×

கடலுக்கடியில் நீர் மூழ்கி வெடித்து சிதறி சாகச பயணம் செய்த 5 பேரும் பலி: அமெரிக்கா அறிவிப்பு

பாஸ்டன்: டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்று காணாமல் போன 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடந்த 18ம் தேதி கடலுக்குள் நீர்மூழ்கி கப்பல் சென்றது. நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் (61), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் பைலட் பால் ஹென்றி நார்ஜியோலெட்,கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவரான இங்கிலாந்தை சேர்ந்த ஹமீஷ் ஹர்டிங்,பாகிஸ்தானை சேர்ந்த மிக பெரும் தொழிலதிபரான ஷாஸாதா தாவூத் மற்றும் அவரின் மகன் சுலைமான் ஆகியோர் அதில் பயணித்தனர்.

கடலின் ஆழத்தில் சென்ற பின் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நீர்மூழ்கியை தேடும் பணியை அமெரிக்க, கனடா நாட்டு கப்பல்கள் இரவு பகலாக மேற்கொண்டன. நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று முன்தினம் காலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறி அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க காவல் படை அதிகாரி ஜான் மவுகர் கூறுகையில்,‘‘விபத்துக்குள்ளான நீர்மூழ்கியில் இருந்த யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை. கடலின் ஆழத்தில் மூழ்கிய நீர்மூழ்கியை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது’’ என்றார். உயிரிழந்த ஸ்டாக்டன் ரஷ்ஷின் மனைவி வெண்டியின் கொள்ளுதாத்தா இசிடோர் ஸ்டிராஸ், கொள்ளுபாட்டி ஐடா ஆகியோர் 111 ஆண்டுகளுக்கு முன் டைடானிக்கு கப்பல் விபத்தில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* உடைந்த பாகங்கள் மீட்பு?

இதற்கிடையே டைட்டானிக் கப்பலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் நீர்மூழ்கியின் உடைந்த 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அது காணாமல் போன நீர்மூழ்கியின் பாகங்கள் தானா என வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

The post கடலுக்கடியில் நீர் மூழ்கி வெடித்து சிதறி சாகச பயணம் செய்த 5 பேரும் பலி: அமெரிக்கா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : America ,Boston ,United States Coast Guard ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...