×

அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

சப்த ரிஷிகள் எனப்படுபவர்கள் யார்?
– கணபதி பரமேஸ்வரன், திருவெள்ளக்கோடு.

புராணங்களில் இடம்பெறுபவர்கள் சப்த ரிஷிகள். சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். அவர்கள் அத்ரி, வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகியோர்.

கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிய பிறகு சில வினாடிகள் கோயிலிலேயே உட்காரலாமா? சிலர் உட்காரக் கூடாது என்கிறார்கள். எது சரி?
– எல். சடகோபன், ஸ்ரீபெரும்புதூர்.

பொதுவாகவே கோயிலுக்குச் செல்வது என்பது ஒரு நல்ல ஆன்ம, உடற் பயிற்சி. கோயிலையும், விக்ரகங்களையும் ஒருமனப்பட்டு வலம் வரும்போது, மனதில் இறையுணர்வு நிறைகிறது. இது மனதிற்கு பலம். கைகளையும் கால்களையும் இயல்பாக வீசியபடி நிதானமாக நடந்து வரும்போது உடலுக்கும் பலம். இப்படி மனம், உடலுக்குப் பயிற்சி கொடுக்கும்போது, மனம் சோர்வடையாவிட்டாலும், சில சமயம் உடல் சற்றே சோர்வடையும். அப்படிப்பட்ட உடலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கும் வகையில் கோயிலுக்குள்ளேயே அமர்வது, பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கம்.

இது வெறும் உடல் ஓய்வுக்கான நடைமுறை மட்டுமல்ல, மன அமைதிக்கான பயிற்சி என்றும் சொல்லலாம். கோயிலில் சில பேரை நீங்கள் கவனித்திருக்கலாம். யாருக்கும் எந்த இடையூறும் இன்றி, சற்று ஒதுங்கி அமர்ந்தபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். இவர்கள் தம் மனதிற்கு பலம் கூட்டுகிறார்கள். கோயிலில் வலம் வந்தபிறகு அமர்வது என்பது வெறுமே ஓய்வெடுப்பதற்காக அல்ல. தாம் சுற்றி வந்த இறைவனை நினைத்து, கண்மூடி தியானத்தில் ஆழ்வதற்காகவும்தான். அதுவும் யாருக்கும் எந்த அசௌகரியமும் தராதபடி தனித்து அவ்வாறு ஆழ்வதுதான் சிறப்பு.

அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
– வே. பாலகிருஷ்ணன், விருத்தாசலம்.

உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்குவது அஷ்டாங்க நமஸ்காரம். அதாவது, முன்தலை, முகவாய், இரு கைகள், புஜங்கள் இரண்டு ஆகியவை பூமியில் படும்படியாகத் தரையில் படுத்து, கழுத்தைத் திருப்பித் திருப்பி வலது, இடது காதுகளும் தரையில் படும்படியாக வணங்கும் முறை. ஆண்கள் நமஸ்கரிக்கும் முறை இது. பஞ்சாங்க நமஸ்காரம் என்பது பெண்கள் நமஸ்கரிக்கும் முறை. நெற்றி உச்சி, இரண்டு கை, இரண்டு முழந்தாள் இவை ஐந்தும் தரையில் பட நமஸ்கரிப்பது.

பெருமாள் கோயில்களில் உறியடி உற்சவம் கொண்டாடுகிறார்களே, அது எதைக் குறித்து?
– கோ.வே.தியாக பூபாலன், திருஇந்தளூர்.

இறைவனின் திருவிளையாடல்களை மீண்டும் நடத்திப் பார்த்து, அதை ஆன்மிகப்பூர்வமாக அனுபவித்து ரசிக்கும் பக்தர்களின் சம்பிரதாய நடவடிக்கை அது. பாலகிருஷ்ணன், கோபியர் வீடுகளில், உத்தரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உறியிலிருந்து வெண்ணெய், தயிர் திருடித்தின்றானே, அந்த சம்பவத்தை மறுபடி நிகழ்த்திப் பார்க்கும் வைபவம் அது. கண்ணன் காலத்தில், அவன் தம் வீடுகளிலிருந்து வெண்ணெய் திருடிச் செல்லமாட்டானா, அவனை மிரட்டு வதுபோல விரட்டிக்கொண்டு ஓடமாட்டோமா என்று கோபியர் ஏங்கியதுண்டு.

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு நாடகமாக நிகழ்த்திக் காட்டினால் எவ்வளவு சுவையாக இருக்கும்? அப்படித்தான் பல வருடங்களுக்கு முன்புவரை பல வைணவக் கோயில்களில் நடைபெற்றுவந்தது. ஆனால், நாளாவட்டத்தில், நேரமின்மை காரணமாகவோ, ஆர்வக்குறைவு காரணமாகவோ, எல்லாம் சுருங்கி, வெறும் உறியடிக்கும் நிகழ்ச்சி மட்டுமே தங்கிவிட்டது. இதுவும் எத்தனை நாளைக்கோ…?

தொகுப்பு: அருள்ஜோதி

The post அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : Ganapathi Parameswaran ,Tiruvavalakkod ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…