல்வேறு விதங்களில் தன் தேடலை துவக்குகின்றான். இந்த தேடலின் இறுதியில் இந்த நான் எனும் அகங்காரம் அழிந்தால்தான் ஞான நிலையை அடைய முடியும் என்று அறிகின்றான். அந்த அகங்காரத்தை அழிப்பவளும் அவள்தான் என்று சரணாகதி செய்கின்றான்.

இறுதியில் அம்மையின் தரிசனத்தை, தான் யார் என்பதை அறிகின்றான். இந்த தன்னை அறிதலே ஸ்ரீமாத்ரே எனும் நாமத்தின் அனுபூதி நிலையாகும். இந்த நாமம் சுட்டும் அனுபவ நிலையாகும். இப்படி தன்னை அறிந்தவன் அந்த நிலையிலிருந்து, அந்த ஞான நிலையிலிருந்து அகலாமல் இருக்க, விலகாமல் இருக்க, பிறழாமல் இருக்கச் செய்யும் அந்த பிரமாண்ட சக்திக்கே மகாராக்ஞீ என்று பெயர்.

அப்போது எவள் இந்த உலகத்தை படைத்தாளோ அந்த சக்தியே காக்கவும் செய்ய ஸ்ரீமகாராக்ஞீ எனும் நாமத்தோடு வருகின்றாள். இப்படி வெளிப்புற அகண்ட பிரபஞ்சத்தையும் காக்கிறவளாகவும், நமக்குள் ஒளிரும் ஞான அகண்டத்தை அகலாது ஸ்திதி என்கிற காத்தல் தொழிலையும் அவளே காப்பதால் அவளுக்கு மகாராக்ஞீ என்று பெயர்.

(சக்தி சுழலும்)

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

அரசியலில் வெற்றி பெறச் செய்யும் மகாராக்ஞீ இந்தத் திருநாமத்தை மட்டும் தொடர்ச்சியாக ஜபித்து வந்தால் உயர் பதவி கிட்டும். பதவி நிலைக்கும். மேலும், அரசியல்துறையினருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ஸ்ரீலலிதாம்பிகையை மனதில் தியானித்து இந்த திருநாமத்தை நூற்றியெட்டு முறை தொடர்ந்து சொல்ல அவர்கள் மிக நிச்சயமாக இந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவார்கள். அரசியலில் சேர்ந்து வெற்றி பெறவும் இந்த நாமம் பெரிதளவில் அருள் செய்யும்.

நாமம் சொல்லும் கோயில்

இந்த நாமம் பேரரசியாக இருந்து காத்தலை சொல்வதால் அதற்கான பெருந்தெய்வமாக திகழ்பவள் மீனாட்சியே ஆவாள். ஏனெனில், இவளே அங்கு அரசியாக இருக்கின்றாள். மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் இறைவி ‘மீனாட்சி’ எனப்படுகிறாள். மீன் தன் பார்வையால் முட்டைகளை பொரியச்செய்து பின் பாதுகாத்தும் வரும் கருணையைப் போலவே, உலக மக்களுக்கு தன் அருட்பார்வையில் நலம் தருவாள் எனும் நயமும் இதில் அடங்கியிருக்கிறது. கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே இந்த மதுரை தேவியும் கண்ணிமைக்காது உலகைக் காத்துவருகிறாள் என்று பொருள்.

ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில் ஏந்தி நிற்கிறாள். பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி அவதரித்ததையும், பிறகு சுந்தரேஸ்வரரான சிவபெருமானை மணமுடித்ததையும் தலவரலாறு தெரிவிக்கிறது. மதுரை மன்னர் திருமலை உள்ளிட்ட பலராலும் இத்தலத்தின் முக்கிய பகுதிகள் அழகுற எழுப்பப்பட்டு, உயரசுற்றுச்சுவருடன், விண்ணை முட்டும் நான்கு கோபுர வாயில்களும், அதனுள்ளே எட்டு சிறிய கோபுரங்களும் அமைந்து இத்தலம் ‘கோயில் மாநகரம்’ என்ற அடைமொழியையும் மதுரைக்குத் தந்திருக்கிறது.

இந்தக் கோயிலின் கிழக்கு கோபுர நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாகப் போகும். அதேபோல வடக்கு-தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டு பார்த்தால், அது சுவாமி சந்நதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இது அன்றைய நம் சிற்பக் கலைஞர்களின் தனித்திறனுக்கான அடையாளம். பூஜை செய்வதற்காக, ஆலயக் குளத்தில் பொற்றாமரைகள் பூத்துப் பெருகிய விவரமும் அறிய முடிகிறது. நான்கு திசைகளிலும் எழிலார்ந்த கோபுரங்கள் கோவில் வாயில்களாகவே திகழ்கின்றன என்றாலும், மீனாட்சி அம்மை கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதால், கிழக்கு கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைவது மரபாகும்.

The post உயர்பதவியை அருளும் ஸ்ரீமகாராக்ஞீ appeared first on Dinakaran.

Tags : Sriemakaraghni ,Adi Shakti Ramya Vasudevan ,Krishna ,Sriemaharakhni ,Srimagarakhangi ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...