×

விவாகரத்து வழக்கு நீண்டதால் ஆத்திரம்; நீதிபதியின் காரை சூறையாடிய மெர்ச்சன்ட் நேவி கேப்டன் கைது: கேரள நீதிமன்றத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: விவாகரத்து வழக்கு பல வருடமாக நீண்டு கொண்டே சென்றதால் ஆத்திரமடைந்த மெர்ச்சன்ட் நேவி கேப்டன் திருவல்லா குடும்பநல நீதிமன்ற நீதிபதியின் காரை மண்வெட்டியால் அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (55). மெர்ச்சன்ட் நேவியில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சவுமியா விவாகரத்து கோரி கடந்த 2017ல் பத்தனம்திட்டா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளும், ஜீவனாம்சமும் வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்காது என்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி ஜெயபிரகாஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், வழக்கை திருவல்லா நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 வருடமாக வழக்கின் விசாரணை திருவல்லா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி பில்குல் விசாரித்து வந்தார்.

ஆகவே ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும்போது ஜெயபிரகாஷ் மங்களூருவில் இருந்து திருவல்லாவுக்கு வந்து கொண்டு இருந்தார். வழக்கு பல வருடமாக நீண்டு கொண்டு செல்வது ஜெயப்பிரகாஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்றும் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இது ஜெயப்பிரகாஷுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அருகில் உள்ள கடைக்கு சென்றவர் மண் வெட்டியை வாங்கி வந்தார். பின்னர் நீதிபதி பில்குலின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷை கைது செய்தனர்.

The post விவாகரத்து வழக்கு நீண்டதால் ஆத்திரம்; நீதிபதியின் காரை சூறையாடிய மெர்ச்சன்ட் நேவி கேப்டன் கைது: கேரள நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Merchant Navy ,Kerala ,Thiruvananthapuram ,Thiruvalla Family Welfare Court ,Kerala Court ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...