×

கத்திகளுடன் சுற்றி திரிந்த 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, ஜூன் 25: புதுச்சேரி முதலியார்பேட்டை தேங்காய்திட்டு சவ ஊர்வல தகராறில் லாரி டிரைவரை 6 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தெற்கு எஸ்பி ரவிக்குமார் உத்தரவின்பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் ரவுடிகள் மீதான கண்காணிப்பை, ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் 100 அடி ரோடு இபிஎப் அலுவலகம் அருகே எஸ்ஐ அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை சுற்றிவளைத்து விசாரித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அனைவரையும் சோதனையிட்டனர். அப்போது 2 பட்டாக்கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிரடியாக விசாரித்தனர்.விசாரணையில், வேல்ராம்பேட் மணிகண்டன் (23), முதலியார்பேட்டை அனிதா நகர் ராகுல் (21), பிரகாஷ் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததாக போலீசார் வழக்குபதிந்து 3 பேரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பிடிபட்ட 3 பேரும் ரவுடிகளின் கூட்டாளிகளா, ஏற்கனவே வழக்குகள் உள்ளதா என காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் இவர்கள் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தார்களா என்பது பற்றியும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post கத்திகளுடன் சுற்றி திரிந்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Mudaliarpet ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!