×

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலின் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது தில்லை என்று அழைக்கப்பட்டது. மேலும் சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் என்றும் கூறலாம்.

சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.

சிற்சபை – சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும் இந்த சபையினை முதல் பராந்தக சோழன் பொன்னால் ஆன கூரை வேய்ந்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

கனகசபை – பொன்னம்பலம் என்று அழைக்கப்படும் இந்த சபையில் ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இதற்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் கூரை வேய்ந்துள்ளார்.

ராஜசபை – ஆயிரங்கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.தேவசபை – பேரம்பலம் என்று அழைக்கப்படும் இந்த சபையின் கூரை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.

நிருத்தசபை – கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் உருவமுடையவராக காட்சி தருகிறார். அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாகவும், பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, காட்சியளிக்கிறார் நடராஜர்.

கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.

மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நதிகளும் உள்ளன. கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம், கேணியும் உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது ஆனித் திருமஞ்சனம். இம்மாதம் 26ம் தேதி ஆனித் திருமஞ்சனம் அனுசரிக்கப்படுகிறது. திருமஞ்சனம் என்றால் ‘புனித ஸ்நானம்’. அன்று நடராஜர் கோவில்களில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம் appeared first on Dinakaran.

Tags : Anith ,Thirumanjanam ,Chidambaram Nataraja ,Cuddalore district ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ...