×

கண்ணகி கதையைக் கூறும் ஆற்றுக்கால் தேவி கோயில் சிற்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கண்ணகி கடைசியாக வாழ்ந்த மதுரையிலிருந்து வெகு தூரத்திலிருக்கிறது திருவனந்தபுரம். அங்கே மொழிகூட தமிழ் இல்லை. ஆனால், அந்தக் கண்ணகிக்கு அங்கே கோயில் இருக்கிறது. ‘ஆற்றுக்கால் தேவி கோயில்’ என்று பெயர். இது கிளியாற்றின் கரையில் இருப்பதால் அப்பெயர் வந்தது. கோவலன் கொலை செய்யப்பட்ட பிறகு கண்ணகி கோபாவேசத்தோடு மதுரையை எரித்துவிட்டு, கொடுங்களூரை நோக்கிச் சென்ற போது, ஒரு சிறுமி வடிவம் எடுத்து இந்த திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் என்ற இடத்தில் தங்கி இருந்தாளாம். அப்பகுதியில், வசித்து வந்த தேவி, பக்தரான ‘முள்ளுவீடு காரணபர்’ என்ற இல்லத்தைச் சேர்ந்த முதியவரின் கனவில் கண்ணகி தோன்றி, ஆற்றுக்காலில் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கூறி, கோயிலுக்கான எல்லைகளை வரையிட்டுக் காண்பித்தாளாம். இப்படி எழுந்ததுதான் இந்த ஆற்றுக்கால் தேவி கோயில்.

கோயில் கட்டி முடிந்த போதும், ஒரு அதிசயம் நடந்தது. அவள் கட்டளைப் படியே கோயில் கட்டியான பிறகு எந்தத் தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்யாமல் கருவறையை வெறுமனே வைத்து, கும்பாபிஷேகத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்தார்கள். கும்பாபிஷேகத்தன்று கூட்டத்திலிருந்து திடீரென்று கண்ணகி தோன்றி சிறுமி வடிவில் நேராக கருவறைக்குச் சென்று மூலக் கிரகத்தில் அமர்ந்து கொண்டாளாம். இதுதான் தலபுராணம்.

இக்கோயில் தமிழ்நாட்டுக் கோயில்களின் முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், கோவலன் மண்டபத்தின் வெளிப்புறத்தில் ‘‘கோவலன் – கண்ணகியின்’’ கதையை முழுமையாகச் சொல்லும் வகையில் சிற்பங்கள அலங்கரிக்கின்றன.முதலாவது சிற்பம் – கண்ணகியினுடையது. அதை அடுத்து ஒரு ஆள். அந்த ஆளின் தலையை ஒரு காவலாளி வெட்ட முயல்வது போல் உள்ளது. கடைசி கிளைமாக்ஸ் காட்சி முதலில் காட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சிற்பங்களில் கண்ணகி வரலாறு தொடங்குகிறது. கண்ணகி – கோவலன் திருமணம். மாதவி நாட்டியமாடுவது. மாதவியிடம் கோவலன் மனதைப் பறி கொடுத்து அவளை நாடிச் செல்வது, மாதவி யாழ் மீட்டுவது, கண்ணகி தன் மாலையைக் கழற்றிக் கொடுப்பது, தன்கால் சிலம்பைக் கழற்றி கண்ணகி கொடுப்பது.

இருவரும் கவுந்தி அடிகளுடன் மதுரைக்குச் செல்வது, அங்கே பொன் வணிகரைச் சந்திப்பது, அந்த வணிகர் கோவலனைப் பாண்டிய மன்னனிடம் அழைத்துச் செல்வது, பாண்டிய மன்னன் அந்தச் சிலம்பை வாங்கிப் பார்த்து விட்டு கோவலனைக் கொலை செய்ய உத்தரவிடுவது.கோவலனின் தலை வெட்டப்படுவது, வெட்டப்பட்டு நிலத்தில் கிடக்கும் கோவலனைப் பார்த்து கண்ணகி கதறி அழுவது, கோபாவேசத்துடன், இன்னொரு சிலம்புடன் பாண்டிய மன்னனைச் சந்திப்பது, தவறை உணர்த்த பாண்டிய மன்னன் அதிர்ச்சியால், ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று கூறி மரணமடைவது. பிறகு மதுரையைத் தீக்கிரையாக்குவது, புஷ்ப விமானத்தில் கோவலனுடன் கண்ணகி பறப்பது என இந்தக் கதையை இளங்கோவடிகள் கூறுவது, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொடுங்களூரில் சிலை வடித்துக் கும்பிடுவது என்று ஒன்று விடாமல் கண்ணகி வரலாற்றை சிற்பங்களாக வடித்து மண்டபத்தின் மீது சிலப்பதிகார சுதை சிற்பங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கண்ணகி வரலாற்றைக் கூறும் இப்படியொரு கோயில் தமிழ்நாட்டில்கூட இல்லை. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தமானது. பாண்டிய மன்னனை உயிர் நீக்கம் செய்த கண்ணகி, அதன் பிறகு துயரம் நீங்கி அடுப்பு வைத்து பொங்கல் செய்து அந்த தினத்தைக் கொண்டாடியதாக இங்கே நம்புகிறார்கள். அந்நாளின் நினைவாகவே இத்தலத்தில் பொங்கல் உற்சவம் கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலைச் சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளிலும், தெருக்களிலும் வயல் வெளிகளிலும், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தோப்பு துரவுகள், காலியிடங்கள் என அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து லட்சோபலட்சம் பெண்கள் மட்டும் வந்து பொங்கல் வைத்துக் கண்ணகியை வழிபடுகிறார்கள். 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடியதாக கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post கண்ணகி கதையைக் கூறும் ஆற்றுக்கால் தேவி கோயில் சிற்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Kannagi ,Thiruvananthapuram ,Madurai ,Kannaki ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...