×

காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான ₹4 கோடி நிலம் மீட்பு

துரைப்பாக்கம், ஜூன் 25: காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான ₹4 கோடி மதிப்புள்ள 10 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் கங்கையம்மன் கோயிலையொட்டி அரசுக்குச் சொந்தமான 10 சென்ட் மெய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கங்கை அம்மன் கோயில் அறக்கட்டளை என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 33 கடைகளை அமைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும், மாநகராட்சி உரிமம் பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டிடத்தை அகற்றி நிலத்தை மீட்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று சோழிங்கநல்லூர் தாசில்தார் பால் ஆனந்தராஜ் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் 33 கடைகளை அகற்றி நிலத்தை மீட்டனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் தயாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 10 சென்ட் நிலத்தின் மதிப்பு ₹4 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான ₹4 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Road, ,Karapakkam ,Duraipakkam ,Karapakkam Rajiv Gandhi Road ,
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...