×

11ம் வகுப்பு மாணவனை தாக்கிய முன்னாள் மாணவன் மாற்றுச்சான்றிதழ் கேட்ட 3 மாணவர்கள்

வேப்பூர், ஜூன் 22: விருத்தாசலம் அடுத்த ஆலடி பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1ம் வகுப்பு படித்து வந்தனர். விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் அதே பள்ளியில் பிளஸ் 1ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ஆலடி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேரில் ஒருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் தண்ணீர் குடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் திட்டி அடித்துக் கொண்டனர். மீண்டும் திங்கட்கிழமை இருவரும் மன்னிப்பு கேட்டு வகுப்புக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஆலடியை சேர்ந்த மாணவனிடம் லோக்கல் பசங்களுடன் நீ சண்டை வாங்குகிறாயா, உன்னை தொலைத்துவிடுவேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து அந்த மாணவனை அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

இதையடுத்து அடித்த அந்த பள்ளியின் முன்னாள் மாணவனின் சமூக வலைதள பக்கத்தை பார்த்தபோது அதில் அவன் பட்டாக்கத்தியுடன் இருக்கும் வீடியோ இருந்துள்ளது. மேலும் அவனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும் அங்கிருந்த மாணவர்கள் கூறியுள்ளனர். அச்சமடைந்த ஆலடி மாணவர்கள் தங்கள் உயிருக்கு பாதிப்பு இருப்பதாக கூறி 3 மாணவர்களும் வேறு பள்ளியில் படிக்க பெற்றோர்களுடன் நேற்று பள்ளிக்கு வந்து மாற்றுச்சான்றிதழ் வேண்டி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்துள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் பிரச்சினை குறித்து 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த கல்வியாண்டில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1ம் வகுப்பு சேர்ந்துவிட்டு மீண்டும் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு சென்றுள்ளனர் என ஆசிரியர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். போதிய வசதிகள் இல்லாததால் வெளியூரிலிருந்து மாணவர்களை இங்கு படிக்க அனுப்பினோம். ஆனால் இங்கு மாணவர்கள் மீது நடக்கும் தாக்குதல் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கல்வித்துறையும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

The post 11ம் வகுப்பு மாணவனை தாக்கிய முன்னாள் மாணவன் மாற்றுச்சான்றிதழ் கேட்ட 3 மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Veypur ,Aladi ,Vriddhachalam ,Vriddhachalam Government Boys High School ,Dinakaran ,
× RELATED அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார்...