×

தினமும் ரூ.1,300 கோடி இழப்பு

கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள கோவை கிளை இந்திய தொழில் வர்த்த சபை பல்வேறு தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கொசினா, கொபாகா, பில்டர்ஸ் அசோசியேசன் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். இதில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சந்திரபிரகாஷ் பங்கேற்று பேசுகையில், ‘‘மைனிங் திட்ட முறையில் உரிய கட்டணம் செலுத்தி உற்பத்தி திறன், தேவைக்கு ஏற்ற கனிமம் பெற அனுமதிக்க வேண்டும். மைனிங் பிளான் வரும் முன் நடைமுறையில் இருந்த குவாரிகளுக்கு விலக்கு தர வேண்டும். உரிமம் பெற்று இயங்கும் குவாரிகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் வரும் முன் அறிவிப்பு தரலாம். குவாரிகளில் கனிமம் எடுத்த அளவை மறைக்க முடியாது. இந்த ஸ்டிரைக் காரணமாக ஜல்லி ஒரு யூனிட் 3000 ரூபாயில் இருந்து அதிகமாகி வருகிறது. யூனிட் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து பொதுமக்கள் வாங்கும் நிலை உருவாகி வருகிறது. கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் விலையும் இரு மடங்கு அதிகமாகி விடும். கட்டிட தொழிலாளர்கள். சாலை பணியாளர்கள், லாரி டிரைவர்கள், குவாரி, கிரசர் தொழிலாளர்கள் என மாநில அளவில் 33.80 லட்சம் பேர் வேலை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு இந்த தொழில் மற்றும் இது சார்ந்த தொழில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1300 கோடி ரூபாய் விற்பனை அடிப்படையிலான வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தினமும் 15 ஆயிரம் பேர் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வடமாநிலத்திற்கு தொழிலாளர்கள் செல்கிறார்கள். தமிழ்நாடு அரசு அயல்நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது பாராட்டுக்குரியது. அதேபோல் உள்ளுரில் பல ஆண்டு காலமாக கிரசர் தொழில் செய்பவர்களை காப்பாற்ற வேண்டுகிறோம். மாநில அளவில் 7,150 கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடு செய்திருக்கிறார்கள். கடன் வாங்கி பல்வேறு சிரமங்கள் இடையே தொழில் நடத்தவோருக்கு மேலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகிறோம். தமிழ்நாடு அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் முறைகேடாக விதிமுறை மீறி இந்த தொழில் நடத்தவில்லை’’ என்றார். இதில் தொழில் அமைப்புகளின் சார்பில் கொசினா நிர்வாகி சகாயராஜ், கொபாகா நிர்வாகி ஜோசப், கிருஷ்ணசாமி, மைக்கேல், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தினமும் ரூ.1,300 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Indian Chamber of Commerce and Industry ,Avinasi Road ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது