×

ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

“நீ.. மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்’’ என்று கூறினார்.

“அஞ்சலையின் மைந்தனே! நீயும் என் அருகில் இருந்தால், மனம் நிம்மதியாக இருக்குமே, நீயும் என்னுடன் இருக்கலாம் அல்லவா’’ என்று துளசிதாசர் கேட்டதும்,

“நீ மட்டுமல்ல யார் ராம நாமம் ஜெபித்தாலும், அவ்விடத்தில் நான் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்’’ என்று அனுமார் கூறினார். மந்தாகினி நதிக்கரையில், குளித்துவிட்டு, “ராம…ராம…ராம…ராம…’’ என்று ராம நாமத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கினார், துளசிதாசர். ராம நாமத்தின் மகிமையை ஊரறிய செய்ய வேண்டும் என்பது தானே துளசிதாசருடைய ஆசை!ராம நாமத்தை உச்சரித்தாலும், எப்பொழுது ராமர் வருவார்? தரிசனம் எப்படி தருவார்? கல்யாண திருக்கோலத்தில் வருவாரா? மரவுரி தரித்து சீதாபிராட்டி, லட்சுமணனோடு வருவாரா? என்றெல்லாம் மனதில் எண்ணத் தொடங்கினார். “அன்று சபரி காத்திருந்தது போல, இந்த துளசிதாரும் உனக்காக காத்திருக்கிறேன். நீ எப்படி எனக்கு தரிசனம் தருவாய் பிரபு?’’ என்றபடி, பலவிதமான சிந்தையோடு அவர் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, நதிக்கரை ஓரத்தில் இரண்டு வாலிபர்கள் வருகின்றார்கள். ஒருவன், கருநீல வண்ணம் கொண்டவன். மற்றொருவன், பொன் போன்ற வண்ணம் கொண்டவன். அவ்விருவரும் மந்தாகினிநதியில் குளித்துவிட்டு “ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும், துளசிதாசரிடத்திலே வந்து நின்று,“ஐயா! எங்களுக்கு நெற்றியிலே இட்டுக்கொள்ள கோபிசந்தனம் கிடைக்குமா?’’ என்று கேட்கிறார். உடனே, துளசிதாசர் கண்களை திறந்து பார்க்கின்றார். அப்படியே வியப்பில் ஆழ்ந்து மயக்கநிலையில்,

“இருக்கிறதப்பா, இதோ தருகிறேன்’’ என்று கோபிசந்தனத்தை பெட்டியில் இருந்து எடுத்து தருகிறார்.கருநீல மேனியன், “ ஐயா! நீங்களே குழைத்து வையுங்கள்’’ என்று நெற்றியைக் காட்டுகின்றார். துளசிதாசரும், வலது கையில் சந்தனத்தை எடுத்து, இடது கையில் சந்தனத்தை குழைத்து, மோதிரவிரலால், கருநீல வண்ணம் உடையவரின் நெற்றியில் இடுவதற்காக செல்லும் பொழுது, அவர் கண்களோடு கண்கள் குத்திட்டு நிற்கின்றன.

“ஆஹா! ஆஹா! எவ்வளவு தெய்வீகமான அழகிய நீண்ட கண்கள். செந்தாமரை மணவாளனை போன்று அல்லவா இருக்கிறார். இவர் புல்லாங்குழல் ஊதும் கண்ணனா? அல்லது வில் ஏந்தும் ராமச்சந்திர பிரபுவா? நீ தரிசனம் தர வந்திருக்கிறாயா? என்று பலவாறு எண்ணிக் கொண்டே, உலகை மறந்து, தன்னையும் மறந்தார்.

துளசிதாசர், கையில் குழைத்து வைத்திருந்த கோபி சந்தனத்தை, தன் மோதிர விரலால் எடுத்து, “நானே திலகம் இட்டுக் கொள்கிறேன்’’ என்று தன்னுடைய நெற்றியில் விட்டுக் கொண்டார். துளசிதாசரின் நெற்றியிலும் கோபி திலகத்தை வைத்தார். பின்பு, தன்னுடன் வந்த பொன்னிற மேனியனுக்கும் வைத்தார். அந்த சமயத்தில், கோடி சந்திரனின் பிரகாசம் எப்படி இருக்குமோ, அதுபோல, உலகெங்கும் பிரகாசித்து, குளிர்ச்சியும் அழகும் நிரம்பி வழிந்தன.

அருகே ஒரு மரம் இருந்தது, அந்த மரத்திலே அமர்ந்திருந்த கிளி ஒன்று “ஆஹா! என்ன அற் புதக் காட்சி, ஸ்ரீராமபிரான் துளசிதாசருக்கு கோபி சந்தனத்தை இடுகின்றார். வாருங்கள்.. வாருங்கள்… அந்த அற்புத காட்சியை காண வாருங்கள்’’ என்று தன்னுடைய கிள்ளைமொழியிலேயே கொஞ்சியது.துளசிதாசன் மெய்மறந்து போய்விடுகின்றார். எவ்வளவு அழகான இளைஞன். அவருடைய கண்களிலே ஜொலிக்கும் தேஜஸ் ஒளியை தாங்க முடியவில்லை, துளசிதாசருக்கு கண்களை ஒரு நிமிடம் மூடினார். தனக்குள் இவர்தான் ராமபிரானா? என்று அவருடைய மனது துடிக்கின்றது. துளசிதாசரின் உள்ளுணர்வு, வந்தது ராமபிரான்தான் என்று உறுதி செய்தது.

“ராமா! நீ எனக்கு எப்படி காட்சி தருவாய் என்று நான் துடித்துக் கொண்டிருந்த சமயத்தில், இவ்வளவு அழகாக என் முன்னே தோன்றினாய். அட..அட.. என்னருகே அமர்ந்து எனக்கும் நீ கோபிசந்தனம் இட்டுவிட்டாயே! கருணைக் கடலே பரந்தாமா!. என்னுடைய ஜென்ம சாபம் நீங்கியது’’ என்று உள்ளத்தில் சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம் ராமனைக் கண்ட மனம் மகிழ்ச்சியளிக்க அப்படியே மிதந்தார். உடலானது, மண்ணின் மேலே சற்று உயர்ந்தது. அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். அப்பொழுது அவர் விரும்பியபடியே காட்சி கொடுக்க, ராம லட்சுமண சீதாதேவியோடு அவர் மனக் கண் முன் தோன்றுவது போல, ஒரு உணர்வு பெற்றார். அடுத்த கணம் கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே ராமபிரான் அதே உருவத்தில் நின்றிருந்தார். அவருடைய திருவடியில் வணங்கினார்.

அதன் பின்பு, ராமபிரானையே நினைத்துக் கொண்டிருந்த துளசிதாசர், மீண்டும் ராமபிரானையும், சீதையையும் தேட ஆரம்பித்தார். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்கு பாலம் அமைப்பதற்காக, ராமேஸ்வரத்தில் ஆத்ம லிங்கத்தை வைத்து பூஜை செய்தார் ராமர். அந்த இடத்திற்கு சென்று புனித யாத்திரை சென்றார் துளசிதாசர். ராமேஸ்வர கோயிலில் எம்பெருமானுடைய அழகையும், அந்த கடல் அழகையும், சுவாமி ராமநாதன் விக்கிரகத்தையும், லிங்க தரிசனத்தையும் கண்டு மகிழ்ந்தார்.

அங்கேயும் விடாது ராமநாமத்தை கூறிக் கொண்டே இருந்தார். அந்த சமயத்தில், அங்கு ராமாயண கதை கதாகாலட்சேபம் நடைபெற்று கொண்டு இருந்தது. அங்கே அமர்ந்து கதாகாலட்சேபத்தை கேட்டுக்கொண்டிருந்தார் துளசிதாசர். அந்த சந்தர்ப்பத்தில், அவருடைய உள்ளத்தில் ராம கவிகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி, துளசிதாசரின் உள்ளத்தை உற்சாகப்படுத்தியது.உடனே அங்கே இருந்து அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். அப்பொழுது அவருடைய உள்ளத்திலே ஒன்று தோன்றியது.

“ஆஹா.. ராமா.. உன்னையே நினைத்து இருக்கும் இந்த இதயத்தில் உனக்காக ஒரு நூல் இயற்ற வேண்டுமே’’ என்று அவர் மனசில் பட்டது. அயோத்திக்கு வந்தார். அங்கேயே தங்கினார். அங்கிருந்து, ஸ்ரீராம நவமி நன்னாளில், “ராம மானச’’ சரிதத்தை இயற்ற தொடங்கினார். இந்த நூல் எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் இருபத்தி ஆறு நாட்கள் ஆயின. இதைத் துவங்கிய நாளோ “ஸ்ரீராம நவமி’’. சீதாதேவிக்கு உரிய சுயவரத்தின் ஆண்டு நாளில் இதை முடித்தார். மகிழ்ச்சியாக இந்த நூலை எழுதி பாமர மக்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவந்தார். இவருடைய நிலைகளை எல்லாம் அறிந்த மக்கள், இவரை ராமபிரானினுடைய தூதனாக எண்ணி பக்தி செலுத்தினர்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post ராமபிரானைக் கண்ட துளசிதாசர்! appeared first on Dinakaran.

Tags : Tulsidasa ,Kunkum ,Mandakini river ,Ramanam ,Tulsidasar ,
× RELATED குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ‘மான்டசரி’ கல்வி!